இலங்கை அரசியலில் முஸ்லிம் பெண்கள்

0 509

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

சென்­ற­வாரம் “அர­சியல் களத்தில் முஸ்லிம் பெண்கள்: காலத்தின் கட்­டாயம்” என்ற தலைப்பில் இப்­பத்­தி­ரி­கையில் ஒரு கட்­டு­ரையை வெளி­யிட்டேன். அதன் இரண்­டா­வது பாக­மாக இலங்­கையின் இன்­றைய அர­சியல் களத்தை மைய­மாக வைத்து அதில் முஸ்லிம் பெண்­களின் பங்­க­ளிப்­பி­னது அவ­சி­யத்­தைப்­பற்­றியும் அதற்­கான தடை­க­ளைப்­பற்­றியும் அத்­த­டை­க­ளையும் மீறி எடுக்­கப்­படும் சில முயற்­சி­க­ளைப்­பற்­றியும் சில கருத்­துக்­களை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்ள விரும்­பு­கிறேன்.

உல­கத்­தி­லேயே முத­லா­வது பெண் பிர­த­மரை தெரி­வு­செய்த நாடென இலங்கை புகழ்­பெற்­றி­ருந்தும் இன்­றைய 225 அங்­கத்­த­வர்­களைக் கொண்ட நாடா­ளு­மன்­றத்தில் ஆக 5.3 சத­வீ­த­மா­னோரே அல்­லது 12 பெண்கள் மட்­டுமே அங்­கத்­த­வர்­க­ளாக இருக்­கின்­றனர். மொத்தச் சனத்­தொ­கையில் 52 சத­வீ­த­மா­கவும் வாக்­காளர் தொகையில் 56 சத­வீ­த­மா­கவும் பெண்கள் இருந்தும் அவர்­களின் பிர­தி­நி­தித்­துவம் ஏன் இவ்­வ­ளவு குறை­வாக இருக்­கின்­ற­தென்­பது ஆய்­வுக்­கு­ரிய ஒரு விடயம். இந்த நிலையில் முஸ்லிம் பெண்­களின் பிர­தி­நி­தித்­துவம் மருந்­துக்­கேனும் இல்­லா­தி­ருப்­பதில் என்ன ஆச்­ச­ரியம்? இந்த அவலம் அவ­சியம் மாற வேண்டும்.

இன்று முஸ்லிம் பெண்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­களும் சவால்­களும் அனந்தம். அதற்­கொரு சிறந்த உதா­ர­ணந்தான் முஸ்லிம் திரு­மண விவா­க­ரத்துச் சட்­டத்தைத் திருத்­து­வ­தற்குக் காணப்­படும் தடைகள். பத்­தி­ரி­கை­க­ளிலே வெளி­வரும் கட்­டு­ரை­களும், கண்­ட­னங்­களும், பகி­ரங்கப் பேச்­சு­களும், மக­ஜர்­களும், மகா­நா­டு­களும் அந்த அடிமைச் சாச­னத்தை நீக்­கு­வ­தற்குப் பரி­கா­ர­மா­க­மாட்டா. அர­சியல் ஆதிக்கம் ஆண்­வர்க்­கத்தின் கைக­ளிலே சிக்­கி­யுள்­ள­வ­ரையும் அந்த ஆண்­வர்க்கம் முல்­லாக்­களின் செல்­வாக்­கி­னுக்குள் அடை­பட்­டுக் கிடக்­கும் வ­ரையும் பெண்­களின் இனப்­போ­ராட்­டமும் வெற்­றி­பெறப் போவ­தில்லை. ஆகவே அர­சி­ய­லுக்குள் முஸ்லிம் பெண்கள் அவ­சியம் காலடி வைக்­க­வேண்டும். அதற்­கான வழி என்ன?

இலங்­கையின் வர­லாற்றில் முதன்­மு­த­லாக அர­சி­யலில் நுழைந்த முஸ்லிம் பெண் ஆயிஷா றவூப். ஆனால் அவர் நாடா­ளு­மன்றத் தேர்­தலில் கள­மி­றங்­காது கொழும்பு மாநகர் சபை அர­சி­ய­லி­லேதான் குதித்தார். அதுவே ஒரு சாதனை என்­றுதான் கூற­வேண்டும். அவ­ருக்குப் பிறகு நாடா­ளு­மன்­றத்­துக்குள் நுழைந்­தவர் பேரியல் அஷ்ரப். அவர் தன் கணவன் குண்­டு­வெ­டிப்­பினால் மர­ணித்­தபின் அவர்மேல் இருந்த அனு­தா­பத்­தினால் அவ­ரது தேர்தல் தொகுதி மக்­களின் ஆத­ர­வுடன் நாடா­ளு­மன்­றத்­­துக்குள் பிர­வே­சித்­தவர். ஆனாலும் அந்த அனு­தா­பத்தை முத­லாகக் கொண்டு அவரால் முஸ்லிம் பெண்­க­ளுக்­கான அர­சியல் அணி­யொன்றை கட்­டி­யெ­ழுப்பத் தவ­றி­விட்டார். ஆதலால் இன்­றைய நிலையில் முஸ்லிம் பெண்­க­ளி­டையே கல்வி ஆர்­வமும், எழுத்து வன்­மையும், பேச்சுத் திறனும், உலக விவ­கா­ரங்கள் பற்­றிய ஒரு விழிப்­புர்­ணர்வும் ஏற்­பட்­டுள்­ள­போதும் அவற்­றை­யெல்லாம் முத­லீ­டு­க­ளா­கக்­கொண்டு அர­சி­யலில் கால்­ப­திக்கத் தயங்­கு­வது ஆச்­ச­ரி­ய­மாகத் தெரி­ய­வில்­லையா? எனினும் அதற்­கொரு முக்­கி­ய­மான காரணம் உண்டு. அதுதான் முல்லா இஸ்­லாமும் அதன் ஆதிக்­கமும்.

முதலில் ஒரு சந்­தே­கத்தை நீக்­க­வேண்­டி­யுள்­ளது. நான் முல்லா இல்லாம் என்றும் அதன் பாது­கா­வ­லர்­களை முல்­லாக்­க­ளென்றும் பல கட்­டு­ரை­களில் குறிப்­பிட்டு வந்­துள்ளேன். அதனால் இஸ்­லாத்­தையும் அதன் தத்­து­வங்­க­ளையும், திரு­ம­றையின் உள்­ள­டக்­கத்­தையும், நபி­பெ­ரு­மா­னாரின் போத­னை­க­ளையும், செயல்­க­ளையும், மெய்­ய­றி­வு­கொண்டு யதார்த்­த­பூர்­வ­மாக விளங்கி ஆராய்ந்து அறி­வு­பெற்ற எத்­த­னையோ மார்க்க அறி­ஞர்கள் என்மேல் சின­முற்­றி­ருக்­கலாம். ஆனால் நான் கூறும் முல்லா இஸ்­லாமும் முல்­லாக்­களும் அவர்­களை உள்­ள­டக்­க­வில்லை. உண்­மை­யி­லேயே அந்தப் பதங்­களை அல்­லாமா இக்­பாலின் கவி­தை­க­ளையும் கட்­டு­ரை­க­ளையும் படித்­த­பின்­புதான் நான் விளங்கிக் கொண்டேன். ஏதோ ஒரு மத­ர­சா­விலே மதக்­கல்­வி­கற்று வெளி­யே­றிய ஒரே தகை­மையை வைத்­துக்­கொண்டு குர்­ஆ­னையும் பெரு­மானார் வாய்­மொ­ழி­க­ளையும் ஒரு வாக­டத்­தைப்­போல மன­னம்­செய்து அவற்றின் நேர­டி­யான கருத்­துக்­களை சாதா­ரண மக்­க­ளிடம் போதிக்கும் இந்தப் புரோ­கிதர் கூட்­டத்­தி­ன­ரையே நான் முல்­லாக்­க­ளென்றும் அவர்கள் போதிக்கும் இஸ்­லாத்­தையே முல்லா இஸ்லாம் என்றும் அழைக்­கிறேன். இவர்கள் வர­லாற்­றியல் அறிவோ சமூ­க­வியல் அறிவோ அர­ச­றி­வியல் அறிவோ உல­க­மாற்­றங்­களை யதார்த்­த­பூர்­வ­மாக அறிந்­து­ணரும் திறனோ இல்­லாத கிணற்றுத் தவ­ளைகள். ஆனால் அவர்­க­ளுக்கு மார்க்கக் கிரந்­தங்கள் மனப்­பாடம். அவர்­க­ளு­டைய அந்த வாக­டத்தில் ஆண்­களே பெண்­களின் காவ­லர்­களாம். ஆதலால் பெண்­ணினம் சுதந்­தி­ர­மற்ற ஒரு பொம்மை என்­றா­கி­றது. இந்த இஸ்லாம் தகர்த்­தெ­றி­யப்­பட வேண்டும். இப்­போது அது தகர்த்­தெ­றி­யப்­ப­டு­கின்­றது. ஈரா­னிலும் ஆப்­கா­னிஸ்­தா­னிலும் இன்று நடை­பெறும் போராட்டம் இதுதான். முகம்­மது இப்னு அப்­துல்லா என்ற ஒரு சாதா­ரண மனிதர் கதீஜா என்ற ஒரு பெண்ணின் துணை இல்­லாமல் இறை­வனே அவரின் தலையிற் சுமத்­திய இஸ்லாம் என்ற கட்­ட­ளையை அன்­றைய அரே­பி­ய­ரி­டையே செயற்­ப­டுத்தி வெற்­றி­கண்­டி­ருக்க முடி­யுமா? அந்தப் பெண் ஆணுக்கு அரணாய் இருந்­தாரா அல்­லது அந்த ஆண் கதீ­ஜா­வுக்கு அரணாய் இருந்­தாரா? கவிஞர் அப்துல் காதர் லெப்பை கன­வு­கண்ட இலட்­சியப் பெண் இன்­றைய முஸ்லிம் சமு­தா­யத்தில் உரு­வா­கிக்­கொண்டு வரு­கி­றது. அந்தப் பெண்கள் ஏன் அர­சி­யலில் இறங்கக் கூடாது?

இன்­றைய இலங்கை பல­கோ­ணங்­க­ளிலும் சிதைந்து கிடக்­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பு, மனித உரி­மைகள், மக்­க­ளது ஜன­நா­யக சுதந்­திரம், பொரு­ளா­தாரம், சமூக உற­வுகள், நாட்டின் இறைமை, என்­ற­வாறு அச்­சி­தை­வு­களை அடுக்­கிக்­கொண்டே போகலாம். சுருக்­க­மாகக் கூறு­வ­தானால் நாட்டின் அடிப்­படை அமைப்பே இந்தச் சீர­ழி­வு­க­ளுக்கு முக்­கிய காரணம். அத­னா­லேதான் 2022 இல் எழுந்த இளைஞர் போராட்டம் அமைப்­பையே மாற்று என்ற கோரிக்­கையை முன்­வைத்துப் போரா­டி­யது. அந்த அமைப்பின் அடித்­தளம் இன­வாதம். அதிலும் குறிப்­பாகச் சொன்னால் சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம். அந்தப் பேரி­ன­வாதம் மற்­றைய இனங்­க­ளி­டை­யேயும் இன­வா­தத்தைத் தோற்­று­வித்­துள்­ளது. கடந்த எழு­பது ஆண்­டு­க­ளாக இந்த நாட்டை ஆட்­டிப்­ப­டைத்து இன்று அதன் பொரு­ளா­தா­ரத்­தையே திவா­லாக்கி மூளை­சா­லி­க­ளையும் திற­னா­ளி­க­ளையும் முயற்­சி­யா­ளர்­க­ளையும் நாட்­டை­விட்டே வெளி­யே­றச்­செய்து ஒரு பரி­தா­ப­நி­லைக்கு நாட்டை கொண்­டு­வந்­துள்­ளது இன­வாதம். எனவே அந்த அமைப்பை தகர்த்து வீசாமல் நாட்டை மீண்டும் கட்­டி­யெ­ழுப்ப நினைப்­பது ஒரு பய­னற்ற செயல். ஆனால் மக்கள் தேசிய சக்­தியை தவிர்த்து இப்­போ­துள்ள ஏனைய அர­சியற் கட்­சிகள் யாவும் அந்த அமைப்பை அகற்­று­வ­தற்குத் தயா­ரில்லை. இதுதான் இன்று காணப்­படும் அர­சியற் களத்தின் தோற்றம். இந்தக் களத்தில் முஸ்­லிம்­களின் நிலை என்ன?

முஸ்லிம் சமு­கத்தின் அர­சியல் சூத்­தி­ரத்தை முல்­லாக்­களே வகுத்­துள்­ளனர். அதன்­படி இக­லோக வாழ்வு அநிச்­சயம், பர­லோக வாழ்வே நிச்­சயம். ஆகவே முஸ்­லிம்கள் இவ்­வு­ல­கத்தில் வெறும் பய­ணிகள் மட்­டுமே. தமது ஜீவ­னோ­பா­யத்தை தேடிக்­கொண்டும் பர­லோக வாழ்வில் வெற்­றி­பெ­று­வ­தற்­கான அமல்­களைச் செய்து கொண்டும் வாழ்­வதே முஸ்­லிம்­களின் அர­சி­ய­லாக இருக்க வேண்டும் என்­பதே முல்­லாக்­களின் அர­சியற் சூத்­திரம். இராமன் ஆண்­டா­லென்ன இரா­வணன் ஆண்­டா­லென்ன முஸ்­லிம்­க­ளுக்குத் தேவை ஆட்­சி­யா­ளர்­களின் தயவு மட்­டுமே. சுதந்­திரம் கிடைத்து ஜன­நா­யக ஆட்­சி­மு­றையும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு இன்­று­வரை அந்தச் சூத்­தி­ரமே நடை­மு­றையில் இருக்­கி­றது. அத­னைத்தான் இன்­றுள்ள முஸ்லிம் கட்­சி­களும் செயல்­ப­டுத்­து­கின்­றன. நாடு நலன் பெறாமல் முஸ்­லிம்கள் நலன்­பெற முடி­யா­தென்­பது இக்­கட்­சி­களின் அர­சியல் வாக­டத்தில் இல்லை. என­வேதான் முஸ்­லிம்­க­ளுக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று மேடை­களில் கர்­ஜிக்­கின்ற இந்தத் தலை­வர்கள் நாட்­டுக்கு என்ன வேண்டும் என்­ப­து­பற்றி எது­வுமே பேசு­வ­தில்லை. இதில் வேடிக்கை என்­ன­வென்றால் மாறி மாறி ஆட்சி அமைக்கும் அர­சியல் கட்­சி­க­ளுக்கும் முஸ்­லிம்­களின் அர­சியல் மந்­திரம் என்­ன­வென்­பது நன்கு விளங்கும். குலைக்­கிற நாய்க்கு முள்ளுப் போடு­கி­ற­மா­திரி இவர்­க­ளுக்கு ஓரி­ரண்டு சலு­கை­களை வழங்­கி­விட்டால் அவர்­களின் ஆத­ரவு கிடைக்கும் என்­பதை அந்தக் கட்­சிகள் நன்­கு­ணரும். இந்த வியா­பார அர­சி­ய­லையும் அது இனி­மேலும் பல­ன­ளிக்­காது என்­ப­தையும் வேறு கட்­டு­ரை­களில் நான் விளக்­கி­யுள்ளேன். அது­மட்­டு­மல்ல நாட்டின் அர­சியல் அமைப்­பையே மாற்ற வேண்­டு­மென்ற நிலை ஏற்­பட்­ட­பின்பு இந்த அர­சி­ய­லுக்கு இட­மேது? அந்த மாற்­றத்­தி­லேதான் முஸ்லிம் பெண்கள் பங்­கு­கொள்ள வேண்­டி­யுள்­ளது.

முஸ்லிம் பெண்கள் தமக்­குள்ளே ஆயிரம் சங்­கங்­களை அமைக்­கலாம். ஆனால் அவை­யெல்லாம் ஓர் அர­சியல் குடை­யின்கீழ் திர­ளும்­வரை எதையும் சாதிக்க முடி­யாது. அவ்­வா­றான குடை­யொன்று விரிக்­கப்­ப­டு­வதை இப்போது உணரமுடிகிறது. தேசிய மக்கள் சக்தி என்ற கட்சிமட்டும்தான் இலங்கை அரசியல் கலாச்சாரத்தின் அடிப்படையையே மாற்றவேண்டும் என்றும், புதிய ஓர் அரசியல் அமைப்பு மதச்சார்பற்றதாக ஜனநாயக விழுமியங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட வேண்டுமென்றும், திறந்த பொருளாதாரக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் கூறுகிறது. இவை முற்போக்கான கொள்கைகள் என்பதிலே சந்தேகமில்லை.

அக்கட்சியின் முஸ்லிம் கிளையாக சமூக நீதிக் கட்சி என்ற ஒன்று அமைக்கப்பட்டு அதில் மகளிர் அணியொன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடக்கிறது. இதுவரை முஸ்லிம் கட்சிகளே செய்யாத ஒரு முயற்சியாக இது தெரிகிறது. எனவே இவ்வாறான ஒரு குடையின்கீழ் முஸ்லிம் மகளிர் அணிதிரண்டு அரசியலில் ஈடுபடவேண்டியது காலத்தின் கட்டாயம். பிற்போக்குவாதக் கட்சிகளின் சலுகைகளை உதறித்தள்ளி முற்போக்குவாத அணிகளில் இணைந்து நாட்டின் பிரஜைகள் என்றவகையில் உரிமைகேட்டுப் போராட முஸ்லிம் மகளிர் முன்வரவேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.