நீதித்துறையை தலைகுனியச் செய்யும் நிகழ்வுகள்

0 295

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறி பதவியை இராஜினாமாச் செய்துள்ளதுடன் நாட்டை விட்டும் வெளியேறியுள்ள சம்பவமானது நாட்டில் பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.

குருந்தூர்மலை விவகாரத்தில் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக வழங்கிய தீர்ப்புகள் காரணமாக அவர் பாரிய எதிர்ப்புகளைச் சம்பாதித்திருந்தார். பெளத்த பிக்குகள் மாத்திரமன்றி பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் நீதிபதியை பாராளுமன்றத்தில் வைத்து பகிரங்கமாக விமர்சித்திருந்தார். சிங்கள பெளத்த நாட்டில் தமிழ் நீதிபதியொருவர் இவ்வாறான தீர்ப்புகளை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந் நிலையில் தன்னை சிலர் பின்தொடர்வதாகவும் தனக்கு பல்வேறு தரப்புகளிடமிருந்தும் அச்சுறுத்தல்கள் வருவதாகவும் குறிப்பிட்டு நீதிபதி சரவணராஜா தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். அது மாத்திரமன்றி இது விடயத்தில் சட்டமா அதிபரிடமிருந்து தனக்கு அழுத்தங்கள் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நீதித்துறை எந்தளவு தூரம் அரசியல் அழுத்தங்களுக்குட்பட்டுள்ளது என்பதையும் தனது சுயாதீனத்தை அத்துறை இழந்துவிட்டது என்பதையுமே இச் சம்பவம் உணர்த்தி நிற்கிறது.

நீதிபதியின் இந்த இராஜினாமா இலங்கை மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள சுயாதீன நீதித்துறையின் மீது விழுந்த பலத்த அடியாகும். கடந்த காலங்களில் பல்வேறு சம்பவங்கள் பதிவாகியிருந்த போதிலும் நீதிபதியொருவர் பகிரங்கமாக தனது இராஜினாமாக் கடிதத்தில் தனக்கு அழுத்தங்கள் வழங்கப்பட்டமை மற்றும் உயிரச்சுறுத்தல் காரணமாக இப் பதவியை இராஜினாமாச் செய்வதாகக் கூறி நாட்டை விட்டே வெளியேறியிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

அண்மையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தில் தோன்றிய ஆசாத் மெளலானா, ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து பிள்ளையானை விடுவிப்பதற்காக அப்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, சட்டமா அதிபர் ஊடாப மட்டக்களப்பு நீதிவானை இடமாற்றம் செய்தார் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனை பிள்ளையான் இன்று வரை மறுத்து வருகிறார். எனினும் இன்று இந்தக் குற்றச்சாட்டை நிரூபிப்பது போலவே முல்லைத்தீவு மாவட்ட நீதிவானின் இராஜினாமா அமைந்துள்ளது.

இந்த விவகாரம் சர்வதேச நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. மனித உரிமை அமைப்புகள் இதனைக் கண்டித்துள்ளன. இது தொடர்பில் சுதந்திர விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறியுமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீதிவானுக்கு நடந்த அநீதியைக் கண்டித்து போராட்டங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி வடக்கு கிழக்கிலுள்ள சட்டத்தரணிகளும் நேற்று பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் கடந்த சில தினங்களாக பேசப்பட்டது. அரசியல் தலைவர்கள் பலரும் இதனைக் கண்டித்துள்ளதுடன் நீதித்துறையில் நிலவும் அரசியல் தலையீடுகளையும் கேள்விக்குட்படுத்தியுள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களம் பல்வேறு வழக்குகளில் ஆட்சியில் உள்ளவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக கடந்த காலங்களில் பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். குறிப்பாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுமென்றே வழக்கை இழுத்தடித்து வருவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் பாராளுமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேபோன்று கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பாரிய அரசியல் தலையீடுகள் நிலவியதை தான் தனது கைது விவகாரத்தில் உணர்ந்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் நேற்று பாராளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு இன்று நாட்டின் நீதித்துறை மீது பலரும் விரல்நீட்ட ஆரம்பித்துள்ளனர். நாட்டின் எல்லாத்துறைகளிலும் நம்பிக்கை இழந்துவிட்ட மக்கள் இறுதியாக நம்பியிருப்பது நீதித்துறையை மட்டும்தான். இன்று அதுவும் அரசியல்வாதிகளின் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிவிட்டதா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளமை கவலைக்குரியதே.

Leave A Reply

Your email address will not be published.