ஏ.ஆர்.ஏ.பரீல்
உயர் இரத்த அழுத்தம் காரணமாக தனது இல்லத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த டாக்டர் பாஹிமா தான் சேவையாற்றும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 2 மாத குழந்தைக்கு அவசர சிகிச்சைக்காக சென்று கடமையாற்றிய நிலையில் உயர் இரத்த அழுத்தம் மேலும் அதிகரித்த நிலையில் அவரது தலையில் நரம்பொன்று வெடித்து இரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் காலமானார்.
இந்தச் துயரச் சம்பவம் கண்டி தேசிய வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “ டாக்டர் பாஹிமா உயர் இரத்த அழுத்தம் காரணமாக தனது வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது, கண்டி தேசிய வைத்தியசாலையில் 4 ஆம் இலக்க வார்ட்டில் தங்கி சிகிச்சைபெற்று வந்த இரண்டுமாத குழந்தையொன்றின் உடல் நீல நிறமாக மாறி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் பாஹிமா தனது உயர் இரத்த அழுத்த நிலைமையையும் பொருட்படுத்தாது உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். அங்கு அவசர சிகிச்சையை மேற்கொண்டு குழந்தையை அபாய நிலையிலிருந்தும் காப்பாற்றியுள்ளார் பாஹிமா சஹப்தீன்.
இந்நிலையில் டாக்டரின் உயர் இரத்த அழுத்தம் மேலும் அதிகரித்து பாதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதி தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் 10 தினங்களின் பின்பு அவர் காலமாகியுள்ளார்.
அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட முன்பு அவரது இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டபோது அது 200 க்கும் அதிகமாக இருந்ததாக கண்டி தேசிய வைத்தியசாலை டாக்டர் ஜனக ஜயசூரிய கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கடந்த வார இறுதியில் இச்சோக சம்பவம் இடம் பெற்றுள்ளது. டாக்டர் பாஹிமா இறக்கும்போது அவரது வயது 52. அதிகரித்த உயர் இரத்த அழுத்தம் காரணமாக தலையில் நரம்பொன்று வெடித்ததனால் இரத்தம் வெளியேறி இம்மரணம் சம்பவித்துள்ளதாக பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ஜனக ஜயசூரிய தெரிவித்தார்.
ஓய்வில் இருக்க வேண்டிய டொக்டர் ஒரு குழந்தையை காப்பாற்றுவதற்காக கடுமையாக பணியாற்றியதால் அவரது இரத்த அழுத்தம் அதிகரித்து இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இவர் தனது சேவைக்காலத்தில் இரவு பகல் பாராது நோயாளர்களுக்காக பணிபுரிந்தவர் என்றும் டாக்டர் ஜனக ஜயசூரிய தெரிவித்தார்.
டாக்டர் பாஹிமாவின் கணவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராவார். அத்தோடு டாக்டரின் மூத்த சகோதரியும் ஒரு டாக்டராவார். இவரின் மூத்த மகள் அண்மையில் வெளிவந்த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின்படி வைத்தியபீடத்துக்கு தெரிவாகியுள்ளார். மகன் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து வருகிறார்.
டாக்டர் பாஹிமா கண்டி அனிவத்தையில் வசித்து வந்தவராவார்.
நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான வைத்தியர்கள் நாட்டிலிருந்தும் வெளியேறி வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்துகொண்டிருக்கும் நிலையில் டாக்டர் பாஹிமா ஓர் உதாரண பெண்மணி ஆவார்.
இவரது இழப்பு கண்டி வைத்தியசாலைக்கு மாத்திரமல்ல முழு சமூகத்துக்கும் பேரிழப்பாகும்.