சஹ்ரான் குழுவுக்கும் உளவுப் பிரிவுக்கும் மறுக்க முடியாதளவு நெருங்கிய தொடர்பு
ஆதாரங்கள் உள்ளன என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் குழுவினருக்கும் இராணுவ உளவுப் பிரிவினருக்கும் மறுக்கமுடியாத அளவுக்கு நெருங்கிய தொடர்பிருந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
செனல்–4 வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஆவணப்படம் பற்றி பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் “சஹ்ரான் குழுவினருக்கும் இராணுவ உளவுப்பிரிவினருக்கும் இடையில் தொடர்புகள் இருந்துள்ளமைக்கான சான்றுகள், ஆதாரங்கள் உள்ளன. உளவுப்பிரிவின் அதிகாரியான இன்ஸ்பெக்டர் ஒருவர் சஹ்ரான் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தொடர்பு கொள்வதற்கு அவரது காதலியின் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியுள்ளார். இந்த தகவல்களை எப்பிஐ (FBI) வழங்கியது. ஆனால் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படவில்லை.
தாஜ் ஹோட்டலில் குண்டுத்தாக்குதலை நடத்திச் சென்ற பயங்கரவாதி தொலைபேசி அழைப்பொன்று கிடைத்ததன் பின்பு அங்கிருந்து சென்று தெஹிவளையில் உளவுப் பிரிவு அதிகாரியொருவரைச் சந்தித்துள்ளார். இது தொடர்பிலான விசாரணையை வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்தனர் என்றாலும் உளவுப் பிரிவினர் இவ்விசாரணைக்கு இடையூறு செய்தனர்.
மேலும் வவுணதீவில் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கொலை செய்யப்பட்டபோது இராணுவ உளவுப்பிரிவு அவர்களது கொலைக்கு எல்ரீரீஈ யினரே பொறுப்பு என தொடராக கூறி வந்தனர். இதனை நிரூபிப்பதற்காக திசை திருப்புவதற்காக எல்ரிரிஈ தற்கொலை அங்கியொன்றினையும் அங்கு வைத்தனர்.
அத்தோடு மாவனெல்லையில் புத்தர் சிலைகள் சிதைக்கப்பட்டபோது பொலிஸார் சாதிக் மற்றும் ஹக் என்போரை கைது செய்து விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து வந்தனர். இதற்கு இராணுவ அதிகாரிகள் இரு தடவைகள் இடையூறு செய்தனர். இவ்வாறான செயற்பாடுகள் இராணுவ உளவுப்பிரிவினருக்கும் சஹ்ரான் குழுவினருக்குமிடையில் தொடர்புகள் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன.
சிஐடி விசாரணையாளர்கள் சொனிக் என்று அறியப்படும் ஒருவர் பயன்படுத்திய சஹ்ரானுடன் தொடர்பு கொண்ட சிம் அட்டையை கண்டெடுத்தனர். குறிப்பிட்ட சிம் அட்டையின் உரிமையாளரைக் கண்டு பிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
நகர போக்குவரத்து பொலிஸைச் சேர்ந்த பெண் பொலிஸ் அதிகாரியொருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையின்போது பெண் பொலிஸ் அதிகாரி தான் கு-றிப்பிட்ட சிம் அட்டையைக் கொள்வனவு செய்ததை ஏற்றுக்கொண்டார். அந்த சிம் அட்டையை பின்பு தனது நண்பராக அரச உளவுப்பிரிவில் கடமையாற்றும் உதவி இன்ஸ்பெக்டர் பண்டார என்பவருக்கு வழங்கியதாக தெரிவித்தார். அந்த உதவி இன்ஸ்பெக்டரே தற்போது இன்ஸ்பெக்டர் பண்டார. ஐஸ்ஐஸ் பயங்கரவாத தாக்குதலுக்கு உரிமை கோரியது. இராணுவ உளவுப்பிரிவு சஹ்ரான் குழுவினருடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தது என சஜித் பிரேமதாச தெரிவித்தார். – Vidivelli