ஏ.ஆர்.ஏ.பரீல்
வெளிநாடுகளிலிருந்து குர்ஆன் மற்றும் இஸ்லாமிய இறக்குமதி நூல்களை அரசு விடுவிப்பதற்கு நீண்ட காலம் செல்கிறது. இதனால் முஸ்லிம் சமூகம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முறைப்பாடுகளை முன்வைத்ததுடன் இது தொடர்பில் பாராளுமன்ற அமர்வில் பேசுமாறும் வேண்டிக்கொண்டது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பன கலந்துரையாடலொன்று உலமா சபையின் தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்றது. அக்கலந்துரையாடலின் போதே உலமா சபை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மேற் குறிப்பிட்ட கோரிக்கையை முன்வைத்தது.
மேலும் அரபுக்கல்லுரி மத்ரஸா விவகாரங்களில் உளவுப்பிரிவினரின் தலையீடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இஸ்லாம் பாடநெறியில் சில பாடங்கள் நீக்கப்படுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் தங்களது பாராளுமன்ற உரையின்போது கவனத்தை ஈர்ப்பதாகத் தெரிவித்தனர்.
சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன், ஏ.எச்.எம்.பெளஸி, இஷாக் ரஹ்மான் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் அதன் பொதுச் செயலாளர் அர்கம் நூராமித் தலைமையிலான குழுவினர் பங்கு கொண்டனர். – Vidivelli