(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அண்மையில் அரசு வர்த்தமானியில் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் தற்போது அமுலிலுள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினை விட மிகக் கொடியதாகும். இந்த சட்ட மூலத்தை வன்மையாக எதிர்ப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.சுஹைர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் எம்.எம்.சுஹைர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ‘பயங்கரவாதம் தொடர்பான சட்ட மூலம் 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. இந்த சட்ட மூலத்துக்கு மக்கள் பாரிய எதிர்ப்பினை வெளியிட்டனர். இதனையடுத்து இந்தச் சட்டமூலம் கைவிடப்பட்டது.
இதனையடுத்து கடந்த மார்ச்மாதம் பயங்கரவாத தடுப்புச்சட்டம் சில திருத்தங்களுடன் கொண்டு வரப்பட்டது.இதற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சட்ட மூலத்தில் சில கொடிய விடயங்களை நீக்குவதாகக் கூறி திரும்பவும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் என்ற பெயரில் கடந்த 15 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.
இன்று நாடு அந்நிய முதலீடுகளை எதிர்பார்த்திருக்கிறது. மற்றும் ஏற்றுமதி, உல்லாசப் பயணத்துறை என்பவற்றை நம்பியிருக்கிறது. இந்நிலையில் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தைக் கொண்டு வந்தால் எமது நாட்டில் தொடர்ந்து பயங்கரவாதம் இருப்பதாகவே சர்வதேசம் கருதும்.
‘அரகலய’ போன்ற போராட்டங்களை தடுத்து நிறுத்துவதற்கும், சமூக ஊடகங்கள் உட்பட ஊடகங்களை ஒடுக்குவதற்கும் டயஸ்போரா மற்றும் முஸ்லிம் பயங்கரவாதம் என்பவற்றைத் தடுப்பதற்குமாகவே இச்சட்ட மூலம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இச்சட்ட மூலத்தின் மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரத்தினைக் கோரி போராட்டம் நடத்தினால் அப்போராட்டம் நாட்டின் சட்டத்தை சீர்குலைத்துள்ளதாகக் கூறி விவசாய போராட்டக்காரர்களின் தலைவரைக் கைது செய்து குறைந்தது ஒரு வருட காலம் சிறையில் அடைக்க முடியும்.
அமுலிலுள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டம் சர்வதேச ரீதியில் கொடிய சட்டம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இதைவிட கொடிய சட்டம் தற்ேபாது கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட மூலமாகும்.
நாடு கட்டியெழுப்பப்பட வேண்டியுள்ள இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான சட்டங்கள் சர்வதேசம் எம்மைத் தூரப்படுத்திவிடுவதற்குச் சாதகமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. – Vidivelli