93வது தேசிய தினத்தைக் கொண்டாடும் சவூதி அரேபியா

0 1,007

காலித் ரிஸ்வான்

வருடாந்தம் செப்டம்பர் 23 ஆம் திகதி, சவூதி அரேபிய இராச்சியம் தனது தேசிய தினத்தை கொண்டாடுகிறது.1932ஆம் ஆண்டு சவூதி அரேபிய இராச்சியத்தை அதன் மன்னர் அப்துல் அசீஸ் அல்சவுத் நிறுவியதை இந்த முக்கியமான நாள் நினைவுகூறுகிறது. சவூதி அரேபியாவின் தேசிய தினம் ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தின் அடையாளத்தை பிரதிபளிக்கின்ற, சவூதி மக்களால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்ற ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

இவ்வாண்டு சவூதியின் தேசிய தினம் “கனவு காண்போம், வெற்றிகொள்வோம்” என்ற வாசகத்தை மகுடமாகத் தாங்கி கொண்டாடப்படுகிறது. இந்த வாசகமானது சவூதியின் விஷன் 2030 திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற பல பாரிய திட்டங்களை செயற்படுத்துவதன் மூலம் சவூதி அடைந்திருக்கின்ற வெற்றிகள் மற்றும் அடைய இருக்கின்ற வெற்றிகளை பிரதிபளிக்க கூடிய வகையில் அமைந்திருக்கிறது.

93வது தேசிய தினத்தை கொண்டாடும் வகையில், தேசிய தினத்தின் அடையாள வடிவமைப்பாக ஒரு புகைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியா மக்களின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நனவாகவும் யதார்த்தமாகவும் மாறிய உயர் கனவுகளை இந்த வடிவமைப்பு பிரதிபலிக்கிறது. சவூதி விஷன் 2030 இன் கீழ் சவூதி அரசாங்கம் செயல்படுத்தி வரும் பாரிய திட்டங்களை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இவ் வடிவமைப்பு,சவூதியின் பல்வேறு நவீன திட்டங்களின் சின்னங்களால் சூழப்பட்டு நவீனத்தை நோக்கி முன்னேறும் இளைஞர்களைக் குறிக்கும் வகையில் ஒரு ஆணினதும் பெண்னினதும் உருவம் மையத்தில் வைக்கப்பட்டு இமையப் பெற்றிருக்கிறது.

சவூதி அரேபியாவின் தேசிய தினக் கொண்டாட்டங்கள் மக்கள் மத்தியிலான ஒற்றுமையை பரைசாற்றக் கூடியவையாக இருப்பதோடு சவூதி மக்கள் தங்கள் உயரந்த வரலாறு, விழுமியங்கள் மற்றும் அபிலாஷைகளை கொண்டாடுவதற்காக இந்நாளில் ஒரே நாடாக ஒன்று சேர்கின்றனர். மக்களின் வலிமை, தேசத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் தேசிய அடையாளத்தின் பெருமை ஆகியவை இந்த கொண்டாட்டங்களின் போது அவர்கள் காட்டும் ஒற்றுமையில் பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபியாவின் தேசிய தினம் நெருங்கும் போது, நாடு முழுவதும் எதிர்பார்ப்பு மற்றும் முன்னாயத்தங்கள் நிகழ்கின்றன. தெருக்கள் சவூதி கொடியால் அலங்கரிக்கப்பட்டு, மேலும் மக்கள் தங்கள் தேசிய நிறங்கள் பெருமையுடன் பிரதிபலிக்கும் வகையிலான அலங்காரங்களை மேற்கொள்கின்றனர். சவூதி மக்கள் தங்கள் தேசத்தின் கடந்த காலத்தைப் பற்றி சிந்தித்து, அதன் நிகழ்காலத்தைக் கொண்டாடி, பிரகாசமான எதிர்காலத்தைக் கற்பனை செய்வதால் இந்நாள் மகிழ்ச்சி நிறைந்ததாகவும், இப்பாரிய வளர்ச்சிக்காக அந்நாட்டுத் தலைமைக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது.

தேசிய தின கொண்டாட்டங்களில் சவூதியின் கலாச்சார பாரம்பரியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இராச்சியம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரை நீள்கின்ற ஒரு வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்நாடு இஸ்லாத்தின் பிறப்பிடமாகவும் மற்றும் இஸ்லாத்தின் இரண்டு புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவின் தாயகமுமாகும். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுகின்றன. பாரம்பரிய வாள் நடனமான அர்த்தா போன்ற நடனங்கள் மேலும் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் நாடுபூராகவும் நிகழ்த்தப்படுகின்றன. கண்காட்சிகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் இராச்சியத்தின் வரலாற்றுக் கலைப்பொருட்கள், பாரம்பரிய கைவினைப்பொருட்கள் மற்றும் உள்ளூர் உணவு வகைகள் சிறப்பாக காட்சிப் படுத்தப்படுகின்றன.

சவூதி அரேபியாவின் ஆயுதப் படைகள் தேசிய தினத்தில் பல்வேறு கண்காட்சி நடவடிக்கைகளை வருடாந்தம் ஏற்பாடு செய்கின்றன. இவ்வருடமும் நாடு  முழுவதும் பல பிராந்தியங்களில் வான்வழி மற்றும் கடல்வழி கண்காட்சி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இராச்சியத்தின் ரோயல் கடற்படையும் கடற்படை அணிவகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளுடன் இந் நிகழ்வுகளில் பங்கேற்கிறது.

தேசிய தினத்தை முன்னிட்டு பல முக்கிய நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றுள் மிக முக்கியமானதாக அல் உலா பிரதேசத்தில் அரங்கேற இருக்கின்ற AZIMUTH என்ற இசை நிகழ்ச்சி காணப்படுகிறது. மாலை முதல் விடியற்காலை வரை நடைபெறவிருக்கும் இந்த இசை விழா, உள்ளூர் மற்றும் பிராந்திய கலைஞர்கள் பலர் பங்கேற்க இருக்கின்றனர்.

தேசிய தினத்தை முன்னிட்டு, சவூதி அரேபியாவின் பொது பொழுதுபோக்கு ஆணையம் “Our Date 2030”, “Above the Clouds”, “Yes”, and “My Home is here” என்ற நான்கு சிறப்பு தீம் பாடல்களை வெளியிட்டுள்ளது. கடந்த சில தசாப்தங்களாக, உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சவூதி குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. இந்தக் கொண்டாட்டங்கள் இந்த சாதனைகளை வெளிப்படுத்தவும்,எதிர்காலத்திற்கான தேசத்தின் தூர நோக்கத்தை முன்னிலைப்படுத்தவும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

மேலும், சவுதி அரேபியாவின் தேசிய தினம் உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற சவூதி அரேபியாவின் புலம்பெயர் மக்களாலும் ஏனையவர்களாலும் கொண்டாடப்படுகிறது. இது மக்களிடையே பெருமையையும் ஒற்றுமை உணர்வையும் உருவாக்குகிறது. இம்மக்கள் தேசிய தினத்தை கொண்டாடுவதற்கான நிகழ்வுகள் மற்றும் ஏற்பாடுகளை அந்தந்த நாடுகளில் உள்ள சவூதி தூதரகங்கள் மற்றும் கலாச்சார நிறுவனங்கள் ஏற்பாடு செய்கின்றன.

இலங்கையிலும் கூட வழமை போல இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி அவர்களின் தலைமையின் கீழ், இலங்கையில் உள்ள சவூதி அரேபிய தூதரகம், ஒரு தேசிய தின கொண்டாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. செப்டம்பர் 25ஆம் திகதி நடைபெறவிருக்கும் இவ்விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

எனவே இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான வரலாற்று நெடுகிலும் நிலவிவருகின்ற நல்லுறவை பரைசாற்றும் விதமாக, இலங்கை மக்கள் சார்பாக அனைத்து உலக வாழ் சவூதி மக்களுக்கும் தேசிய தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.