அடுத்த பாபர் மசூதி குருந்தூர் மலையா?

0 966

-சபீர் மொஹமட்

இலங்­கையின் சமீப கால வர­லாற்றை எடுத்து நோக்­கினால் தொல்­பொருள் என்­பது பெரும்­பான்மை மற்றும் சிறு­பான்மை மக்­க­ளி­டையே பிரச்­சி­னை­களை தோற்­று­விக்கக் கூடிய ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறி­யுள்­ளது. அதிலே குருந்தூர் விகாரை விவகாரம் தற்­போது குமு­றிக்­கொண்­டுள்ள ஒரு எரி­ம­லை­யாக உரு­வெ­டுத்­துள்­ளது.

முல்­லைத்­தீவு புளி­யங்­குளம் வீதி­யி­லி­ருந்து வலது புற­மாக 26 கிலோ­மீட்டர் தூரம் பயணம் செய்தால் இந்த சர்ச்­சைக்­கு­ரிய குருந்தூர் மலை பிர­தே­சத்தை அடை­யலாம். இங்கே காணப்­ப­டு­கின்ற குருந்தூர் விகா­ரையின் வர­லாற்றை நோக்­கினால் மகா­வம்­சத்தின் 33 மற்றும் 34 ஆம் அத்­தி­யா­யங்­க­ளுக்கு அமைய கி.பி.100- –103க்கு இடைப்­பட்ட காலத்தில் சத்­தா­திஸ்ஸ மன்­னனின் மூன்­றா­வது மக­னான ‘கல்­லாட நாக’ மன்னன் ‘குருக்ன பாசகா’ என்ற பெயரில் இங்கே ஒரு விகா­ரையை கட்­டி­ய­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதன்­பின்னர், 571-– 604 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் முதலாம் அக்போ மன்னன் இந்த விகா­ரையை புனர்­நிர்­மாணம் செய்­த­தாக மகாவம்­சத்தின் 41வது அத்­தி­யாயம் குறிப்­பி­டு­கின்­றது. அத்­துடன் புத்த பெருமான் தனது இரண்­டா­வது இலங்கை பய­ணத்தின் போது இந்த இடத்­திற்கு விஜயம் செய்­த­தாக புராண கதை­களும் உள்­ளன. மேலும், இந்­நாட்டில் உள்ள தொல்­பொருள் இடங்கள் குறித்து 1905 இல் எச்.சி.ப. பெல் என்ற இலங்­கையின் முத­லா­வது தொல்­பொருள் ஆணை­யாளர் எழு­திய Archaeological Survey of Ceylon என்ற இதழில் 32 ஆம் பக்கம் முதல் 35 ஆம் பக்கம் வரை குருந்தூர் மலை மற்றும் அதன் இடி­பா­டுகள், அங்கே காணப்­பட்ட பழங்­கால குடி­யேற்­றங்கள் பற்­றிய குறிப்­புக்கள் பல பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. இதுவே இலங்கை தொல்­பொருள் திணைக்­களம் குருந்தூர் மலை தொடர்பில் தலை­யீடு செய்­கின்­ற முத­லா­வது சந்­தர்ப்­ப­மா­கவும் உள்­ளது.

குருந்தூர் இந்­துக்­க­ளு­டை­யதா பௌத்­தர்­க­ளுடை­யதா ?

குருந்­தூர்­ம­லையை அண்­டி­யுள்ள தண்­ணி­மு­றிப்பு பிர­தே­சத்தில் தமிழ் மக்­களின் பூர்­வீக விவ­சா­யக்­கா­ணி­க­ளையும், குடி­யி­ருப்­புக்­கா­ணி­க­ளையும் வன­வளத் திணைக்­களம் மற்றும், தொல்­லியல் திணைக்­களம் என்­பன ஆக்­கி­ர­மித்­துள்­ள­தாக அப்­பி­ர­தேச மக்கள் குற்றம் சாட்­டு­கின்­றனர். இந் நிலையில் குறித்த தண்­ணி­மு­றிப்பு பகு­தியில் தம்மை மீள்­கு­டி­யேற்­று­மாறும், ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள விவ­சா­யக்­கா­ணி­களை விடு­விக்­கு­மாறும் காணி­க­ளுக்­கு­ரிய தமிழ் மக்கள் தொடர்ந்து அரசை வலி­யு­றுத்­தியும் வரு­கின்­றனர்.

யுத்த காலத்தில் குருந்தூர் பிர­தே­சத்­திலே விடு­தலைப் புலி­களின் பதுங்கு குழி ஒன்றும் பின்னர் இலங்கை இரா­ணு­வத்­தி­னரின் முகாம் ஒன்றும் இருந்­துள்­ள­தாக தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் வவு­னியா முல்­லை­தீவு மற்றும் மன்னார் பிர­தேச பிராந்­திய காரி­யா­ல­யத்தின் உதவி பணிப்­பாளர் ஆர்.ஜீ. ஜய­தி­லக கூறினார்.

தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் உதவி பணிப்­பாளர் மேலும் தெரி­விக்­கையில், யுத்­தத்தின் பின்னர் முதல் ­மு­றை­யாக 2013 ஆம் ஆண்டு இரா­ணு­வத்தின் உத­வி­யுடன் தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­கத்­தர்கள் குருந்­தூர்­மலை பிர­தே­சத்­திற்கு விஜயம் செய்து அங்கு காணப்­பட்ட தொல்­பொருள் பெறு­ம­தி­வாய்ந்த பழங்­கால நினைவுச் சின்­னங்­களை இனங்­கண்­டுள்­ளார்கள். அதன் பின்னர் அதே ஆண்டு அவை தொல்­பொருள் சின்­னங்­க­ளாக அரச வர்த்­த­மா­னி­யிலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. எனினும் அதற்கு முன்­னரே குறித்த பிர­தேசம் 1933ஆம் ஆண்டில் பாது­காக்­கப்­பட்ட வனப்­பி­ர­தே­ச­மாக ‘கெசட்’ செய்­யப்­பட்­டி­ருந்­தது. பின்னர் மீண்டும் 2018 ஆம் ஆண்டு தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் அங்கே சென்­றுள்­ளார்கள். அந்த சந்­தர்ப்­பத்தில் பாரி­ய­ளவு வனப்­பி­ர­தேசம் மக்­களால் கைப்­பற்­றப்­பட்­டி­ருந்­த­மையை அவர்­களால் அவ­தா­னிக்க முடிந்­த­தாக கூறினார். ‘2009 ஆம் ஆண்டு முதல் நாங்கள் கூகுள் செட்­டிலைட் ஊடாக இந்த வனப்­பி­ர­தே­சத்தை ஆராய்ந்து பார்த்­ததில் 2019,20 மற்றும் 21 ஆம் ஆண்­டு­க­ளி­லேயே பாரி­ய­ளவில் வனஜீ­வ­ரா­சிகள் திணைக்­க­ளத்­திற்கு உட்­பட்ட காடுகள் மக்­களால் அப­க­ரிக்­கப்­பட்டு இருந்­தன. சாதா­ரண மக்­க­ளு­டைய வீடு­களோ காணி­களோ அந்தப் பிர­தே­சங்­களில் இருந்­த­மைக்­கான எந்த ஒரு ஆதா­ரமும் இல்லை’ என உதவி பணிப்­பாளர் ஆர்.ஜீ. ஜய­தி­லக கூறினார்.

குருந்தூர் மலை பிர­தே­சத்தில் காணப்­ப­டு­கின்ற குருந்தி பௌத்த விகாரை மற்றும் குருந்தூர் மலை ஆதி­சிவன் ஐயனார் ஆலயம் ஆகிய இரண்டு மத வழி­பாட்டு தலங்­க­ளுக்கும் இடை­யி­லான முரண்­பா­டுகள் தற்­போது உக்­கி­ர­மான நிலையை அடைந்து வரு­கின்­றது. இரு வேறு மதத்­தி­னரும் குருந்தூர் மலை பிர­தே­சத்தில் காணப்­ப­டு­கின்ற தமது மத வழி­பாட்டு தலத்­திற்கு நாடு பூரா­கவும் இருந்து மத அனுஷ்­டா­னங்­களில் ஈடு­ப­டவும் அந்­நிய மதத்­த­வர்­க­ளி­ட­மி­ருந்து தமது வழி­பாட்டு தலங்­களை பாது­காக்­கவும் அணி­தி­ரண்டு வரு­மாறு பக்­தர்­க­ளுக்கு பகி­ரங்­க­மாக அழைப்பு விடுத்து வரு­கின்­றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி ஆதி­சிவன் ஐயனார் ஆல­யத்தில் இடம்­பெற்ற பொங்கல் நிகழ்வும் அதன் பின்னர் அங்கே ஏற்­பட்ட கைக­லப்பும் தற்­போ­து­வரை சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் அர­சியல் மேடை­க­ளிலும் மிக முக்­கி­ய­மான பேசு­பொ­ரு­ளாக அமைந்­துள்­ளது.

கடந்த 18ஆம் திகதி தென்­இ­லங்­கையில் இருந்து ஐந்து பேருந்­து­க­ளில் சிங்­கள பெரும்­பான்­மை­யி­னரும் இன்னும் நூற்­றுக்­க­ணக்­கான தமிழ் மக்கள் வட­கி­ழக்கு பிர­தே­சங்­களில் இருந்தும் அங்கே வருகை தந்­த­துடன் நூற்­றுக்­க­ணக்­கான விசேட அதி­ரடிப் படை­யி­னரும் அங்கே பிரச்­சி­னைகள் எதுவும் ஏற்­ப­டாத வண்ணம் அமை­தியை நிலை நாட்ட பணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். அந்த சம்­ப­வத்தின் பின்னர் பகி­ரங்­க­மா­கவே உதய கம்­மன்­பில, விமல் வீர­வன்ச, சரத் வீர­சே­கர மற்றும் சன்ன ஜய­சு­மன போன்ற சிங்­கள அர­சி­யல்­வா­தி­களும் ஸ்ரீதரன், செல்வம் அடைக்­க­ல­நாதன் மற்றும் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் ஆகிய தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் தொடர்ந்தும் இந்த விவ­காரம் குறித்து பேசி வரு­கின்­றார்கள்.

கடந்த 26ஆம் திகதி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லத்தின் வீட்டை ஆர்ப்­பாட்­டக்­கு­ழு­வொன்று முற்­று­கை­யிட்டு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு பதற்­ற­நிலை ஒன்று உரு­வா­கி­யுள்­ள­துடன் பின்னர் சிறிது நேரத்தில் காவல்­து­றை­யினர் அதனை கட்­டுக்குள் கொண்­டு­வந்­துள்­ளனர். அதற்கு முன் தினம் “துணிவு இருந்தால் பாது­காப்­புக்கு நிறுத்­தி­யுள்ள காவல்­து­றை­யி­னரை அகற்­றி­விட்டு மக்கள் முன்­னி­லையில் விவாதம் செய்ய வரு­மாறு” பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில அமைச்சர் பொன்­னம்­ப­லத்­திற்கு சவால் விடுத்­த­துடன் சமூக வலைத்­த­ளங்­களின் ஊடாக பொன்­னம்­ப­லத்தின் வீட்டை முற்­று­கை­யிட வரு­மாறு சிங்­கள மக்­க­ளுக்கு பகி­ரங்­க­மான அழைப்­பையும் விடுத்­தி­ருந்தார்.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் 07ஆம் திகதி சுதந்­திர மக்கள் சபையின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பேரா­சி­ரியர் சன்ன ஜய­சு­ம­ன­வினால் “குருந்தி விஹார வம்­சய” என்ற பெயரில் நூலொன்றும் வெளி­யி­டப்­பட்­டது. குறித்த நிகழ்வில் உரை­யாற்­றிய நூலின் எழுத்­தாளர் சன்ன ஜய­சு­மன ‘குருந்தி பற்றி கதைக்­காமல் அடுத்த 20 ,30 வரு­டங்­க­ளுக்கு இலங்­கையில் அர­சியல் பற்­றியோ, தலை­மைத்­துவம் பற்­றியோ எவ­ராலும் கன­வு­காண முடி­யாது என்ற தீர்க்­க­த­ரி­ச­னத்தை நான் கூறு­கின்றேன்” என கூறி­யமை இன்னும் பல கேள்­வி­களை எழுப்­பு­கின்­றது.

‘‘குருந்தூர் மலை ஆதி­சிவன் ஐயனார் ஆல­யத்தில் நாங்கள் பல வரு­டங்­க­ளாக மத வழி­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். இந்தக் கோயில் முன்பு பண்­ணை­யா­ளர்­களின் பரா­ம­ரிப்பில் இருந்து வந்­த­துடன் பொங்கல் நிகழ்­வுகள் உட்­பட கிரா­மிய வழி­பா­டுகள் இங்கே இடம் பெற்ற வர­லா­றுகள் உள்­ள­ன’’ என ஆதி­சிவன் ஐயனார் ஆல­யத்தின் மேலாண்மை வாரியத் தலைவர் டீ. விக்­னேஸ்­வரன் தெரி­வித்தார். மேலும் அவர் கூறு­கையில், இங்கே பௌத்த விகாரை ஒன்று காணப்­ப­டு­வதும் அதில் வழி­பா­டுகள் மேற்­கொள்­வ­திலும் தங்­க­ளுக்கு எந்த ஒரு பிரச்­சி­னையும் இல்லை. இங்கே காணப்­ப­டு­வது முற்று முழு­தாக ஒரு அர­சியல் பிரச்­சி­னையே அன்றி எந்­த­வொரு மதப் பிரச்­சி­னையும் அல்ல என்றார்.

பழ­மை­யான கோவி­லுக்கு எந்த ஆதா­ர­முமில்லை

குருந்தி விஹாரை பகு­தியில் பழைய சிவன் கோயி­லொன்று இருந்­த­மைக்­கான எந்­த­வொரு ஆதா­ரமும் இல்லை என குருந்தி விஹா­ரையின் தலைமை தேரர் கல்­க­முவ சாந்­த­போதி கூறினார். அவர் மேலும் தெரி­விக்­கையில், 1979 ஆம் ஆண்டு சிறில் மேத்யூ திரு­கோ­ண­மலை மாவட்ட ஆளு­ந­ருடன் இந்த வழி­பாட்­டுத்­த­லத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக இங்கே வருகை வந்­துள்ளார். பின்னர் அவர் கொழும்­புக்கு சென்று உரிய அனு­ம­தி­களை பெற்று மீண்டும் 1981 ஆம் ஆண்டு இங்கு வந்­த­போது இந்த பகு­தியில் தமிழ் மக்கள் சிலை­பீ­டத்­திற்கு மேலே சட்­ட­வி­ரோ­த­மான முறையில் ஒரு கோயிலை கட்­டி­யுள்­ளனர். அவ்­வாறு செய்­துள்­ள­மையின் நோக்கம் சிறில் மேத்யூ இந்த இடத்தை விகா­ரை­யாக அபி­வி­ருத்தி செய்­வதை தடுப்­ப­தாகும். பின்னர் அவற்றை அகற்­று­மாறு பல கடி­தங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. 1983க்குப் பிறகு இது­ கு­றித்து எதுவும் செய்­யப்­ப­ட­வில்லை. அதன் பின்னர் தான் நான் இங்கே 2018ஆம் ஆண்டு வருகை தந்தேன் என கல்­க­முவ சாந்­த­போதி தேரர் குறிப்­பிட்டார்.

தேரர் மேலும் குறிப்­பி­டு­கையில், எந்­த­வொரு இனத்தைச் சேர்ந்­த­வ­ராக இருந்­தாலும் இங்கே வருகை தந்து தமது மத வழி­பா­டு­களில் ஈடு­ப­டலாம். பௌத்­தர்­க­ளா­கிய நாங்கள் ஒரு­போதும் அவர்­களை தடுக்க மாட்டோம். ஆனால் இங்கே காணப்­ப­டு­கின்ற பௌத்த புராண விகா­ரையின் சிலை பீடத்தை தங்­க­ளு­டைய சிவ கோயில் என உரிமை கோரு­வதை எம்மால் ஏற்க முடி­யாது. ஏனென்றால் சகல வித­மான தொல்­பொருள் வர­லாற்று ஆதா­ரங்கள் மூல­மா­கவும் இது ஒரு புராண பௌத்த விகாரை என்­பது நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது என தெரி­வித்தார்.

தொல்­பொருள் கட்­டளைச் சட்­டத்­திற்கு அமை­வாக தொல்­பொருள் பெறுமதி வாய்ந்த எந்த ஒரு இடத்­திலும் புதி­தான எந்­த­வொரு கட்­டு­மா­னத்­தையும் மேற்­கொள்ள முடி­யாது. எனினும் குருந்­தூர்­ம­லையை அண்­டிய பிர­தே­சத்தில் புதி­தாக விஹா­ரை­யொன்று அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக மக்கள் குற்றம் சாட்­டு­கின்­றனர். இது குறித்து நாங்கள் தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் சட்ட பிரிவின் சட்­டத்­த­ரணி ரோஹன காரி­ய­வ­ச­மிடம் வின­வினோம். அதனை முற்று முழு­தாக நிரா­க­ரித்த ரோஹன காரி­ய­வசம் அங்கே எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும் புதி­தான எந்த ஒரு விகா­ரை­யையும் அமைப்­ப­தற்­கான எந்­த­வொரு அனு­ம­தியும் எவ­ருக்கும் இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. அகழ்வு பணி­களின் போது கண்­டு­பி­டிக்­கப்­பட்ட தொல்­பொருள் பெறு­மதி வாய்ந்த தூபியை நாங்கள் பாது­காப்­ப­தற்­காக மீள அதனை முன்பு இருந்­ததைப் போல் காட்­டி­யுள்ளோம் என தெரி­வித்தார். மேலும் இது குறித்து தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் பிராந்­திய காரி­யா­ல­யத்தின் உதவி பணிப்­பாளர் ஆர்.ஜீ.ஜய­தி­லக கூறு­கையில், இது போன்ற சந்­தர்ப்­பங்­களில் தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ளரும், திணைக்­க­ளத்தின் கட்­ட­டக்­கலை பணிப்­பா­ளரும் இணைந்து குறித்த தொல்­பொருள் சின்­னத்தை பாது­காப்­பது குறித்து முதலில் கலந்­து­ரை­யா­டு­வார்கள். அதன் பின்னர் குறித்த தொல்­பொருள் சின்­னங்­களை பாது­காப்­ப­தற்­காக தேசிய மற்றும் சர்­வ­தேச தொல்­பொருள் சட்­டங்­க­ளுக்கு உட்­பட்ட விதத்தில் அவற்றின் தொல்­பொருள் பெறு­மதி குன்­றாத வித­மாக அவற்றை மீள கட்­டி­யெ­ழுப்­பு­வார்கள். அதற்கு அமை­வா­கவே குறித்த தூபி முன்னர் இருந்­தது போன்று மீளவும் அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறினார்.

முல்­லைத்­தீவு நீதி­மன்றம், குருந்தி மலை பிர­தே­சத்தில் புதி­தாக எந்­த­வொரு கட்­டு­மா­னத்­தையும் அமைக்க முடி­யாது என 2022 ஜூன் மாதம் 12ஆம் திகதி கட்­டளை ஒன்றை பிறப்­பித்­தி­ருந்­தது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முல்­லைத்­தீவு நீதி­மன்­றத்தில் நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணையின் போது குறித்த நீதி­மன்ற கட்­டளை மீறப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. AR-673-2018 முல்­லைத்­தீவு நீதிவான் நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட வழக்கின் கட்­ட­ளை­யொன்று வழங்­கப்­பட்­டதை தொடர்ந்து மனு­தா­ரர்கள் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி வி.எஸ்.தனஞ்­சயன் இது பற்றி ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில், நீதி­மன்றம் மேற்­கொண்ட இரண்டு கள விஜ­யங்­களை அடிப்­ப­டை­யாக வைத்து இந்த தீர்­மானம் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஏற்­க­னவே நீதி­மன்றம் எந்த ஒரு புதிய கட்­டு­மா­னத்­தையும் மேற்­கொள்ள முடி­யாது என தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாய­கத்­திற்கு பணித்­தி­ருந்த போதிலும் அது உதா­சீனம் செய்­யப்­பட்­டுள்­ளது. அதன் அடிப்­ப­டை­யிேலயே முல்­லைத்­தீவு நீதி­மன்றம் இந்த கட்­ட­ளையை பிறப்­பித்­துள்­ள­தாக தெரி­வித்தார்.

குருந்தி விகா­ரையைப் பொறுத்­த­மட்டில், அது சிங்­கள பௌத்த மக்­க­ளு­டை­யதா அல்­லது தமிழ் பௌத்த மக்­களால் வழி­ப­டப்­பட்­டதா என்­ப­து­பற்றி வாதா­டு­வது இது சிங்­கள பௌத்­தர்­க­ளு­டை­யது என உரிமை கொண்­டா­டு­வது போன்றே மற்­று­மொரு பிரச்­சி­னை­யாகும். குருந்தி போன்ற இடங்கள் பாரம்­ப­ரிய வர­லாற்று தலங்­க­ளாக பார்க்­கப்­பட வேண்டும். அவ்­வா­றின்றி அதனை உரிமை கொண்­டா­டு­வது தேவை­யற்ற பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­தக்­கூடும் என கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் வர­லாற்று துறை பேரா­சி­ரியர் நிர்மால் தேவ­சிரி குறிப்­பிட்டார்.

கடந்த ஒரு சில மாதங்­க­ளாக குருந்தூர் மலை அல்­லது குருந்தி விகாரை சம்­பந்­த­மான அறிக்­கை­யி­டல்­களை நோக்கினோமேயானால் அனேகமான தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்கள் இரு வேறு விதங்களில் இந்த சம்பவத்தை அணுகியுள்ளார்கள். ஒரு சில ஊடகங்கள் உண்மையை மறைத்தும் இன்னும் சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பாகவும் பலவிதமான கருத்துக்களை சமூகத்தில் பரப்பியுள்ளார்கள்.

சில நாட்களுக்கு முன்பாக “குருந்தி விகாரையை மையமாகக் கொண்டு மிகப்பெரிய ஒரு மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது” என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும் சர்வதேச புலனாய்வு சேவை ஒன்று மூலம் இலங்கை அரசுக்கு இன மற்றும் மத கலவரம் குறித்து எச்சரிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் பகிரப்பட்டன.
எனினும் கடந்த 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் இது குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், ஊடகங்களில் வெளிவந்த செய்தி போலியானது எனவும் அவ்வாறான எந்த ஒரு எச்சரிக்கையும் விடுவிக்கப்படவில்லை என்பதுடன் குருந்தியில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையின் பின்னணியில் கத்தோலிக்கர் ஒருவர் இருப்பதாக உள்ளூர் புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வரலாற்றிலே யுத்தங்களும் கலவரங்களும் ஒருபோதும் நிலையான வெற்றியையோ நாடுகளுக்கு அபிவிருத்தியையோ வழங்கவில்லை. மாறாக எஞ்சியது, மனிதகுல நாகரிகத்தின் வீழ்ச்சியும் மனிதனுடைய அழிவுமே ஆகும். இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் ஒவ்வொரு கற்களும் திரும்பத் திரும்ப இந்தியாவில் இன்றும் இந்து முஸ்லிம்களிடையே எறியப்பட்டு வருகின்றது. அதே வரலாற்று தவறை நோக்கித்தான் நாமும் இன்று சென்று கொண்டிருக்கின்றோம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.