ஏ.ஆர்.ஏ.பரீல்
புனித ஹஜ் யாத்திரைக்காக கடந்த காலங்களில் 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணம் செலுத்தி தம்மைப் பதிவு செய்து கொண்டுள்ளவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தையும் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இரத்துச் செய்துள்ளது.
இவ்வாறு பதிவு செய்து கொண்டுள்ள விண்ணப்பதாரிகளில் 2000 பேர் இன்னும் தங்கள் கட்டணத்தை மீளப் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ள திணைக்களம், அவற்றை மீளப் பெற்றுக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
“பழைய விண்ணப்ப பதிவுகளை தொடர்ந்தும் பேணுவதில் திணைக்களம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால் ஆள் மாறாட்டங்களும் இடம் பெறுவதற்கான வாய்ப்பிருக்கிறது. விண்ணப்ப பதிவுக் கட்டணங்கள் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவில் இதுவரை பதிவு இரத்துச் செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 2000 விண்ணப்பதாரிகள் தங்களது பதிவுக்கட்டணங்களை மீள பெற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பதிவுக் கட்டணங்களை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட். ஏ.எம்.பைஸல் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
மேலும் 2024 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படும் எனவும் அவர் கூறினார்.