தாஜுதீனின் கொலை பின்னணி குறித்து இப்போதாவது உண்மையை கூறுங்கள்
நீதியை பெற்றுக்கொடுக்காத மைத்திரி வெட்கப்பட வேண்டும் என சாடுகிறார் முஜிபுர்
(எம்.வை.எம்.சியாம்)
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் வசீம் தாஜுதீன் கொலை விவகாரத்தில் நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியாதமையிட்டு மைத்திரிபால சிறிசேன வெட்கப்பட வேண்டும். இவ்விவகாரத்தை வைத்து மீண்டும் அரசியல் நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம். கொலையின் பின்னணியில் உள்ள உண்மைகளை இப்போதாவது கூறுங்கள். நீங்கள் கூறவில்லை என்றால் நாங்கள் கூறுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முஜிபுர் ரஹ்மான், வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தாஜுதீன் மரணம் தொடர்பில் மைத்திரி இன்று வாயை திறந்திருக்கிறார். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னதாக தாஜுதீன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. இருப்பினும் மைத்திரி ஜனாதிபதியாக வெற்றியடைந்த பின்னர் அவரின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையின்போது இது விபத்து அல்ல எனவும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையாலேயே உயிரிழந்துள்ளதாகவும் வைத்திய அறிக்கைகள் மூலம் வெளிக்கொணரப்பட்டன. இருப்பினும் அதன் பின்னர் மரணம் தொடர்பில் பரவலாக பேசப்பட்டது. பல உண்மைகள் வெளியாகின. இருப்பினும் சாட்சியங்கள் மறைக்கப்பட்டதுடன் சிலவற்றை நீதிமன்றத்துக்கும் சமர்ப்பிக்கவில்லை.
இது தொடர்பில் தாஜுதீனின் தந்தை உட்பட சட்டத்தரணிகள் மைத்திரியை சந்தித்து ‘இந்த வழக்கு தொடர்பிலான சாட்சியங்களை சிலர் மறைப்பதற்கு முயற்சிக்கின்றனர். அதை வெளிப்படுத்த முடியாதுள்ளது. இதன் காரணமாக நீங்கள் இதில் தலையிட்டு தாஜுதீனின் மரணத்திற்கு நீதியை பெற்றுத்தர வேண்டும்’ என கோரினார்கள். ‘தாஜுதீனின் மரணம் விபத்து’ என மரண பரிசோதனை அறிக்கையை வழங்கிய நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைது செய்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு அன்று செய்யவில்லை.
இந்த கொலையின் பின்னணியில் அரச குடும்பம் இருக்கிறது என முன்னாள் ஜனாதிபதிதான் கூறினார். அன்று அரச குடும்பத்தில் இருந்தவர்களை கைது செய்ய வேண்டாம் என கூறியவர்கள் யார் என்பதும் முழு நாட்டுக்கும் தெரியும். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணைகளின் கோப்புகளை எடுத்துக்கொண்டு உங்களுடைய வீட்டுக்கு வந்தது யார்? யாரைக் காப்பாற்றுவதற்காக எல்லாவற்றையும் மூடி மறைக்க பார்க்கிறார்கள்?
தாஜுதீன் கொலையின் பின்னணயில் உள்ள விடயங்களை மைத்திரி பதவியிலிருந்த போதே வெளிப்படுத்தி இருக்கலாம்.
இருப்பினும் உண்மைகளை ஆராய்ந்து உரிய விசாரணைகளை மைத்திரியால் முன்னெடுக்க முடியாமல் போனது. இன்று தாஜுதீனின் மரணத்தை கொண்டு மைத்திரி அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகிறார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த நீங்கள் அந்த அப்பாவி குடும்பத்துக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனமையையிட்டு வெட்கப்பட வேண்டும். இப்போதாவது கூறுங்கள். நீங்கள் கூறவில்லை என்றால் நாங்கள் உண்மையை கூறுவோம். என்ன நடந்தது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். தெரிந்தவற்றை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். வீணான பாவங்களை சுமக்க வேண்டாம் என்றார்.- Vidivelli