கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
முஸ்லிம்களின் திருமணம், விவாகரத்து சம்பந்தமான தனியார் சட்டம் 1951ஆம் வருடம் ஆண்களே நிறைந்த ஒரு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு ஒரு சில செயற்பாட்டு சம்பந்தமான மாற்றங்களுடன் இன்று வரை அமுலில் இருந்து வருகின்றது. ஆணாதிக்கம் அரசோச்சிய ஒரு காலச் சூழலில் வைதீக மார்க்கபோதகர்களின் ஏகபோக உரிமையாக இஸ்லாம் கருதப்பட்டிருந்ததால் திருமண விவாகரத்துச் சட்டத்திலும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் அன்று வாழ்ந்த முஸ்லிம் பெண்கள் வேறு இன்று வாழும் முஸ்லிம் பெண்களோ வேறு. நவீனத்துவத்தின் தாக்கத்தாலும் கல்வியறிவின் பரவலாலும் சமூகத்தின் பொது விவகாரங்களில் அவர்களுக்குள்ள ஈடுபாட்டினாலும் உலக முஸ்லிம் பெண்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. ஆதலால் அவர்கள் தாங்கள் வாழும் சமூகம் ஆணாதிக்கத்தின் பிடிகளுக்குள் சிக்குண்டு பெண்களை தொடர்ந்தும் இரண்டாந்தரப் பிரஜைகளாகக் கணித்துவருவதை எதிர்த்துப் போராடத் துணிந்துவிட்டனர். அந்தத் துணிச்சல் அலை இலங்கையிலும் வீசத் தொடங்கிவிட்டது. அந்த வீச்சின் குரல்தான் தனியார் சட்டத்தினை திருத்த வேண்டி அவர்கள் இப்போது நடத்தும் உரிமைப் போராட்டம். அதுபற்றிய முக்கியமான ஓரிரு சிந்தனைகளை இக்கட்டுரை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறது. அதே வேளை இப்போராட்டத்துக்கு ஆதரவாக முஸ்லிம் ஆண்வர்க்கத்தின் புத்திஜீவிகளுள் கணிசமான ஒரு பகுதியினர் ஆதரவு வழங்குவதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. ஆதலால் இப்போராட்டம் வெற்றி பெறுவது நிச்சயமே.
முதலாவதாக, இலங்கையில் எப்போது இந்தப் போராட்டம் ஆரம்பமாகியது என்பதை விளங்கவேண்டும். கல்வியறிவு இன்மையாலும் உலக மாற்றங்களை அறியாத கிணற்றுத் தவளைகளாகவும் தமது வீடுகளுக்குள்ளேயே தூங்கிக்கிடந்த முஸ்லிம் பெண்களிடையே இலவசக் கல்வியின் வளர்ச்சியும் அதனால் ஏற்பட்ட வேலை வாய்ப்புகளும் அவர்களின் கண்களைத் திறக்கலாயின. இது சம்பந்தமாக ஒரு சம்பவத்தை நான் வாசகர்களுடன் பரிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
1970களில் ஒரு நாள் அன்றைய கல்வி அமைச்சர் பதியுதீனுடன் அவரது கம்பளை இல்லத்தில் உரையாடியபோது பொதுத் தராதரப்பரீட்சையில் ஐந்து பாடங்களில் மட்டும் சித்தியடைந்த முஸ்லிம் பெண்களுக்கு ஆசிரியத் தொழில் வழங்குவதால் கல்வியின் தரம் கெட்டு விடும் என்ற ஒரு வாதத்தை அவரிடம் கூறினேன். அதற்கு அவரளித்த பதிலை என்னால் மறக்க முடியாது. நான் அவளுக்காக அந்தத் தொழிலை வழங்கவில்லை, அவளின் பிள்ளைகளுக்காக வழங்குகிறேன் என்றார். அதாவது கல்வியின் பயனை அவள் உணர்ந்துவிட்டால் அவள் தனது பிள்ளையை கடைச்சிப்பந்தியாகவோ அங்காடி வியாபாரியாகவோ உருவாக்காமல் கல்வியிலேயே ஊக்கம் செலுத்த வைப்பாள் என்றார். அவரது தூரநோக்கும் அவரது அந்தக் கொள்கையும்தான் பின்னர் முஸ்லிம் பெண்களிடையே ஒரு விழிப்பை உண்டுபண்ணிற்று என்றால் அது மிகையாகாது.
அந்த விழிப்பின் விளைவாகத்தான் 1980களிலிருந்தே முஸ்லிம் பெண்கள் தமக்கென சங்கங்களை அமைத்து அவற்றின் மூலம் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்பட்டனர். அதுதான் அவர்களின் கவனத்தை தனியார் சட்டத்தின்பாலும் திருப்பியது. அச்சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவருமாறு அரசாங்கத்திடம் பல வழிகளாலும் வலியுறுத்தியதால் 2009ஆம் வருடம் அப்போதிருந்த நீதி அமைச்சர் மிலிந்த மொறெகொட 16 அங்கத்தவர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை நீதியரசர் மர்சூப் சலீம் தலைமையில் நியமித்து விடயத்தை ஆராய்ந்து ஆக்கபூர்வமான சிபார்சுகளைச் சமர்ப்பிக்குமாறு பணித்தார். அந்தக் குழுவில் ஆக மூன்று முஸ்லிம் பெண்களே இடம்பெற்றமை அக்குழுவும் ஆணாதிக்கத்தின் பிரதிபலிப்பென்பதை எடுத்துக் காட்டிற்று. அப்போது அதை யாருமே சுட்டிக்காட்டத் தவறியது ஒரு மகா தவறு. குழுவின் ஏனைய அங்கத்தவர்களுள் பெருமளவானவர்கள் சட்டத்தரணிகள்.
அவர்களுடன் ஜமியத்துல் உலமா சபையின் இரு அங்கத்தினரும் ஒரு அரபு மொழிக் கலாநிதியும் இடம்பெற்றிருந்தனர். அவர்களுள் எவருக்காவது தற்கால முஸ்லிம் பெண்ணினத்தின் உயர்ச்சியையும் அவர்கள் இஸ்லாம், இஸ்லாமிய வரலாறு, இஸ்லாமிய மார்க்கச் சட்டங்கள், முஸ்லிம்களின் கலாசாரம் ஆகிய துறைகளில் வெளியிட்ட எத்தனையோ ஆய்வுகளையும் அவர்களது சாதனைகளையும் வாசித்தாவது இருந்தார்களா என்பது சந்தேகமே. எனினும் ஒன்பது வருட இழுபறியின்பின்னர் நீதியரசர் சலீம் அவர்கள் 2018 இல் ஓர் அறிக்கையை அன்றைய பெண் நீதி அமைச்சர் தலதா அத்துக்கோறளையிடம் சமர்ப்பித்தார். அதில் பெண்ணுரிமைக்குச் சாதகமான ஓரிரு சிபார்சுகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அந்த அறிக்கை பெரும்பாலான குழு அங்கத்தவர்களின் சம்மதத்தைப் பெற்றிருக்கவில்லை. அந்தப் பிளவு இனி வரப்போகும் எதிர்ப்பைத் தூண்டும் ஒரு சங்கொலிபோல் இருந்தது.
அவ்வறிக்கையின் சிபார்சுகளுக்கு எதிராக எழுந்த குரலுக்குத் தலைமை தாங்கியோர் உலமா சபை அங்கத்தினரே. அந்தக்கால கட்டம் அரசாங்கத்தின் இறுதி வருடமாக இருந்ததாலும் அவ்வறிக்கைக்கெதிரான மகஜர்கள் அமைச்சர் மடியில் வந்து குவிந்ததாலும் அந்த அரசியல்வாதியும் அவ்வறிக்கையை ஏற்பதா மறுப்பதா என்ற முடிவை நாடாளுமன்ற முஸ்லிம் பிரதிநிதிகளின் பொறுப்பில் தந்திரமாகச் சுமத்திவிட்டுக் கைகழுவினார். அடுத்து நடந்ததென்ன?
நாடாளுமன்ற முஸ்லிம் பிரதிநிதிகளின் முழுக் கவனமும் அவ்வறிக்கையைவிட எதிர்வரப்போகும் தேர்தலில் தமது ஆசனங்களை எவ்வாறு கைப்பற்றுவது என்பதிலேயே தங்கியிருந்தது. இது உலமா சபையினருக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். உலமா சபையோ நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களையும் மதரசாக்களையும் தனது செல்வாக்கினுள் வைத்திருந்ததால் அவற்றினூடாக முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராகவோ சார்பாகவோ பிரச்சாரம் செய்யக்கூடிய வாய்ப்பு அச்சபைக்கு இருந்தது. அந்த வாய்ப்பை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி முஸ்லிம் பிரதிநிதிகளை அவ்வறிக்கையை ஏற்கவேண்டாமென அழுத்தம் கொடுத்தனர். அப்பிரதிநிதிகளும் சுயநலம் கருதி உலமா சபைக்கு ஆமா போட்டனர். ஆதலால் சலீம் அறிக்கை நாடாளுமன்ற அருஞ்சுவடிச்சாலைக்குள் தஞ்சம் அடைந்து தூசு பிடிக்கத் தொடங்கிற்று.
அதன்பிறகு இப்போது இன்னுமொரு தோர்தல் வரப்போகும் ஒரு சூழலில் 18 முஸ்லிம் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் (அனைவரும் ஆண்கள்) ஒரு புதிய மகஜரை தனியார் சட்டத்திருத்தம் சம்பந்தமாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்களிடம் சமர்ப்பித்துள்ளனர். அந்த மகஜரிலும் உலமா சபையின் வாடை வீசுகிறது. மீண்டும் அதற்கெதிராக முஸ்லிம் பெண் இயக்கங்களும், ஏனைய சமூகத்திலுள்ள பெண் அறிவாளிகளும், முஸ்லிம் ஆண் புத்திஜீவிகளின் அமைப்புகளும் போர்கொடி தூக்கியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள் யாவை? முதலாவதாக, ஒரு பெண் பருவம் எய்தியவுடன் அவளை வீட்டுக்குள்ளே பூட்டிவைத்து அவளை ஒரு பாரமாகப் பெற்றோர் கருதி இளம் வயதிலேயே அந்தப் பெண்ணை எந்த ஓர் ஆண்மகனின் தலையிலாவது விலபேசிக் கட்டிவைத்து அதனால் பெற்றவர்களின் குடும்பப் பாரத்தைக் குறைக்கும் தீங்கினை அகற்றுவதற்காக திருமணச் சோடிகளின் வயதெல்லையை பதினெட்டாக உயர்த்தி பெண்ணை விலைபேசி விற்கும் சீதனக் கொடுமையையும் ஒழிப்பது. இரண்டாவதாக, திருமண ஒப்பந்தத்தில் மணமகள் கைச்சாத்திடுவது அவசியம். அத்துடன் அந்தக் கைச்சாத்தினுக்குச் சாட்சியாக ஓர் ஆண் பாதுகாவலனே கைச்சாத்திட வேண்டும் என்ற நியதியை அகற்றல். மூன்றாவதாக, பெண்ணுக்கும் விவாகரத்துச் செய்யும் உரிமையை வழங்குதல். நான்காவதாக, காதி நீதி மன்ற நீதிபதிகளாகப் பெண்களையும் நியமித்தல். ஐந்தாவதாக ஆண்கள் பலதார மணம் செய்வதை முற்றாக ஒழித்தல்.
இந்தக் கோரிக்கைளின் அடிப்படை வாதமாக இன்றைய முஸ்லிம் பெண்களும் வளர்ச்சியடைந்த இதர சமூகங்களில் வாழும் பெண்களைப்போன்று தமது சொந்தக்காலில் நின்று வாழ்க்கை நடத்தத் தகுதியுள்ளவர்கள் என்பது மட்டுமல்ல, அவர்களால் தனித்து நின்று குடும்பப் பாரத்தைத் தாங்க முடிகின்ற அதேவேளை ஆண்களைப்போன்று சகல துறைகளிலும் அவர்களால் பங்குகொள்ள முடியுமாதலால் அவர்களுக்கு ஏன் திருமணபந்தத்தில் சமநிலை வழங்க முடியாது என்பதுமாகும். பல துறைகளில் முஸ்லிம் ஆண்களைவிடவும் பெண்கள் திறமை உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். அந்தப் பட்டியலை நீட்டுவதற்கு இக்கட்டுரை இடம் தராது. சுருக்கமாகச் சொன்னால் அன்று கவிஞர் அப்துல்காதர் லெப்பை விபரித்த இலட்சியப் பெண்ணை இன்று நாம் சமூகத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த முன்னேற்றத்தைப்பற்றி மேலும் விபரிக்காமல் அவர்களின் போராட்டத்தின் எதிரிகளை இனங்கண்டு அவர்களின் எதிர்ப்பின் அடிப்படை என்ன என்பதைப்பற்றி ஒரு கருத்தை விளக்க வேண்டியுள்ளது. இக்கருத்தை ஜீரணிப்பது பலருக்குக் கடினமாக இருக்கலாம். ஆனால் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லித்தானே ஆகவேண்டும்.
பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் யாவும் ஷரீயத், பிக்ஹ் சட்டங்களின் அடிப்படையில் அமைந்துள்ளனவால் அவற்றை மீறுதல் இறைவனையும் அவனது தூதரையும் அவமதிப்பதற்குச் சமன் என்றவாறே எதிரிகளின் வாதங்கள் அமைந்துள்ளன. இங்கேதான் பிரச்சினையே எழுகின்றது.
ஷரீயத், பிக்ஹ் ஆகிய இரண்டுக்கும் மூலாதாரம் இறைவனின் திருமறையும் நபிகளாரின் வார்த்தைகளும் நடத்தைகளுமே. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் தீருமறைக்கும் நபிகளாருக்கும் இடையில் இன்னொன்றும் இருக்கிறது. அதாவது திருமறையின் வசனங்கள் மட்டுமே நபிகளாருக்கு அருளப்பட்டன. அவற்றின் விளக்கங்கள் அருளப்படவில்லை. இதனை முதலில் உணரவேண்டும். அந்த விளக்கங்களை நபிகளாரே சுயமாக அறிந்துகொள்ளவேண்டி இருந்தது. ஆனால் மாநபி அவர்கள் ஒரு மனிதர். இறைவனல்ல. அதை இறைவனே குர்ஆனின் பதினெட்டாவது அத்தியாயத்தில் நூற்றுப்பத்தாவது வசனத்தில் தெட்டத்தெளிவாக்கியுள்ளான்.
எந்த ஒரு மனிதனுக்கும் தாய் தந்தை மற்றும் குடும்பம் என்பன உண்டு. அந்தக் குடும்பமும் அந்த மனிதனும் ஒரு சமூகத்தின் சூழலிலேதான் வாழ்கின்றனர். அதே வேளை அந்தச் சமூகத்துக்கு ஒரு வரலாறும் உண்டு. எனவே சமூகச் சூழலும் வரலாறும் ஒரு மனிதனின் சிந்தனையுடன் மோதும்போதுதான் அவனது கருத்துகளும் செயல்களும் உதயமாகின்றன. இந்த நியதிக்கு இறை தூதர்களும் விதிவிலக்கல்ல. இதை விளங்கிக் கொண்டால் சூழலும்மாறி வரலாறும் வளரும்போது ஒரு காலத்தில் சரிகாணப்பட்ட கருத்துகள் இன்னொரு காலத்தில் பொருத்தமற்றவையாகக் காணப்படுதல் இயல்பு. பதினாலாம் நூற்றாண்டு பெற்றெடுத்த சமூகவியலின் பிதா என அழைக்கப்படும் இப்னு கல்தூன் தொடக்கம் இருபதாம் நூற்றாண்டின் பேராசிரியர் பஸ்லுர் ரகுமான், இன்று வாழும் இஸ்லாமிய சட்டத்துறைப் பேராசியரியன் காலித் இப்னு பத்ழ் வரை பல்துறை வல்லுனர்கள் இந்த நியதியின் அடிப்படையிலேதான் குர்ஆனையும் நபிகளாரின் போதனைகளையும் இமாம்களின் சட்டக்கோர்வைகளையும் அணுகி மாற்றங்கள் செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றனர். இதைத்தான் இஜ்திஹாத் என்று கூறப்படுகின்றது. அவ்வாறானால் திருமறையின் வாக்கியங்களுக்கும் பெருமானாரின் போதனைகளுக்கும் அவரது நடத்தைகளுக்கும் ஒரு சந்தர்ப்பசூழல் வரையறை உண்டு என்பதை மறுக்க முடியாது. சந்தர்ப்ப சூழ்நிலைகள் மாறும்போது அவற்றின் வியாக்கியானங்களும் மாறவே வேண்டும். அந்த அடிப்படையிலேதான் 1951ல் நிறைவேற்றப்பட்ட தனியார் சட்டத்தையும் அணுகவேண்டியுள்ளது.
இதில் இன்னுமொரு சிக்கலும் உண்டு. அதாவது அந்த வியாக்கியானங்களை யார் செய்வது? மதரசாவிலே ஓதிப்படித்துப் பட்டம்பெற்ற உலமா தேவைதான். ஆனாலும் உலமா என்பது அவர்களை மட்டும்தான் உள்ளடக்கும் ஒரு வார்த்தை அல்ல. உயர்ந்த இல்ம் அல்லது அறிவுடைய எல்லாரும் உலமாவே. அதில் பெண்களும் அடங்குவர். இஸ்லாத்தின் வரலாற்றில் தமது அறிவினாலும் புத்திசாதுரியத்தினாலும் தடம் பதித்த பெண்களை யார்தான் மறுப்பரோ? பெருமானாரின் மனைவியார் கதீஜாவிலிருந்து அந்தப் பட்டியலை ஆரம்பிக்கலாம். எனவே தனியார் சட்டத் திருத்தத்தை நீதி அமைச்சர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கைகளிலும் உலமா சபையின் கைகளிலும் விடாமல் பல துறைகளிலும் பாண்டித்தியம் பெற்ற அறிவுடையோர் கைகளில் ஒப்படைத்து அவர்களுள் பெண் அறிவாளிகளையும் சமமாக உள்ளடக்கி இருந்தால் இந்தப் பிரச்சினை எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும். அந்தத் தவறினாலேதான் இன்று பெண்ணினம் போராட்டத்தில் இறங்கியுள்ளது. இலங்கையின் இன்றைய முஸ்லிம் பெண்களுள் அவ்வாறான திறமையுள்ளவர்கள் உள்ளனர். அவர்கள் ஆணாதிக்கத்துக்கு அடிபணியமாட்டார்கள். வரலாறும் அவர்களுக்குச் சார்பாகச் சாட்சியம் கூறுகிறது. எனவே அவர்களது உரிமைப் போராட்டம் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது.- Vidivelli