தசாப்த காலமாக இழுபறி நிலையில் இருந்து வருகின்ற முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் முஸ்லிம் சமூகத்தில் நிலவுகின்ற கருத்து முரண்பாடுகள் காரணமாக தொடர்ந்தும் தேக்க நிலையில் காணப்படுகின்றமை கவலைக்குரியதாகும்.
இச்சட்டத்தில் காலத்துக்கேற்ற திருத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டு உரிய சிபாரிசுகளை முன்வைப்பதற்காக 2009 இல் அப்போதைய நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவினால் ஓய்வு நிலை உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் முழுவொன்று நியமிக்கப்பட்டது. குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகள், நீதிபதிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள், பெண் சட்டத்தரணிகள் சமூக செயற்பாட்டாளர்கள் அங்கம் பெற்றிருந்தனர்.
18 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு பணிகளை 2009 இல் ஆரம்பித்து 2018ல் தனது அறிக்கையை அப்போதைய நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளித்தது. அன்று முதல் இன்றுவரை இத்திருத்தங்கள் தொடர்பில் இறுதித்தீர்மானம் எட்டப்படவில்லை. இக்குழு கூட இரண்டாகப் பிளவுபட்டே செயற்பட்டது. குழு அங்கத்தவர்களில் 9 பேர் வேறாக ஒரு அறிக்கை தயாரித்து குழுத்தலைவரிடம் வழங்கியிருந்தனர்.
தற்போது 14 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் கூட முஸ்லிம் சமூகத்தால் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வர முடியாது முரண்பட்டுக் கொள்வதை அவதானிக்க முடிகிறது.
அண்மையில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இச்சட்டத்திருத்தம் தொடர்பான முன்மொழிவொன்றினை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கி அவர்களது கருத்தையும் கோரியிருந்தார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சட்ட திருத்த முன்மொழிவுகள் தொடர்பாக முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளுடன் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா கடந்த ஜூலை மாதம் கலந்துரையாடலொன்றினை நடாத்தியது. இக்கலந்துரையாடலின் பின்பு உலமா சபை முன்மொழிவுகளை உள்ளடக்கிய ஆவணமொன்றை தயாரித்து அதில் கையொப்பமிடுவதற்காக முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளுக்கு அனுப்பி வைத்தது. நீதியமைச்சருக்கு கையளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட ஆவணத்துக்கு கையொப்பமிட ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் மறுத்ததுடன் அறிக்கையை நிராகரிப்பதாகவும் தெரிவித்தது. அத்துடன் உலமா சபையின் தலைவருக்கு கடிதத்தையும் அனுப்பி வைத்தது. கூட்டத்தில் வருகை தந்து கையொப்பமிட்டமையை தீர்மானத்துக்கு இணங்கி கையொப்பமிட்டதாக கருத முடியாது என கடிதத்தில் தெரிவித்திருந்தது.
இறுதி நேரத்தில் இவ்வாறான இழுபறி நிலை முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தத்தை மேலும் சவாலுக்கு உட்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகளும், உலமா சபையும் கடந்த 8 ஆம் திகதி கலந்துரையாடினார்கள்.
உலமா சபைக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலுக்கும் பெண் காதி நியமனம் மற்றும் பலதார மணம் தொடர்பான சட்ட திருத்தத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை எனத் தெரிவித்தாலும் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் சுமூகமான தீர்வுகளுக்கு முஸ்லிம் கவுன்ஸில் பூரண ஒத்துழைப்பு வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.
இதேவேளை நியாயமான திருத்தங்களை நாமனைவரும் சேர்ந்து மேற்கொள்ளவேண்டும். முரண்பாடான விடயங்களில் உலமாக்களின் கருத்தையும் சமூகத்தினது கருத்தையும் பெற்று ஒருமித்த கருத்தோடு உலமாசபை பயணிக்க இருக்கிறது என்ற உலமா சபையின் தீர்மானம் மகிழ்ச்சி தருகிறது.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலும் இவ்விவகாரத்தில் ஒருமித்து பயணிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தசாப்தகாலமாக தொடரும் முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சட்டத்திருத்தங்கள் விரைவில் அமுலாக ஒத்துழைக்க வேண்டும் என்பதே சமூகத்தின் அபிலாசையாகும்.- Vidivelli