ஏழரை கோடி ரூபா லொத்தர் பரிசு வென்றவரைக் கடத்தி தாக்குதல்!
பணத்தை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் எனக் கேட்டனராம் - சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
தேசிய லொத்தர் சீட்டிழுப்பில் ஏழரைகோடி ரூபா பரிசு பெற்ற ஒருவர் கும்பலொன்றினால் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டு வீடொன்றில் அடைத்து வைக்கப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கண்டி மாவட்டம் அக்குறணையை வதிவிடமாகக் கொண்ட லொத்தர் சீட்டிழுப்பில் ஏழரைகோடி ரூபா பரிசினை வென்ற நபர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரைக் கடத்திச் சென்ற குழுவினர் சீட்டிழுப்பு பரிசுத்தொகையான 7½ கோடி ரூபாவை மறைவாக வைத்திருக்கும் இடத்தை வெளிப்படுத்துமாறு கோரியே இந்த தாக்குலை மேற்கொண்டுள்ளனர்.
லொத்தர் சீட்டிழுப்பில் 7½ கோடி ரூபா பரிசுத்தொகையை வெற்றிபெற்றவர் அக்குரணையைச் சேர்ந்த மொஹமட் ஹஸீம் என்பவராவார். இவர் தம்புள்ளையில் தங்கியிருந்தபோது கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதி கடத்தப்பட்டார். தம்புள்ளைக்குச் சென்ற நால்வர் அடங்கிய கடத்தல் குழுவினர் அவரை காரில் கடத்தி வந்துள்ளனர்.
தம்புள்ளையிலிருந்து கடத்திவரப்பட்ட ஹஸீம் கம்பளை ரத்மல்கடுவ எனுமிடத்தில் மர ஆலை உரிமையாளர் ஒருவரின் வீடு ஒன்றில் 6 நாட்களும், பின்பு அவரது மைத்துனர் ஒருவரின் வீடொன்றில் 4 நாட்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கம்பளை பொலிஸார் ெதரிவித்தனர்.
கம்பளை – ரத்மல்கடுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்தே குறிப்பிட்ட நபரை பொலிஸார் மீட்டுள்ளனர்.
விஷேட அதிரடிப்படையினர் மற்றும் கம்பளை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து இந்த மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். கடந்த 6ஆம் திகதி குறிப்பிட்ட நபர் மீட்கப்பட்டுள்ளார்.
மொஹமட் ஹஸீம் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் ‘‘தேசிய லொத்தர் சீட்டிழுப்பில் தனக்குக் கிடைத்த 7½ கோடி ரூபா பரிசுத் தொகையை மறைத்து வைத்துள்ள இடத்தைக் காண்பிக்குமாறு கோரியே என்னைக் கடத்தி வந்தவர்கள் 10 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து தாக்கினார்கள்.
என்னை பெல்டினால் தாக்கினார்கள். உடலெல்லாம் வலிக்கிறது. கழிப்பறைக்குச் செல்லும்போது என்னுடன் இருவர் காவலுக்கு வந்தார்கள். என்மீது பல இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள்.
குருநாகல் வர்த்தகர் ஒருவர் வந்து நான் அவருக்கு ஒருகோடி 20 இலட்சம் ரூபா கடன் வழங்க இருக்கிறது என்று கடிதம் எழுதி கையொப்பம் வாங்கிக் கொண்டார்.
நான் அவர்களுடன் குறிப்பிட்ட வீட்டில் விருப்பத்துடனே தங்கியிருப்பதாகக் குறிப்பிட்டு என்னிடமிருந்து கடிதமொன்றினையும் பெற்றுக்கொண்டார்கள். பொலிஸாரின் ஆலோசனைப்படியே கடிதம் பெறுவதாகவும் சந்தேக நபர்கள் கூறினார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை சந்தேக நபர்களுக்கும் குறிப்பிட்ட நபருக்கும் பணக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருக்கலாம். அவர் விருப்பத்துடனே சந்தேக நபர்களுடன் தங்கியிருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் லொத்தர் பரிசுத்தொகையை பரிசு பெற்ற நபர் வேறொருவரிடம் பாதுகாப்புக்காக கையளித்ததாக கூறப்படுகிறது. இந்நபர் ஜப்பானுக்குச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கம்பளைப் பொலிஸார் மர ஆலை உரிமையாளர் உட்பட நால்வரைக் கைது செய்து இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.- Vidivelli