எம்.பி.எம்.பைறூஸ்
ஓமான் – இலங்கை நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு நான்கு தசாப்தங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு வெளிவந்த ‘இலங்கை –ஓமான் உறவுகள் -: நேற்று, இன்று, நாளை’ எனும் தலைப்பிலான நூல் இலங்கையின் வெளியுறவுத்துறை வரலாற்றில் பாதுகாக்கப்பட வேண்டிய ஓர் ஆவணம் என்றால் மிகையாகாது.
வெளிவிவகார அமைச்சின் கொள்கைத் திட்டமிடல், மீளாய்வு திட்ட அமுலாக்கம் மற்றும் மனித வள அபிவிருத்திக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகமாக தற்போது கடமையாற்றும் சிரேஷ்ட இராஜதந்திரி ஓ.எல். அமீர் அஜ்வாத், தான் ஓமானுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிய காலத்திலேயே இந்நூலை தொகுத்து வெளியிட்டிருந்தார். இந் நூல் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் ஓமானிலும் இவ்வருட ஆரம்பத்தில் இலங்கையிலும் வெளியிடப்பட்டது.
இரு நாடுகளுக்குமிடையிலான கடந்த கால உறவை மீட்டிப் பார்த்து, சமகால உறவுக்கு முக்கியத்துவமளித்து எதிர்காலத்தில் உறவை மேலும் வலுப்படுத்துவதற்குத் தேவையான தகவல்களை வழங்குவதே இந்நூல் வெளியிடப்பட்டுள்ளதன் நோக்கம் என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
இவ்விரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவுகள் பல நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டவை. இந்து சமுத்திரத்தில் இரு நாடுகளும் பிரதான கடல்மார்க்கத்தில் அமையப் பெற்றுள்ளமையானது இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் பாரிய செல்வாக்குச் செலுத்த காரணம் எனலாம். எனினும் உத்தியோகபூர்வமான இராஜதந்திர உறவுகள் 1981 இலேயே ஆரம்பமாகியுள்ளன.
இந்நூல் இலங்கைக்கும் அரபு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவுகள், இலங்கை மற்றும் ஓமானுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள், இரு தரப்பு உறவுகளின் கடந்த காலப் பதிவுகள், ஓமானில் வாழும் இலங்கைச் சமூகம் மற்றும் இரு நாடுகளினதும் எதிர்கால உறவுகள் ஆகிய ஐந்து முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.
இந்நூலில் பல சுவாரஷ்யமான விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. ஓமானின் முதலாது பொலிஸ் மாஅதிபர் ஓர் இலங்கையர் என்றால் நம்ப முடிகிறதா? இலங்கையரான பீலிக்ஸ் பெரேரா 1969 இல் ஓமான் நாட்டு பொலிஸ் சேவையில் இணைந்து 1974 இல் அந்நாட்டின் பொலிஸ் மா அதிபராக பதவியுயர்த்தப்பட்டார். அந்நாட்டின் மிகப் பொறுப்புமிக்க பதவியில் இலங்கையர் ஒருவர் அமர்த்தப்பட்டமையானது இலங்கை மீதான ஓமானின் நன்மதிப்பைப் பறைசாற்றுவதாக உள்ளது.
ஓமானின் பிரபல இனிப்புப் பண்டமான ‘ஓமானி ஹல்வா’ இலங்கையில் மஸ்கட் என்று அழைக்கப்படுவதன் பின்னணி பற்றியும் இந்நூல் விளக்குகிறது. மஸ்கட் என்பது ஓமானின் தலைநகரம் என்பதை நாம் அறிவோம்.
கிழக்கில் காத்தான்குடி என்ற பெயர் வந்ததற்கு ‘கஹ்தான்’ எனும் அரபுப் பழங்குடியினர் இங்கு வந்து குடியேறியமை காரணமாக இருக்கலாம் என நூலாசிரியர் குறிப்பிடுகிறார். கஹ்தான் பழங்குடியினர் யெமன், சவூதி அரேபியா மற்றும் ஓமான் ஆகிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்களாவர் என்ற வரலாற்றையும் இந்த நூல் உள்ளடக்கியுள்ளது.
இந் நூலை எழுதுவதற்காக துதுவர் அமீர் அஜ்வாத் மிகுந்த சிரமமெடுத்திருப்பதை காண முடிகிறது. இதில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தகவலுக்கும் ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வரலாற்று நூல்களும், ஊடக செய்திகளும் ஓமான் தூதரக ஆவணங்களும் இந்நூலை தொகுப்பதற்கு பெரிதும் உதவியுள்ளன.
இந்நூல் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்படுள்ளதுடன் தொடர்புடைய ஏராளமான புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் 1987 இல் ஓமானில் இலங்கைத் தூதரகத்தை திறந்துவைத்தமை, 2021 இல் நடந்த இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச கிரிக்கட் போட்டி, இரு நாடுகளுக்குமிடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களின் பதிவுகள் உட்பட பல புகைப்படங்கள் நூலுக்கு அழகு சேர்க்கின்றன.
இலங்கைக்கும் ஓமானுக்குமிடையிலான கிரிக்கட், வர்த்தகம், கலாசாரம், தொழில்வாய்ப்பு என சகல துறைகள் பற்றியதுமான விரிவான விபரங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக எதிர்கால கண்ணோட்டம் எனும் தலைப்பிலான இறுதிப் பகுதியில் ஓமான் நாட்டவர் இலங்கையில் முதலீடு செய்வதற்குள்ள வாய்ப்புகள் பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நிச்சயம் அந்நாட்டு வர்த்தகர்களை ஈர்க்கும் எனலாம்.
தூதுவர் அமீர் அஜ்வாத் எழுதி வெளியிட்டுள்ள இந்நூல் இலங்கை- ஓமான் இராஜதந்திர உறவுகளுக்கான ஒரு Encyclopedia என்றால் மிகையாகாது. அவருக்குப் பின்னர் பதவி வகிக்கவுள்ள ஓமானுக்கான இலங்கைத் தூதுவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு பற்றிய ஆய்வாளர்கள், மாணவர்கள், ஓமானில் வசிக்கும் இலஙகையர்கள் அனைவருக்கும் இந்நூல் மிகப் பயனுள்ளத்தாக அமைந்துள்ளது.
தூதுவரின் இந்த முன்மாதிரியை ஏனைய இராஜதந்திரிகளும் பின்பற்ற வேண்டும். இலங்கைக்கும் பல மத்திய கிழக்கு நாடுகளுக்குமிடையிலான உறவில் அண்மைக் காலங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை நாம் அவதானிக்கிறோம். இந்த விரிசலை குறித்து, உறவை மேலும் கட்டியெழுப்ப ஏனைய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்களும் இவ்வாறான நூல்களை தொகுக்க முன்வர வேண்டும்.-Vidivelli