(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை தயாரித்து நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு கையளிக்கவுள்ள அறிக்கைக்கு அனுமதியளிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பில் முஸ்லிம் சிவில் அமைப்புகள் சார்பில் உலமாசபை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு கையளிக்கப்படவுள்ள முன்மொழிவை தாம் நிராகரிப்பதாக ஏற்கனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பில் முஸ்லிம் கவுன்ஸில் தெளிவுபடுத்தவேண்டும் என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை கோரியிருந்தது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பான கலந்துரையாடலொன்று அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகளுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகளுக்குமிடையில் கொழும்பில் உலமா சபையின் தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்றது. நேற்று முன்தினம் மாலை இடம் பெற்ற கலந்துரையாடலின்போது ‘ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை எனத் தெரிவித்ததுடன் ‘முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் சுமுகமான தீர்வுகளுக்கு முஸ்லிம் கவுன்ஸில் பூரண ஒத்துழைப்பு வழங்கும் எனத் தெரிவித்தது என முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்தார்.
இந்தச் சர்ச்சை தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலும் இணைந்து கூட்டறிக்கையொன்றினை வெளியிடத் தீர்மானித்துள்ளன.– Vidivelli