மார்க்க வழிகாட்டல்களை பேணாது ஜும்ஆ நடைபெறும் இடத்தில் பிரசங்கம் செய்யாதீர்
கதீப்மார்கள், இமாம்களிடம் உலமா சபை வேண்டுகோள்
மார்க்க வழிகாட்டல்களைப் பேணாது ஜும்ஆக்கள் நடைபெறக்கூடிய இடங்களில் பிரசங்கம் செய்வதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுமாறு கதீப்மார்கள் மற்றும் இமாம்களிடத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன், மார்க்க ரீதியாக ஜும்ஆவை நிறைவேற்றுவதற்கு அனுமதியுள்ள இடங்களில் ஜும்ஆக்களை நிறைவேற்றிக் கொள்ளுமாறும் உலமா சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜும்ஆக்கள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி, பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித் ஆகியோரினால் வெளியிடப்பட்டுள்ள அவ்வறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொவிட் 19 காலப்பகுதியில் சில சங்கடங்களின் காரணமாக தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட ஜும்ஆக்கள் அச்சங்கடங்கள் நீங்கியதன் பின்னரும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. அவை மார்க்கத்தின் பிரகாரம் சரியானதா என ஜம்இய்யாவின் அங்கத்தவர்கள், மஸ்ஜித்களின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் தெளிவை வேண்டுகின்றனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஓரிடத்தில் புதிதாக ஜும்ஆ ஆரம்பிக்கும் விடயத்தில் மார்க்க ரீதியாக வழிகாட்டி வருகின்றது.
ஓர் ஊரில் ஒரு ஜும்ஆவை நிறைவேற்றுவதே அடிப்படையாகும். எனினும், நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் மார்க்க வழிகாட்டல்களைக் கவனத்திற்கொண்டு பிறிதொரு ஜும்ஆவை நடாத்துவதற்கு அனுமதியுள்ளது.
அந்தவகையில் ஜம்இய்யா அன்றுதொட்டு இன்று வரைக்கும் ஜும்ஆ விடயமாக மார்க்க ரீதியாக வழிகாட்டலைக் கோரும்பட்சத்தில் குறித்த மஸ்ஜிதுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாக் குழு நேரடியாக விஜயம் செய்து ஆய்வுகள் மேற்கொண்டதன் பின்னரே மார்க்க வழிகாட்டல் வழங்கப்பட்டு வருகின்றது.
ஓர் இடத்தில் மார்க்க வழிகாட்டல்களை பேணாது ஜும்ஆ நடைபெறுமாயின் அந்த ஜும்ஆ செல்லுபடியற்றதாகவே ஆகிவிடும். அத்துடன் அந்த ஜும்ஆவிலே கலந்து கொள்ளக்கூடிய மக்களது ஜும்ஆவுக்கு யாரெல்லாம் அதை நடாத்துவதற்கு உறுதுணையாக இருந்தார்களோ, இருக்கின்றார்களோ அவர்களே அதற்குப் பொறுப்பும் கூற வேண்டும்.
அத்துடன் குத்பாப் பிரசங்கம் நடாத்தக்கூடிய கதீப்மார்கள் மற்றும் இமாம்கள் மார்க்க வழகாட்டல்களைப் பேணாது ஜும்ஆக்கள் நடைபெறக்கூடிய இடங்களில் பிரசங்கம் செய்வதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுமாறு ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.
எனவே, பொதுமக்கள் மார்க்க ரீதியாக ஜும்ஆவை நிறைவேற்றுவதற்கு அனுமதியுள்ள இடங்களில் உங்களது ஜும்ஆக்களை நிறைவேற்றிக் கொள்ளுமாறு ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli