-
முறையான விசாரணைகளை நடத்துமாறு நீதிமன்றம் பணிப்பு
-
சத்திரசிகிச்சை திகதி முற்படுத்தப்பட்டமை தொடர்பிலும் சந்தேகம்
(எம்.எப்.அய்னா)
சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் இதுவரை முன் வைக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் மற்றும் குழந்தையின் மருத்துவ அறிக்கைகளை முன்னிறுத்தி விசாரணைகளை நடாத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய பொரளை பொலிஸாருக்கு நேற்று (9) உத்தரவிட்டார்.
குறித்த குழந்தையின் மரண விசாரணை நேற்று தொடர்ந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்றைய தினம் விசாரணைகளை முன்னெடுக்கும் பொரளை பொலிஸார், மேலதிக விசாரணை அறிக்கையினை நீதிமன்றுக்கு சமர்ப்பித்தனர்.
இதன்போது திறந்த மன்றில் பேசிய நீதிவான் ரஜீந்த்ரா ஜயசூரிய ‘உயிரிழந்த குழந்தையின் சிறுநீரகங்கள் உரிய வகையில் உரிய இடத்தில் அமையப் பெற்றிருந்தன என்பதை வைத்திய அறிக்கைகளும் சாட்சிகளும் பறைசாற்றுகின்றன. அவ்வாறான நிலையில் அந்த அறிக்கைகள் ஊடாக விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும்.’ என்றார்.
இதன்போது, விசாரணைகளை முன்னெடுக்கும் பொரளை பொலிஸார், குழந்தையின் அகற்றப்பட்ட சிறுநீரகங்களில் ஒன்று வைத்தியசாலையில் இருப்பதாக தகவல் உள்ளது என குறிப்பிட்டனர்.
மரணித்த குழந்தையின் குடும்பத்தாரின் நலனுக்காக மன்றில் ஆஜராகும் சட்டத்தரணிகள் குழாமின் சட்டத்தரணி வைத்தியர் யூசுப் இதன்போது, முன் வைக்கப்பட்டுள்ள வைத்திய அறிக்கைகள் தொடர்பில் மன்றுக்கு தெளிவுபடுத்தினார். அத்துடன் இதன்போது திறந்த மன்றில் விடயங்களை முன் வைத்த சட்டத்தரணி வைத்தியர் யூசுப், குழந்தை ஹம்திக்கு பெப்ரவரி மாதமே சத்திர சிகிச்சை செய்யப்பட உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது சத்திர சிகிச்சை எந்த அவசர காரணமும் இன்று முன் கூட்டி நவம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டமையை மையப்படுத்தி கேள்வி எழுப்பினார். இலங்கையில் மருந்து தட்டுப்பாடு இருந்த காலப்பகுதியில், எந்த அவசர தேவையும் அற்ற நிலையில், அந்த சிறுநீரக சத்திர சிகிச்சை செய்யப்பட்டமை சந்தேகத்துக்குரியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, அவ்வாறெனில், குழந்தையின் இரு சிறுநீரகங்களும் உரிய வகையில் இருந்தமை தெளிவாகும் பின்னணியில், ஒன்றை அகற்றும் போது மற்றையது தானாக வந்துவிட்டது என கூறுவதை எல்லாம் இலகுவாக நம்பிவிட முடியாது என திறந்த மன்றில் கூறினார். அதனால் பொலிசார் கூறுவதைப் போன்று ஒரு சிறுநீரகம் இருக்குமாக இருந்தால் மற்றையது தொடர்பிலும் தகவல்களை வெளிப்படுத்துவது அவசியம் என சுட்டிக்காட்டிய நீதிவான், எந்த முடிவுகளுக்கும் வராது சாட்சிகளின் அடிப்படையில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிசாருக்கு பணித்தார்.
இந் நிலையில் குழந்தை ஹம்தியின் மரண விசாரணைகள் நேற்றும் இடம்பெற்றன. நேற்று குழந்தையின் தந்தை மொஹம்மட் நிசார் மொஹம்மட் பஸ்லிம் சாட்சியம் அளித்தார். பொரளை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் தயாசிரியின் நெறிப்படுத்தலில் இந்த சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
இதன்போது பிறப்பில் அக்குழந்தைக்கு எந்த நோய் நிலைமையும் இருக்கவில்லை எனவும் பிறந்து ஒன்பது மாதங்களின் பின்னர் ஏற்பட்ட நிலைமை மற்றும் அதற்காக குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பில் விரிவாக தந்தை சாட்சியமளித்தார்.
தன் குழந்தையின் மரணத்துக்கு முன்னர் வைத்தியர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்திருந்த்தன என்பது தொடர்பிலும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து மேலதிக மரண விசாரணை சாட்சிப் பதிவு எதிர்வரும் 22 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.– Vidivelli