நாடளாவிய ரீதியில் ஊடக அறிவை போதிக்கும் முஸ்லிம் மீடியா போரத்தின் பணி பாராட்டுக்குரியது
பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தாரிக் முஹம்மத் ஆரிபுல் இஸ்லாம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
பாடசாலை மாணவர்களது ஊடக அறிவை மேம்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நாடளாவிய ரீதியில் ஆற்றிவரும் பங்களிப்பு பாராட்டுக்குரியது என இலங்கையின் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் முஹம்மத் ஆரிபுல் இஸ்லாம் தெரிவித்தார்.
மாவனெல்லை பதுரியா மத்திய கல்லூரியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்திய 74 ஆவது ஊடக கருத்தரங்கின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே உயர் ஸ்தானிகர் இவ்வாறு தெரிவித்தார்.
போரத்தின் தலைவர் என்.எம். அமீன் மற்றும் கல்லூரி அதிபர் ஏ.எல்.அப்துல் ரகுமான் ஆகியோரது கூட்டுத்தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.
110 மாணவர்கள் மற்றும் ஊடகம் போதிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் விரிவுரைகள் நடத்தப்பட்டன.
கலாநிதி எம்.ஐ.எம். அமீன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் மேலும் கூறியதாவது,
ஊடகங்களை எதிர்நோக்குவது மிகவும் முக்கியமானது. இதனாலே முஸ்லிம் சமூகம் என்ன செய்கின்றது என்பதை மற்ற சமூகங்கள் அறிந்து கொள்ளலாம். பதுரியா கல்லூரியில் புறம்பான ஊடகக் கழகம் ஒன்று அர்ப்பணத்துடன் செயற்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகின்றேன்.
நாட்டில் எத்தனை பாடசாலைகளில் இவ்வாறான ஊடகக் கழகங்கள் இருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது. மாணவர்களுக்கு ஊடக அறிவை ஊட்டும் பணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆற்றும் பணி பாராட்டுக்குரியது.
முஸ்லிம் மீடியா போரம் நாடளாவிய ரீதியில் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றது. மாணவர்களுக்கு ஊடகத்தின் முக்கியம் பற்றி அறிவூட்டுவதில் முஸ்லிம் மீடியா போரம் ஆற்றும் சேவை பாராட்டுக்குரியது. இன்றைய கருத்தரங்கில் ஊடகத்தின் நுட்பங்களை மாணவர்களுக்குப் போதித்துள்ளார்கள். முஸ்லிம் மீடியா போரம் இவ்வாறான ஊடகக் கருத்தரங்குகளை தொடர்ந்தும் நடத்தி வருகின்றார்கள். அந்த முயற்சிக்கு தலைமை தாங்கும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் ஒரு நல்ல பணியை செய்து வருகின்றார். அவர் எங்களுடன் நெருங்கிப் பழகுகின்றார். ஏனைய நாட்டு தூதுவர்களிடமும் அவர் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கின்றார். முஸ்லிம் மீடியா போரம் மாணவர்களின் ஊடக அறிவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எமது ஆதரவு என்றும் கிடைக்கும் என்றார்.
கலாநிதி எம்.சி.எம். ரஸ்மின், தாஹா முஸம்மில், ஜாவித் முனவ்வர், அஷ்ரப் ஏ சமட் ஆகியோர் விரிவுரைகளை இந்நிகழ்வில் நடத்தினர்.
முஸ்லிம் மீடியா போரத்தின் பொருளாளர் எம். எம். ஜெஸ்மின், உப தலைவர்களில் ஒருவரான எம்.ஏ.எம். நிலாம், இணை தேசிய அமைப்பாளர் சாதிக் சிஹான், வசந்தம் மற்றும் ஐ.ரீ.என். செய்திப் பிரிவு பொறுப்பாசிரியர் சித்திக் ஹனீபா, சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர் ஹுஸைன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பதுரியா பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஏ.ஜே.எப். ஜெமினா, அதிபர் ஏ.எல்.ஏ. ரஹ்மான், திருமதி சாலி ஏ. மஜீட் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தூதுவரினால் ஊடகக் கழக மாணவர்களுக்கு சின்னம் வழங்கி கௌரவம் வழங்கப்பட்டது.
இங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் உரையாற்றும் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இதுவரை 74 கருத்தரங்குகளை பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்காக நடத்தி இருக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் மத்தியிலே நாங்கள் ஊடகத்தைப் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம். அதில் நாங்கள் வெற்றியும் கண்டிருக்கின்றோம்.
இன்று இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக பங்களாதேஷின் உயர் ஸ்தானிகர் வருகை தந்திருக்கின்றார். பங்களாதேஷைப் பொறுத்த வரையில் ஒரு காலத்தில் வறிய நாடாக இருந்தது. இன்று அந்த நிலை மாறி அங்கே இருக்கின்ற ஆட்சியாளர் ஷேக் ஹஸீனாவின் தலைமையில் அந்த நாடு முன்னேற்றம் கண்டுள்ளது. இலங்கை நிதி நெருக்கடியை எதிர்கொண்டபோது முதலாவதாக இலங்கைக்கு எந்த நிபந்தனைகளும் இன்றி 200 மில்லியன் டொலர் கடனை பங்களாதேஷ் வழங்கி இருக்கின்றது.
எமது தாய் நாட்டுக்கு பங்களாதேஷ் செய்த உதவியை இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். பங்களாதேஷ் ஒப்பீட்டு அளவில் ஊடகத்துறையிலே வளர்ச்சி கண்டு வரும் ஒரு நாடு.
எமது அங்கத்தவர்களுக்கு ஊடகப் பயிற்சிகளைப் பெற்றுத் தர தூதுவர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போரத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.- Vidivelli