ரொஹான் குணரத்னவின் நூலும் சர்ச்சைகளும்

0 353

றிப்தி அலி

ஈஸ்டர் தற்­கொலை தாக்­கு­தலை தொடர்ந்து ஐந்து இஸ்­லா­மிய அமைப்­புகள் மீது விதிக்­கப்­பட்ட தடை­யினை இலங்கை அர­சாங்கம் நீக்­கி­யதை மீள் பரீ­சி­லனை செய்ய வேண்டும். இந்த தடை நீக்கம் ஒரு “மோச­மான தவ­றாகும்”. இதுபோன்று கடும்­போக்­கான இஸ்­லா­மிய சமயத் தலை­வர்கள் மற்றும் புத்­த­கங்கள் மீது விதிக்­கப்­பட்­டுள்ள தடை­யினை நீக்­கக்­கூ­டாது. அடுத்த பத்தோ அல்­லது இரு­பதோ வரு­டங்­களில் இன்­னு­மொரு சஹ்­ரானை உரு­வாக்க வேண்டும் என்றால் இஸ்­லா­மிய சமயத் தலை­வர்கள் மீதான தடை­யினை நீக்­குங்கள். இந்­தி­யா­வினைச் சேர்ந்த பி.ஜே.யினா­லேயே சஹ்ரான் மற்றும் நௌபர் ஆகியோர் அடிப்­ப­டை­வா­தி­க­ளாக மாற்­றப்­பட்­டனர். எல்லா சம­யத்­திலும் அடிப்­ப­டை­வா­திகள் காணப்­ப­டு­கின்­றனர். இதனால், அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்கும் நிகழ்ச்சித் திட்டம் இலங்­கைக்கு மிக அவ­சி­ய­மாகும். இது அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டா­விட்டால் நாம் மற்­றொரு தாக்­கு­தலைச் சந்­திக்க வேண்­டி­வரும்.”

கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்பில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் சர்­வ­தேச பயங்­க­ர­வாத நிபுணர் என தன்னைத் தானே அழைத்­துக்­கொள்ளும் ரொஹான் குண­ரத்ன நிகழ்த்­திய உரையின் ஒரு பகு­தியே இது­வாகும்.
‘இலங்­கையின் உயிர்த்த ஞாயிறு படு­கொலை: சர்­வ­தேச சமூ­கத்­திற்­கான பாடங்கள்’ எனும் தலைப்பில் அவர் எழு­திய நூல் கடந்த வெள்­ளிக்­கி­ழமை (28) கொழும்பு – 07 இலுள்ள பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச கற்­கை­க­ளுக்­கான நிலை­யத்தில் வெளி­யி­டப்­பட்­டது.

இந்த நிகழ்வில் சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­வர்த்­தன, வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி, சட்­டமா அதிபர் சஞ்­சய ராஜ­ரட்னம், முன்னாள் ஆளு­நர்­க­ளான அசாத் சாலி, வசந்த கரு­ணா­கொட, முன்னாள் அமைச்சர் சரத் வீர­சே­கர மற்றும் காலஞ்­சென்ற அமைச்சர் அலவி மௌலா­னாவின் புதல்வர் நகீப் மௌலானா உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­டனர்.
இதில் உரை­யாற்றும்போதே ரொஹான் குண­ரத்ன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
ஜம்­இய்­யதுல் அன்­சாரி சுன்­னத்துல் முஹம்­ம­தியா, அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் ஜமாஅத் மற்றும் யுனைட்டட் தௌஹீத் ஜமாஅத் ஆகிய இஸ்­லா­மிய அமைப்­புக்கள் உட்­பட 11 அமைப்­புகள் முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வினால் கடந்த 2021.04.13 ஆம் திகதி இலங்­கையில் தடை செய்­யப்­பட்­டன.
இத்­த­டைக்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்தில் பல அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டன. அது மாத்­தி­ர­மல்­லாமல், குறித்த தடை­யினை நீக்­கு­மாறு பல்­வேறு தரப்­பி­னரால் தொடர்ச்­சி­யாக அர­சாங்­கத்­திடம் கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வந்­தன.
இக்­கோ­ரிக்­கைகள் தொடர்பில் பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்ச, அமைச்­ச­ரவை மற்றும் சட்­டமா அதிபர் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ருடன் நீண்ட கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்ட பின்னர் மேலே பெயர் குறிப்­பி­டப்­பட்ட 5 அமைப்­புக்கள் மீதான தடை­யினை நிபந்­த­னை­க­ளுடன் நீக்­கு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­தது.
இதற்­க­மைய, குறித்த தடை­யினை நீக்­கு­வ­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் கடந்த வியா­ழக்­கி­ழமை (27) பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்­டது.
இவ்­வா­றான நிலையில், ஜனா­தி­ப­தி­யினால் மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னத்­தினை கேள்­விக்­குட்­ப­டுத்­து­வ­தற்­கான அதி­கா­ரத்­தினை ரொஹான் குண­ரத்­ன­விற்கு வழங்­கி­யது யார்?
அர­சாங்­கத்தின் முக்­கிய பிர­மு­கர்­க­ளான வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சட்­டமா அதிபர் சஞ்­சய ராஜ­ரட்னம் ஆகியோர் முன்­னி­லை­யி­லேயே இவர் ஜனா­தி­ப­தி­யினை கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளமை கவ­னிக்­கத்­தக்க விட­ய­மாகும்.
தடை செய்­யப்­பட்ட 11 அமைப்­பு­களில் மேற்­படி 5 அமைப்­பு­க­ளுக்கும் தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டைய எந்­த­வித குற்­றச்­சாட்­டுக்­களும் இல்லை என்­பது நிரூ­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே பாது­காப்பு அமைச்சு இந்தத் தடையை நீக்­கி­யுள்­ளது. ஏனைய 6 அமைப்­புகள் மீதான தடைகள் தொடர்­கின்­றன.
மேற்­படி குறித்த இஸ்­லா­மிய அமைப்­புக்கள் தடை செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்னர் இலங்கை வாழ் முஸ்­லிம்­க­ளுக்கும், ஏனைய இனத்­த­வர்­க­ளுக்கும் பல்­வேறு வகை­யான நலன்­புரித் திட்­டங்­களை பாரி­ய­ளவில் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். இதனால் நாட்­டுக்குள் பாரி­ய­ள­வி­லான அந்­நியச் செலா­வ­ணிகள் கொண்­டு­வ­ரப்­பட்­டன.
எனினும், குறித்த தடை­யினை அடுத்து இந்த அமைப்­புக்­களின் அனைத்து செயற்­திட்­டங்­களும் நிறுத்­தப்­பட்­ட­தனால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான குடும்­பங்கள் நிர்க்­க­தி­யா­ன­துடன் நாட்டில் ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­க­டியின் போது சொல்­லொணா துய­ரங்­க­ளையும் எதிர்­நோக்க வேண்டி ஏற்­பட்­டது.
இத­னி­டையே, “குறித்த நூல் வெளி­யீட்டு நிகழ்வில் கலந்­து­கொள்ள வேண்டாம்” என நாட்­டி­லுள்ள முக்­கிய சில முஸ்லிம் அமைப்­புக்கள் வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்­ரி­யினை நேர­டி­யாக சந்­தித்து கோரிக்­கை­யொன்­றினை முன்­வைத்­தி­ருந்­தன.
இக்­கோ­ரி­யினை நிரா­க­ரித்த அமைச்சர் அலி சப்ரி, குறித்த நூல் வெளி­யீட்டில் கலந்­து­கொண்டு சுமார் 18 நிமிட உரை­யொன்­றினை நிகழ்த்­தினார். ரொஹான் குண­ரத்­ன­வினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட மேடையில் இஸ்லாம் மற்றும் அல்­குர்ஆன் தொடர்பில் எடுத்துக் கூறவே தான் இந்த நிகழ்வில் பங்­கேற்­ப­தாக அமைச்சர் அலி சப்ரி தன்னைச் சந்­தித்த அமைப்­பு­க­ளிடம் குறிப்­பிட்­டி­ருந்தார்.
இந்த நூல் வெளி­யீட்டில் வெளி­வி­வ­கார அமைச்சர் பங்­கேற்­கக்­கூ­டாது என முஸ்லிம் அமைப்­புக்­க­ளினால் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்ட கூட்­டத்தில் பங்­கேற்ற முன்னாள் ஆளுநர் அசாத் சாலியும் குறித்த நூல் வெளி­யீட்டில் பங்­கேற்­றி­ருந்தார்.
இலங்கை கட்­டாயம் அமுல்­ப­டுத்த வேண்டும் என்று ரொஹான் குண­ரத்ன கூறு­கின்ற அடிப்­ப­டை­வா­தி­களை புன­ர்­வாழ்­வ­ளிக்கும் நிகழ்ச்சித் திட்­டத்­திற்கு உள்­நாட்டில் ஏற்­க­னவே பாரிய எதிர்ப்­புக்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.
குறிப்­பாக, இந்த புன­வர்­வாழ்­வ­ளிப்பு செயற்­திட்டம் தொடர்பில் வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு எதி­ராக பல மனுக்கள் உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன. இந்த புனர்­வாழ்­வ­ளிக்கும் திட்டம் அமு­லுக்கு வரு­மானால் அதன் கீழ் அர­சுக்கு எதி­ரான சக­லரும் கைது செய்­யப்­பட்டு, அடிப்­ப­டை­வா­தி­க­ளாக முத்­திரை குத்­தப்­பட்டு, புனர்­வாழ்­வுக்கு அனுப்­பப்­ப­டலாம் என இதனை எதிர்க்கும் தரப்­புகள் நியா­ய­மான கார­ணங்­களை முன்­வைக்­கின்­றனர்.
கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியில் தேசிய பாது­காப்பு கற்­கை­க­ளுக்­கான நிலை­யத்தின் பணிப்­பாளர் நாய­க­மாக செயற்­பட்ட ரொஹான் குண­ரத்ன, ரணில் விக்­ர­ம­சிங்க ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்­டதன் பின்னர் குறித்த பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்ளார். இவ்­வா­றான நிலை­யி­லேயே ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்­கை­யினை ரொஹான் குண­ரத்ன கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யுள்ளார்.
இதே­வேளை, ரொஹான் குண­ரத்­ன­வினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் இந்­தி­யா­வி­லுள்ள இஸ்­லா­மிய பிர­சா­ர­க­ரான பி.ஜே.வீடி­யோ­வென்­றினை வெளி­யிட்­டுள்ளார். இதில் அவர் கருத்து வெளி­யி­டு­கையில்,
“அப்துர் ராசிக்கின் ஊடாக என்னைத் தொடர்­பு­கொண்ட ரொஹான் குண­ரத்ன வுடன் சுமார் இரண்­டரை மணி நேர கலந்­து­ரை­யா­ட­லொன்றை இணைய வழி­யாக மேற்­கொண்டேன். இதன்போது பயங்கரவாதம் தொடர்பில் அவரினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பூரண விளக்கம் வழங்கினேன். இந்த கலந்துரையாடலை அடுத்து, அப்துர் ராசிக்கிற்கு ரொஹான் குணரத்ன அனுப்பிய வட்ஸ்அப் தகவலில் “PJ is a practical leader’’ எனக் குறிப்பிட்டிருந்தார்” என்றார்.
இப்படி பி.ஜே.யினை அன்று புகழ்ந்த ரொஹான் குணரத்ன, இன்று பிஜேயினை விமர்சிக்கின்றமை எதற்காக என பலரும் கேள்வியெழுப்புகின்றனர்.
ரொஹான் குணரத்னவின் நூலில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் நிபுணர்கள் அடங்கியுள்ள குழுவினர் வாசித்து, சமூகம் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விரிவான பதில்கள் வழங்கப்பட வேண்டும். இலங்கை முஸ்லிம் சமூகம் தொடர்பில் அவர் கொண்டுள்ள தப்பபிப்பிராயங்கள் நீக்கப்பட வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.