அன்று சபாநாயகரை எதிர்த்தவர்கள் இன்று சரி காண்கின்றனர்
மஹிந்த அணி சபாநாயகரின் காலில் விழுந்து மன்னிப்புக் கோர வேண்டும் என்கிறது ம.வி.மு
அரசியல் அமைப்பினை மீறி ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராகவும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் சபாநாயகர் செயற்பட்டபோது அவரை அசிங்கப்படுத்திய மஹிந்த அணியினர், இன்று எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்கப்படுவதாக தெரிவித்தவுடன் சபாநாயகரின் தீர்ப்பே இறுதித்தீர்ப்பெனக் கூறுகின்றனர். முதலில் இந்த சூழ்ச்சிக் கும்பல் சபாநாயகரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கவேண்டும். அதேபோல் சபாபீடத்துக்கு முன்னால் மண்டியிட்டு மன்னிப்புக்கோர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி சபையில் தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை
ஜே.வி.பி. எம்.பி. நளிந்த ஜயதிஸ்ஸவினால் முன்வைக்கப்பட்ட நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்கக்கோரும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீது நேற்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ம.வி.மு.வின் உறுப்பினர் பிமல் ரத்நாயக இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஒரு தரப்பினர் பகலில் ஜனாதிபதி மைத்திரியுடனும், இரவில் மஹிந்த ராஜபக் ஷவுடனும் இருந்த சூழ்ச்சிகார கும்பலின் சூழ்ச்சிகளின் உச்சகட்ட சூழ்ச்சி கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பட்டப் பகலிலேயே நடைபெற்றது. மைத்திரிபால சிறிசேன தான்தோன்றித்தனமாக தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளவே, இந்த சூழ்ச்சியை அரங்கேற்றினார். இதன்போது ஜனநாயகத்தை பாதுகாக்க நாங்கள் எடுத்த முயற்சிகளின் போது சபாநாயகரை மிகவும் இழிவாக விமர்சித்தனர். சபாநாயகரின் கதிரையை, சபாபீடத்தையும் உடைத்தெறிந்தனர். சபாநாயகர் வழங்கிய தீர்ப்பு ஜனநாயக விரோதம் எனவும் அரசியல் அமைப்பினை மீறியது எனவும் மிகவும் கேவலமாக விமர்சித்து கீழ்த்தரமாக சபையில் நடந்துகொண்டனர். ஆனால் இன்று எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து சபாநாயகரின் தீர்ப்பு தமக்கு சார்பாக வந்தவுடன் சபாநாயகர் தீர்ப்பே இறுதி தீர்ப்பு என்கின்றனர். அன்று ஜனாதிபதி முன்னெடுத்த அரசியல் அமைப்பு விரோத செயற்பாடுகளை சபாநாயகர் ஜனநாயக ரீதியில் எடுத்தார், அன்று சபாநாயகர் எடுத்த முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால் அன்று தமக்கு சாதகமாக வரவில்லை என்றவுடன் பாராளுமன்றத்தையும் சபாநாயகரையும் அவமதித்தவர்கள் இன்று சபாநாயகர் தீர்மானம் இறுதித் தீர்மானம் என கூறுகின்றனர். ஆகவே இந்த சூழ்ச்சிக் கும்பல் சபாநாயகரின் காலில் விழுந்து மன்னிப்புக்கோர வேண்டும் என்பதுடன், சபாபீடத்துக்கு மண்டியிட்டு மன்னிப்புக்கோர வேண்டும். திருட்டு வழியில் தமது பிரதமர் பதவியை தக்கவைக்க நினைத்தவர்கள் தான் இன்று தமது பாராளுமன்ற உறுப்புரிமையை தக்கவைத்துக்கொள்வதற்காக போராடி வருகின்றனர். இவர்கள் ஒன்றினை நன்றாக நினைவில் வைத்துகொள்ள வேண்டும். ஜனநாயகத்துக்கு எப்போதும் சக்தியுள்ளது என்பதை இந்த சம்பவங்கள் மூலம் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட மறுகணமே சிலர் தாமரை மொட்டில் இணைந்தனர். ஆனால் இன்று தாம் இணையவில்லை என்கின்றனர். அரசியல் ரீதியாக ஒரு கொள்கையில் செயற்பட முதுகெலும்பு இருக்க வேண்டும். அவர் பொதுஜன பெரமுனவில் இணைந்தமை தொடர்பிலான புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகியிருந்தன, இன்று மக்களையும் ஏமாற்றி பாராளுமன்றத்தையும் ஏமாற்றப்பார்க்கின்றனர்.
மேலும் அமைச்சுப் பதவிகள் குறித்து இழுத்தடிப்பு ஒன்று நிலவி வருகின்றது. சில அமைச்சுப் பதவிகளை கொடுக்க முடியாதென ஜனாதிபதி கூறுகின்றார். அவருக்கு அவ்வாறு கூறுவதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை. மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக இருந்தால் பதவிகளை கொடுக்க முடியும், எதிராக இருந்தால் பதவி கொடுக்க முடியாதென்பதே அவரது நிலைப்பாடாகும். எனவே, இது தவறானதும், அரசியல் அமைப்பிற்கு முரணானதுமாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது அரசியலுக்காக நிறைவேற்று அதிகாரத்தை தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருகின்றார். 50 நாட்களுக்குப் பின்னர் சூழ்ச்சி முடிந்துள்ள போதிலும், அமைச்சரவையை நியமிக்க முடியாதுள்ளனர். தனது பதவிக்காக தொடர்ந்து அவர் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றார். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அவர்களுடைய உரிமைகளை நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று கருதுகின்றனர். ஜனாதிபதி தேர்தலின் போது பேரம் பேசுவதற்கான சில வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஜே.ஆர்க்கு பின்னர் வந்த எவ்வொரு அரச தலைவர்களும் வாக்குறுதிகளை மாத்திரமே அளித்தனர். மைத்திரியும், மஹிந்தவும் அவ்வாறு பல விதமான வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால், எவருமே எவ்வித வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. முஸ்லிம்களின் எதிர்ப்பின் மத்தியில் ஊரடங்கு சட்டத்தை அமுல் படுத்தியே வடக்கு, கிழக்கை ஜே.ஆர். இணைத்தார்.
அரச தலைவர் ஒருவர் சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டாலும் அவருக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர முடியாது. ஜனாதிபதி தேர்தலில் மாத்திரமேஅவருக்கு அழுத்தம் கொடுக்க முடியும். . எனவே, இதற்கு முடிவுகட்ட வேண்டும். நாங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 20ஆவது திருத்தச்சட்டத்தை அனைத்துக் கட்சிகளினதும் திருத்தத்துடன் நிறைவேற்ற தயாராகவுள்ளோம். வெகுவிரைவில் 20ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றி அரசியல் அமைப்பினையும் ஜனநாயகத்தினையும் கேள்விக்கு உட்படுத்தி மைத்திரிபால சிறிசேனவை பதவி நீக்கவேண்டும். இதற்கான முயற்சிகள் நாளைக்கே வருமென்றாலும் அதனை ஆதரிக்க நாம் தயாராகவே உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli