காத்தான்குடியின் இரண்டு பள்ளிவாசல்களில் இஷா தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 பேர் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு இன்றுடன் சரியாக 33 வருடங்களாகின்றன. இன்றைய தினத்தை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஷுஹதாக்கள் தினமாக அனுஷ்டிக்கின்றனர். இதனை நினைவு கூரும் முகமாக இன்று காத்தான்குடியில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இயக்கங்களுக்குமிடையிலான மூன்று தசாப்த போரில் இலங்கை முஸ்லிம்கள் சந்தித்த இழப்புகளின் உச்சபட்சமே இந்த பள்ளிவாசல் படுகொலையாகும். கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்பதே அன்று புலிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. இதன் காரணமாக காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, ஏறாவூர் படுகொலை, அளிஞ்சிப்பொத்தானை படுகொலை, குருக்கள்மடம் கடத்தலும் படுகொலையும்,பல்வேறு குணடுத் தாக்குதல் சம்பவங்கள், அவ்வப்போதான ஆட்கடத்தல்கள், கல்விமான்களை இலக்கு வைத்த படுகொலைகள் என அக் காலப்பகுதியில் ஆயுதம் தாங்கிய குழுக்களால் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டனர். இவ்வாறான வன்முறைகளால் சுமார் 7000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை முஸ்லிம்கள் இழந்துள்ளனர். இதன் காரணமாக இன்று கிழக்கு மாகாணத்தில் மிகவும் குறுகிய நிலப்பரப்புக்குள் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மிக நெருக்கமாக வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இது பல்வேறு சுகாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கும் வழிவகுத்துள்ளது.
இந்த நாட்டை பிரிவினையிலிருந்தும் பாதுகாப்பதற்காக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பாரிய விலையைக் கொடுத்துள்ளனர். வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்திலிருந்து எவ்வாறு விரட்டப்பட்டதன் மூலம் தமது வாழ்வையே தொலைத்தார்களோ அதேபோன்று கிழக்கு முஸ்லிம்களும் மேற்குறிப்பிட்ட வன்முறைகளால் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். இருப்பினும் இவற்றுக்கு இதுவரை குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தவித நஷ்டயீடுகளையோ நீதியையோ அவர்கள் பெறவில்லை என்பது கவலைக்குரியதாகும்.
கடந்த காலங்களில் சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது முஸ்லிம்களைத் தனித்தரப்பாக அங்கீகரிக்குமாறும் இழப்புகளுக்கு நஷ்டயீடு வழங்குமாறும் கோரிக்கைவிடுத்தும் அவை கவனத்திற் கொள்ளப்படவில்லை. இன்றும் கூட இது தொடர்பில் கிழக்கு முஸ்லிம்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவற்றுக்கு எவரும் உரிய பதிலளிப்பதாகத் தெரியவில்லை.
முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட கடந்த காலங்களில் கிழக்கு முஸ்லிம்களின் அவலங்களை வைத்தே அரசியல் செய்து அதிகாரங்களுக்கு வந்தனர். முஸ்லிம் தனித்துவக் கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களின் இந்த இழப்புகளை சந்தைப்படுத்தியும் அவற்றுக்கு தீர்வு தருவதாகவும் கூறியே அரசியல் செய்தன. இன்றும் செய்து வருகின்றன. எனினும் மக்களுக்கு எந்தவித நலனும் கிடைத்ததாக இல்லை.
அண்மைக்காலமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனத் தெரிவித்து வருகிறார். அண்மையில் முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவுடனும் பேச்சு நடத்தியிருந்தார். இருப்பினும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் கடந்த கால இழப்புகள் தொடர்பில் எந்தவித கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருக்கவில்லை. முஸ்லிம் பிரதிநிதிகள் தாம் முன்வைத்த பிரச்சினைகளில்இந்த விவகாரம் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. முஸ்லிம் தரப்பே இதனை ஒரு பிரச்சினையாக கருதி ஜனாதிபதியிடம் பேசாத போது இவ்விடயத்துக்கு அவர் முக்கியத்துமவளிப்பார் என எதிர்பார்க்க முடியாது.
எனவேதான் எதிர்காலத்தில் முஸ்லிம் தரப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்து தீர்வுகள் குறித்துப் பேசும்போது வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் கடந்த கால இழப்புகளுக்கு நஷ்டயீடு வழங்குவது தொடர்பிலும் இழக்கப்பட்ட காணிகளை மீளப்பெறுவது குறித்தும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். இதற்காக தமது தூதுக் குழுவில் கிழக்கு மாகாண சிவில் சமூக பிரதிநிதிகளையும் உள்ளடக்க வேண்டும்.
யுத்த காலத்தில் முஸ்லிம் தரப்பின் இழப்புகள் எவ்வாறு முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டனவோ அதேபோன்று தற்போதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அதற்காக 33 ஆவது வருடமாக அனுஷ்டிக்கப்படும் இன்றைய ஷுஹதாக்கள் தினத்தில் அனைவரும் அழுத்தங்களை வழங்க வேண்டும். இதனைப் பேசுபொருளாக்க வேண்டும்.- Vidivelli