நாடெங்குமுள்ள பள்ளிவாசல்களின் சொத்து விபரங்கள் சேகரிக்கப்படுவது வரவேற்கத்தக்கது
ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழுள்ள நிறுவனங்களின் சொத்துக்கள் உள்ளிட்ட விபரங்களை அரசாங்கம் சேகரிப்பதற்கு மேற்கொண்டுள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது. இம்முயற்சிக்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.
‘இது நல்லதோர் முயற்சி. பள்ளிவாசல்கள் மற்றும் அரபுக்கல்லூரிகளுக்கு வக்பு செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் இன்று சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன. தனியாரினால் அபகரிக்கப்பட்டுள்ளன. பல பள்ளிவாசல்களின் சொத்துகள் பற்றிய விபரங்கள் நிர்வாகிகளுக்கே தெரியாதுள்ளது.’ என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் ‘எமது முன்னோர்களால் பள்ளிவாசல்களை நிர்வகிப்பதற்காகவே காணிகளும், ஏனைய சொத்துக்களும் வக்பு செய்யப்பட்டன. இச்சொத்துக்கள் காலக்கிரமத்தில் ஒழுங்காக நிர்வகிக்கப்படாமையால் இன்று தனியார்களாலும், பள்ளிவாசல்களை நிர்வகித்து வந்த நிர்வாகிகளின் குடும்பத்தாரினதும் ஆதிக்கத்துக்கு உள்ளாகியுள்ளன. பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைகள், கட்டிடங்களுக்கு உரிய வாடகை கூட செலுத்தப்படுவதில்லை.
அரசாங்கம், இந்நிலையில் பள்ளிவாசல்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களைத் திரட்டி அவற்றை சட்டரீதியான பொறிமுறைக்குள் கொண்டுவர முயற்சிப்பது எமக்கு நன்மை பயப்பதாகவே அமையும். எமது பள்ளிவாசல் சொத்துகள் அபகரிப்பிலிருந்தும் காப்பாற்றப்படும். முஸ்லிம்கள் இது தொடர்பில் அச்சமடையத்தேவையில்லை. அரசாங்கம் பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை மாத்திரம் திரட்டவில்லை. அனைத்து மதத்தலங்களின் சொத்து விபரங்களையும் திரட்டி வருகிறது.
எனவே பள்ளிவாசல் நிர்வாகங்கள் மற்றும் வக்பு சபை என்பன இது விடயத்தில் அரசாங்கத்துக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
பள்ளிவாசல் சொத்துகளை எவரும் அபகரித்திருந்தால், இன்றேல் சட்டவிரோதமாக கைப்பற்றிக் கொண்டிருப்பதால் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இம்முயற்சி உதவியாக இருக்கும் என்றார்.- Vidivelli