கொழும்பு, புறக்கோட்டைப் பிரதேசத்தில் வீதியொன்றிலிருந்து ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பணத்துடன் கூடிய பார்சலொன்றைக் கண்டெடுத்த நடைபாதை வியாபாரியொருவர் அதனை கோட்டை பொலிஸ் மக்கள் தொடர்பு பிரிவினரிடம் கையளித்துள்ளார்.
கொழும்பு புறக்கோட்டைப் பகுதி வீதியொன்றிலிருந்து இந்தப் பார்சலை அப்பகுதியில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வரும், கொழும்பு –14 பகுதியைச் சேர்ந்த மொஹமட் அஸ்மி முபாரக் என்பவரே கண்டெடுத்துள்ளார்.
தான் கண்டெடுத்த பார்சலில் பணம் அடங்கியிருப்பதை அறிந்த அவர் தனது எஜமானரைத் தொடர்பு கொண்டுள்ளார். பின்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கும், நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மொஹமட் இம்தியாஸுக்கும் அறிவித்துள்ளார். பின்பு அந்தப் பார்சலை புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்ட் அநுர விஜேரத்னவிடம் கையளித்துள்ளார்.
பணத்துக்கு உரிமை கோரி இன்றுவரை (நேற்று) எவரும் முன்வரவில்லை என புறக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தப் பணத்தைத் தவறவிட்டவர் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் அதற்குரிய ஆதாரங்களையும் அடையாளத்தையும் சமர்ப்பித்து பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் தேவைப்படின் 011 2421515 அல்லது 011 2320389 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் தொடர்பாக தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குப் பல இடங்களிலிருந்தும் கொழும்பு புறக்கோட்டைக்கு வரும் மக்களின் பாதுகாப்பு மற்றும் தேவைகள் தொடர்பில் புறக்கோட்டை பொலிஸின் விஷேட பிரிவு பல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த வேலைத்திட்டங்களில் வீதி நாடகங்கள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் மற்றும் ஒலிபெருக்கி மூலம் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
-VIdivelli