வக்பு செய்யப்பட்ட காணித் துண்டுகள் நூராணியாவுக்கா? நிதா டிரஸ்ட்டுக்கா?

0 412

எஸ்.என்.எம்.சுஹைல்

ராஜ­கி­ரிய நுரா­ணியா ஜும்ஆப் பள்­ளி­வா­சலின் கீழ் இயங்கு அல் மத­ர­ஸதுல் நுரா­ணியாவின் வக்பு சொத்துகளை நிதா பவுண்­டே­ஷனின் பெய­ருக்கு மாற்றம் செய்ய முயற்­சிகள் நடப்­ப­தாகக் கூறி அதற்கு எதி­ராக வக்பு சபையில் மனு தாக்கல் செய்­யப்­பட்­டிருந்தது. இது தொடர்­பான வழக்கு விசா­ர­ணைகள் நீண்­ட­கா­ல­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்த நிலையில் அண்­மையில் குறித்த வழக்கை விசா­ரிக்கும் நியா­யா­திக்கம் வக்கு சபைக்கு இல்லை என கூறி, விடயம் வக்பு தீர்ப்­பாயம் அதா­வது Waqf tribunal க்கு மாற்­றப்­பட்­டது.

என்ன பிரச்சினை?
வக்பு செய்­யப்­பட்ட ராஜ­கி­ரிய நூரா­ணிய இப்ழ் குர்ஆன் மத்­ர­ஸா­வுக்குச் சொந்­த­மான காணிகள் நிர்­வாக சபையின் தலை­வ­ராக இருப்­ப­வ­ரினால் நிதா அமைப்­புக்கு மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக குற்றம் சுமத்தி பள்­ளி­வாசல் ஜமாஅத் அங்­கத்­த­வர்­க­ள் சிலரால் இரண்டு தட­வைகள் வக்பு சபையில் முறைப்­பா­ட­ளிக்­கப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது.
தற்­போது இவ்­வி­வ­காரம் பேசு­பொ­ரு­ளா­கி­யுள்ள நிலையில் விவ­காரம் வக்பு தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.

பள்ளிவாசலின் வரலாறு
நூரா­ணியா ஜும்ஆப் பள்­ளி­வாசல் என்.ஜே.வீ, குரே மாவத்தை ராஜ­கி­ரிய, சிரி­ஜ­ய­வர்­தன புறக்­கோட்­டேயில் அமைந்­துள்­ளது. ‘‘70 களின் ஆரம்­பத்தில் அவ்­வி­டத்தில் ஓலைக்­கு­டி­சையால் அமை­யப்­பெற்­றி­ருந்த குர்ஆன் மத­ரஸாவே இருந்­தது. அதில்தான் தானும் ஆரம்ப குர்ஆன் மத்­ர­ஸா­வுக்கு சென்றேன். இதற்­கான 6 பேர்ச் காணி பவுஸ் கலீல் என்­ப­வரால் வக்பு செய்­யப்­பட்­ட­தாகும். மேலும் ஒரு பேர்ச் காணி அருகில் இருந்த இன்­னொ­ரு­வ­ரி­ட­மி­ருந்து பெறப்­பட்டது’’ என கூறு­கிறார் நிதா பவுண்­டே­ஷனின் ஸ்தாப­கரும் ராஜ­கி­ரிய ஜும்ஆப் பள்­ளி­வா­சலின் தலை­வ­ரு­மான அஷ்­ஷெய்க் ஹஸன் பரீட்.

மேலும், “நான் பாகிஸ்­தா­னுக்கு சென்று கல்­வியை பெற்று நாட்­டுக்கு திரும்­பிய பின்னர் 1995 களில் குர்ஆன் மத்­ரஸா இருந்த குறித்த இடத்தில் ஐங்­காலத் தொழு­கைக்­காக பள்­ளி­வாசல் உரு­வாக்­கப்­பட்­டது. 1996 ஆம் ஆண்டு அங்கு 15 பிள்­ளை­க­ளுடன் ஹிப்ழ் மத்­ர­ஸா­வொன்று ஆரம்­பிக்­கப்­பட்­டது” எனவும் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­திற்கு கீழேயே அவை இயங்­கி­ய­தா­கவும் அவர் கூறினார்.
2001 ஆம் ஆண்டு மார்ச், 28 இல் No. MRCA/13/1/HQ/53 எனும் இலக்­கத்தில் நூரா­ணியா குர்ஆன் மத்­ரஸா முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதி­வா­னது. இப்­பள்­ளி­வா­ச­லுடன் அல் மத­ர­சதுல் நூரா­ணிய்யா ஹிப்ழ் மத்­ரஸா, அல் மத்­ர­சதுல் நூரா­ணிய்யா குர்ஆன் மத்­ரஸா மற்றும் நூரா­ணியா அக­திய்யா பாட­சா­லையும் இணைந்­த­தாக செயற்­ப­டு­கின்­றது.

பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தின் கீழ் இயங்கும் குர்ஆன் மத்­ர­சா­வுக்கு பொறுப்­பாக மூவர் நிய­மிக்­கப்­பட்­டனர். இதற்­க­மைய அஷ்ஷெய்க் ஹஸன் பரீட் மற்றும் மர்­ஹூம்­களான மொஹமட் பெரோஸ் அமீர்தீன் மற்றும் ஆர்.எம்.சபீக் ஆகி­யோ­ருக்கு பொறுப்பு வழங்­கப்­பட்­டது.

நிதாவும் காணி கொள்வனவும்
இத­னி­டையே, “பத்வா சென்டர் ஒன்றை ஆரம்­பிக்கும் எண்ண­மொன்று இருந்தது. இஸ்­லாத்தை ஏற்­றுக்­கொள்ளும் மக்­க­ளுக்­கான சேவை­யொன்றை வழங்க ­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து கனவின் மூலம் எனக்கு தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்­டது. எனவே, இந்த நல்ல எண்­ணக்­க­ருவை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக நிதா பவுண்­டேஷன் என்ற ஒரு அமைப்பை ஸ்தாபித்து பொதுச் சேவை­யொன்றை ஆரம்­பித்தேன்” என கூறினார் அஷ்ஷெய்க் ஹஸன் பரீட்.

இதற்­க­மை­வாக, குறித்த ராஜ­கி­ரிய நூரா­ணியா பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் இருந்த சில காணித்­துண்­டுகள் சில கொள்­வ­னவு செய்­யப்­பட்­டன. அவை நிதா பவுண்­டே­ஷ­னுக்­காவே நிதி சேக­ரிக்­கப்­பட்டு கொள்­வ­னவு செய்­யப்­பட்­ட­தா­கவும் அவை நூரா­ணியா ஹிப்ழ் மத்­ரஸா நிர்­வா­கத்தில் இருந்­த­வர்­களின் பெயரி­லேயே எழு­தப்­பட்­ட­தா­கவும் கூறினார் அவர்.

2002, ஜூலை 2 ஆம் திகதி 9.06 பேர்ச் காணியும், அதே தினத்தில் மற்­று­மொரு 6.23 பேர்ச் காணியும் 2005 ஏப்ரல் 12 ஆம் திகதி 8 பேர்ச் மற்றும் 27.37 பேர்ச் காணித் துண்டும் 2006 டிசம்பர் 2 ஆம் திகதி 11 பேர்ச் காணியும் வாங்­கப்­பட்­டுள்­ளது. இவற்றுக்கு பள்­ளி­வாசல் பரி­பா­லன உறுப்­பி­னர்­களின் பொறுப்பு சாட்­டப்­பட்­டுள்­ள­தாக ஆவ­ணங்கள் கூறு­கின்­றன.

நிதா பவுண்­டேஷன் என்ற அமைப்பை ஆரம்­பிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஹஸன் பரீத் மௌலவி பல ஆண்­டுகள் மேற்­கொண்­ட­போ­திலும், 2007 ஆம் ஆண்டு அவ்­வ­மைப்பு கம்­ப­னிகள் சட்­டத்தின் கீழ் உத்­த­ர­வாத நிறு­வனமாக பதிவு செய்­யப்­பட்­டது.

மத்ரஸாவுக்கு நடந்தது என்ன?
இந்­நி­லையில் 2014 ஆம் ஆண்­ட­ளவில் ராஜ­கி­ரிய நூரா­ணியா பள்­ளி­வா­ச­லுக்கு கீழ் இயங்­கிய மத்­ர­ஸதுன் நூரா­ணியா ஹிப்ழ் மத்­ர­ஸாவின் இயக்கம் இல்­லா­ம­லாக்­கப்­பட்­டது. அத்­துடன், நிதா பவுண்­டே­ஷ­னினால் நடத்­தப்­படும் MRCA 13/1/AC/125 எனும் பதிவு இலக்­கத்­துடன் மவா­ஹிபுல் உலூம் எனும் அரபுக் கல்­லூரி அங்கு இயங்க ஆரம்­பித்­தது. அத்­தோடு, மத்­ர­ஸதுன் நூரா­ணி­யா­வுக்கு சொந்­த­மான காணி­களும் நிதா பவுண்­டே­ஷ­னுக்கு மாற்றப் பட்­டி­ருந்­தமை தெரிய வந்­த­தாக பள்­ளி­வா­சலின் தற்­போ­தைய பொரு­ளாளர் எம்.ஜே.எம்.நஸ்லி கூறுகிறார்.

முதலாவது மனுதாக்கல்
இத­னி­டையே, குறித்த காணிகள் குர்ஆன் மத்­ர­ஸா­வுக்­காக கொள்­வ­னவு செய்­யப்­பட்­டவை என்று அவற்றை தனியார் அமைப்­பு­களின் பெய­ருக்கு மாற்­று­வதற்கு எதிர்ப்பு தெரி­வித்து பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தின் உப­த­லைவர் ஏ.எச்.முஹம்­மது இக்பால், செய­லாளர் எம்.ஏ.அப்துல் ஹஸன் மற்றும் சட்­டத்­த­ரணி ஐ.எல்.எம்.ஹஸன், பொரு­ளாளர் எம்.ஜே.எம்.நஸ்லி, உறுப்­பி­னர்­க­ளான எம்.ரி.எம்.நௌஸாட், எச்.எம். அலி உஸ்மான் ஆகியோர் 2016 மார்ச், 24 ஆம் திக­தி­யன்று வக்பு சபையில் முறைப்­பாட்டு மனு­வொன்றை பதிவு செய்­தனர். இதில் பிர­தி­வா­தி­க­ளாக ஹஸன் பரீட் மௌலவி, ஏ.சீ.எம்.இஸ்­மாயீல் மற்றும் ஆர்.எம்.சபீக் ஆகியோர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தனர்.

காணி பதிவில் தொடர்ந்தும் நிர்­வா­கி­களின் பெயர்கள் இருந்தால் குறித்த காணி பிற்­கா­லத்தில் சட்ட ரீதி­யான சிக்­கலை எதிர்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­படும் என்ற கார­ணத்­தி­னா­லேயே அவர்கள் இவ்­வாறு வழக்கு தொடர முன்­வந்­துள்­ளனர்.

வழக்கு தொடு­னர்கள் சார்­பாக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்வும் பிர­தி­வா­திகள் சார்பில் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஆகியோர் ஆஜ­ரா­கினர்.

இது தொடர்­பான விசா­ரணை அறிக்கை வக்பு சபையின் முன்னாள் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசீ­னினால் 2017 ஆம் ஆண்டு, ஜன­வரி 26 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது.

முதலாம் தீர்ப்பு
இதில், வக்பு செய்­யப்­பட்ட சொத்­து­களை வேறு நபர்­க­ளுக்கு விற்­ப­தற்கோ, அன்­ப­ளிப்பு செய்­வ­தற்கோ, பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தின் அல்­லது உறுப்­பி­னர்­க­ளுக்கோ அனு­ம­தி­யின்றி அதி­காரம் இல்லை என தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. அத்­தோடு, நிதா பவுண்­டே­ஷ­னுக்கு மாற்­றப்­பட்ட காணிகள் மீண்டும் பள்­ளி­வா­ச­லுக்கு வழங்க உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது. இதற்­க­மைய பள்­ளி­வா­ச­லுக்கு இக்­கா­ணிகள் மீண்டும் அளிக்­கப்­பட்­டது.

இரண்டாவது மனு
இத­னி­டையே, 2019 ஆம் ஆண்டு, எம்.ஜே.எம்.நஸ்லி, எம்.ரி.எம்.நௌஷாட், எச்.எம்.ஏ. உஸ்மான், எம்.எச்.எம். பழீல், எம்.எஸ்.எம்.ஸாஷில் ஆகி­யோரால் வக்பு சபையில் மீண்டும் ஒரு மனு­வொன்று தாக்கல் செய்­யப்­பட்­டது.
இதில் பிர­தி­வா­தி­க­ளாக, மௌலவி ஹஸன் பரீட், ரஷீத் மொஹமட் சபீக், மொஹமட் முர்ஷிட் முழப்பர், அப்­துல்லாஹ் இமாம்தீன், மொஹமட் நவ்­றூஷி ரவூப் மற்றும் முஹம்மட் நயீம் முஹம்மட் சமீல் ஆகியோர் பெய­ரி­டப்­பட்­டி­ருந்­தனர்.

இதன்­போது மனு­தா­ரர்கள் சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ், நளீம் மற்றும் முர்ஷித் மஹ்­ரூபும் பிர­தி­வா­திகள் சார்பில் சட்­டத்­த­ர­ணி­க­ளான என்.எம்.சஹீட், செய்த் அலி, யூசுப் நசார் ஆகியோர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தனர்.

நிதா வக்பு டிரஸ்டாக பதிவு
இதற்­கி­டையில் நிதா பவுண்­டேஷன் நிதா வக்பு டிரஸ்ட்­டாக பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அவ்­வ­மைப்பின் நிறை­வேற்று அதி­காரி ஜரீர் சுல்தான் ஊடகங்களுக்கு எழுத்து மூல­மக அனுப்பி வைத்­துள்ள அறிக்­கை­யின்­படி, 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திக­தி­யன்று இது தொடர்­பான அனு­மதிக் கோரிக்கை விடுக்­கப்­பட்டு 2020 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதி வக்பு சபை­யினால் நிதா வக்பு டிரஸ்ட்­டுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

மனுதாரர்களின் குற்றச்சாட்டு
எனினும், ராஜ­கி­ரிய நூரா­ணியா ஜும்ஆப் பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபை தொடர்­பான பிரச்­சி­னைகள் வக்பு சபையில் பதிவு செய்­யப்­பட்டு 2017 ஆம் ஆண்டு முதல் புதிய நிர்­வாகம் தெரிவு செய்­யப்­ப­டா­தி­ருக்­கி­றது. இந் நிலையில் குறித்த பள்­ளி­வா­சலின் கீழ் உள்ள நூரா­ணியா ஹிப்ழ் குர்ஆன் மத்­ர­ஸா­வுக்கு வக்பு செய்­யப்­பட்ட சொத்­து­களை இன்­னொடு நிறு­வ­னத்­துக்கு மாற்றம் செய்ய அனு­ம­தி­ய­ளித்­தமை செல்­லு­ப­டி­யற்­றது என எம்.ஜே.எம்.நஸ்லி மற்றும் எம்.எஸ்.எம்.ஸாஷில் ஆகியோர் தெரி­வித்­தனர்.

மத்ரஸா­வுக்கு சொந்­த­மான சொத்தை இன்­னொரு நிறு­வ­னத்தை வக்பு டிரஸ்ட்­டாக பதிவு செய்து மாற்­றிக்­கொள்­வ­தற்கு பல்­வேறு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டமை பல சந்­தே­கங்­களை தோற்­று­விக்­கின்­றன. பள்­ளி­ நிர்­வா­கத்தில் சிக்கல் இருக்­கின்ற நிலை­மையில் மற்றும் கொரோனா தொற்று வீரி­ய­ம­டைந்து தனி­மைப்­ப­டுத்தல் நில­வி­ய­போது, ஒன்­று­ கூ­ட­லுக்கு தடைகள் போடப்­பட்­டி­ருந்த காலத்தில் யாரின் அனு­ம­தியை பெற்று எவ்­வா­றான அடிப்­ப­டையில் இந்த செயன்­மு­றை­களை செய்­தனர் என்ற கேள்­விகள் எழுந்­த­மை­யினால் நாம் பள்ளி நிர்­வா­கத்தின் கீழ் வாழும் ஜமா­அத்­தினர் என்ற அடிப்­ப­டையில் வக்பு சபையில் மனு தாக்கல் செய்­ய­த­தாக அவர்கள் மேலும் சுட்­டிக்­காட்­டினார்.

நிதாவின் பதில்
இத­னி­டையே, நிதா வக்பு டிரஸ்­டிற்கு எதி­ராக தொடுக்­கப்­பட்ட வழக்கில் வக்பு சபை நிதா­வுக்கு ஆத­ர­வாக தீர்ப்­ப­ளித்­துள்­ள­தாக அதன் பிர­தம நிறை­வேற்று அதி­காரி ஜரீர் சுல்தான் தெரி­வித்­தார். “NIDA WAKF TRUST ஆனது தனியார் WAKF TRUST அல்ல. மாற்­ற­மாக வக்ப் நியாய சபையின் கீழ் உள்ள Muslim Charitable Trust ஆக பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இவை அஷ் ஷெய்க் ஹசன் பரீட் அவர்­க­ளுக்கோ மற்றும் எந்த ஒரு தனி நப­ரிற்கோ உரி­மை­யா­னது இல்லை என்­பதை வக்பு சபையின் விசா­ர­ணையில் சொல்­லப்­பட்­டது.

மேலும், அண்மைக் கால­மாக சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் மற்றும் நேர்­கா­ணல்­க­ளிலும் நிதா­வுக்கு எதி­ராக கூறப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள் உண்­மைக்கு புறம்­பா­னவை என்­பதை இத்­தீர்ப்பின் மூலம் வக்பு சபை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. மேலும் இது தொடர்­பான விளக்­கங்கள் தேவைப்­ப­டு­மாயின் முன் அனு­மதி பெற்று நிதா காரி­யா­ல­யத்தில் பெற்றுக் கொள்­ளலாம் எனவும் நிதாவின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி அறிக்­கை­யொன்றின் மூலம் மேலும் தெரி­வித்துள்ளார்.

தீர்ப்பு அல்ல கட்டளையே
நிதா வக்பு டிரஸ்­டாக பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­மையால் குறித்த விவ­கா­ரத்தை வக்பு சபையால் விசா­ரிக்க முடி­யாது என்ற ஆட்­சே­ப­னையை பிர­தி­வா­திகள் தரப்பினர் முன்வைத்ததாகவும் அதற்கமைய விவகாரம் விசாரிக்கும் அதிகாரம் வக்பு டிரிபியூனலுக்கு இருப்பதாக தெரிவித்தார் மனுதாரர்கள் சார்பான சட்டத்தரணி நளீம்.

அத்­தோடு, இது விட­ய­மாக வக்பு சபைக்கு தீர்ப்பு வழங்கும் அதி­காரம் இன்­மையால் வக்பு டிரி­பி­யு­னலில் இது குறித்து விசா­ர­ணைகள் இடம்­பெறும். இதன்­போது, குறித்த வக்பு சொத்தை உரிய தரப்­புக்கு பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக நாங்கள் முயற்­சி­களை மேற்­கொள்வோம். வக்பு சபை வெறு­மனே கட்­ட­ளை­யைத்தான் பிறப்­பித்­தி­ருக்­கி­றது. தீர்ப்பு எத­னையும் வழங்­க­வில்லை. எனவே, நீதியை பெற்­றுக்­கொள்வோம் என்றும் அவர் மேலும் கூறினார்.
குறித்த காணிகள் நிதா வக்பு டிரஸ்ட்டின் கீழ் இருக்க வேண்­டுமா? அல்­லது மனு­தா­ரர்கள் கூறு­வ­தற்­க­மைய நூரா­ணியா ஹிப்ழ் குர்ஆன் மத்­ர­ஸா­வுக்கு கீழ் இருக்க வேண்­டுமா என்­பதை வக்பு டிரி­பி­யு­னலே முடிவு செய்யும். எனவே, நீத­மான தீர்ப்பை வக்பு தீர்ப்­பாயம் (டிரிபியுனல்) வழங்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.