சஹ்ரானை காணவுமில்லை ஹிஜாஸை காணவுமில்லை!
கண்களால் காணாதவற்றை சாட்சியமாக கூறியதை ஒப்புக்கொண்டு உண்மைகளை போட்டுடைத்த அரசின் சாட்சியாளர்
எம்.எப்.அய்னா
பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கில், அரச தரப்பின் பிரதான சாட்சியாளர்களில் ஒருவரான 2 ஆவது சாட்சியாளர், புத்தளம், அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையின் முன்னாள் மாணவன் எனக் கூறப்படும் மொஹம்மட் பெளஸான், தான் நீதிமன்றில் வழங்கிய சாட்சியம், நேரடியாக தன் கண்களால் காணாதவற்றை அடிப்படையாக கொண்டது என ஒப்புக்கொண்டார்.
கடந்த வாரம் (14), புத்தளம் மேல் நீதிமன்றில் நடந்த வழக்கு விசாரணைகளின் இடையே, இந்த விடயம் பிரதிவாதி தரப்பின் சட்டத்தரணி சமிந்த அத்துகோரளவின் குறுக்கு விசாரணையின் போது மன்றில் வெளிப்படுத்தப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சுஹைரியா மத்ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு கடந்த 14 ஆம் திகதி நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட முன்னிலையில் புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது , பிணையில் இருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் 2 ஆம் பிரதிவாதியான அல் சுஹைரியா மத்ரசா பாடசாலை அதிபர் சகீல் கான் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
முதல் பிரதிவாதியான சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம், சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தன, சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
2 ஆம் பிரதிவாதியான அதிபர் சகீல்கான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள தலைமையில் சட்டத்தரணிகளான ஹபீல் பாரிஸ் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
இவ்வழக்கினை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விஷேடமாக மேற்பார்வை செய்யும் நிலையில் அதற்காக பிரத்தியேக சட்டத்தரணிகள் குழாம் ஆஜரானது.
வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகமவும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன சில்வாவும் ஆஜராகினர்.
அத்துடன் இவ்வழக்கு விசாரணைகளை கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், அமரிக்க தூதரக அதிகாரிகள் நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்தமை விஷேட அம்சமாகும்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதி நிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம் எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற் பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக் குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், ‘ இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடியோக்களை காண்பித்தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து நோக்கப்படும் அச்சட்டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்டனைக் குரிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடை சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைவிட, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக வெறுப்புணர்வுகளை விதைத்ததாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் கடந்த மார்ச் 24, 27 ஆம் திகதிகளில் நடந்த விசாரணைகளின் போது 2 ஆம் சாட்சியாளராக அல் சுஹைரியா மத்ரஸாவின் முன்னாள் மாணவனான, 19 வயதுடைய மொஹம்மட் பெளஸான் சாட்சியமளித்திருந்தார்.
அவரது சாட்சியத்தை அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம நெறிப்படுத்தியிருந்த நிலையில் முதல் பிரதிவாதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் இந்ரதிஸ்ஸவினால் குறுக்கு விசாரணையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே கடந்த 14 ஆம் திகதி வெள்ளியன்று 2 ஆவது பிரதிவாதி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள குறுக்கு விசாரணைகளை ஆரம்பித்தார்.
சாட்சியாளர் கடந்த மார்ச் 24 ஆம் திகதி வழங்கிய சாட்சியத்தின் போது இதனைவிட, தான் மத்ரஸாவில் இருந்த காலப்பகுதியில், அங்கு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான குண்டுதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரான் மற்றும் ரிழ்வான் அல்லது ரிஸ்வான் எனும் பெயரில் அறியப்படும் ஒருவரும் வந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
சஹ்ரான், ரில்வான் அல்லது ரிஸ்வான் ஆகியோர், முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீது கிறிஸ்தவர்கள் தாக்குதல் நடாத்துவதாகவும் அதற்கு பதிலடியாக குண்டுத் தாக்குதல் நடாத்த வேண்டும் எனக் கூறியதாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டிருந்தார். அதனால் அச்சமடைந்து தான் மத்ரஸாவில் இருந்து யாருக்கும் தெரியாமல் பலமுறை வீட்டுக்கு ‘பாய்ந்து’ சென்றதாக சாட்சியாளர் கூறியிருந்தார்.
எனினும் 2 ஆம் பிரதிவாதி சார்பிலான குறுக்கு விசாரணைகளின் போது அந்த விடயங்கள் பொய்யானது என்பதை ஒப்புவிக்கும் விதமாக சாட்சியாளரின் பதில்கள் அமைந்திருந்தன. குறிப்பாக சஹ்ரான் மத்ரஸாவுக்கு வந்ததாக அளித்த சாட்சியம், தனது கண்களால் கண்ட விடயமல்ல எனவும், முதல் சாட்சியாளர் மலிக் தன்னிடம் தெரிவித்த விடயங்களுக்கு அமைய அளிக்கப்பட்ட சாட்சியம் எனவும் சாட்சியாளர் பெளசான் நீதிமன்றில் குறிப்பிட்டார்.- Vidivelli