முன்னாள் ஜனாதிபதி -முன்னாள் பிரதமர் இன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
இதுவே மஹிந்தவின் தற்போதைய நிலைமை என ஹக்கீம் சாடல்
முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ இந்த மாதத்தில் முன்னாள் பிரதமராகி தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக மாறியுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமைஏற்பட்ட எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான சர்ச்சையின் போது தனது கருத்தை முன்வைத்து உரையாற்றும் போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த பாராளுமன்றத்தில் அவ்வப்போது குழப்ப நிலைமை ஏற்படுகின்றது. முதலில் இரண்டு பிரதமர்கள் இருந்தார்கள். யார் பிரதமர் என பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துவோம் என கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது அப்போது அமைதியாக அமர்ந்து பெரும்பான்மை நிரூபிக்க விரும்பாத நபர்கள் இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர். இதேவேளை சபாநாயகர் நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) எதிர்க்கட்சித் தலைவர் குறித்து அறிவித்தலொன்றை விடுத்திருந்தார். அந்த அறிவித்தலுக்கு சவால் விடுக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவர் இருப்பதாக பாராளுமன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர் சம்பந்தன் இன்று அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளார்.
இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ இந்த வருட ஆரம்பம் வரை முன்னாள் ஜனாதிபதியாக இருந்தார். இந்த மாதத்தில் சில நாட்களுக்கு முன்னர் வரை முன்னாள் பிரதமராக இருந்தார். தற்போது அவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார். என்ன நடந்தது அவருக்கு. அரசியலமைப்பிற்கமைய ஒருவர் வேறு கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டால் அவரின் எம்.பி பதவி இரத்தாகிவிடும். ஒருவர் வேறறொரு கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளாரா? இல்லையா? என்பதனை தேடிப் பார்ப்பதற்கு எங்களுக்கு உரிமையில்லை. ஆனால் பாராளுமன்றத்திற்கு அதற்கான உரிமையுள்ளது. அத்துடன் கட்சியின் உறுப்புரிமை நீங்கினால் அவருக்கு உரிய கட்சியின் பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள முடியாது என்பது எம்மால் நிரூபிக்க முடியும். ஆகவே நீங்கள் தொடர்ந்தும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றீர்கள் என தெரிவித்தார்.
-Vidivelli