கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சில முஸ்லிம் பிரபலங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவைச் சந்தித்து முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப்பற்றி உரையாடி பல கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் அவரிடம் சமர்ப்பித்ததாகவும், ஜனாதிபதி அவர்கள் தனது இந்திய விஜயத்தை முடித்த பின்னர் அக்கோரிக்கைகளைப்பற்றி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. இது வழமையாக நடக்கும் ஒரு நாடகம். முஸ்லிம்கள் தமது வைபவங்களுக்கு அரசியல் தலைவர்களை அழைப்பதும், அவர்களுக்கு மாலைகள் போட்டு வரவேற்று அவர்களின் புகழ் பாடி விருந்து படைத்து விழாவின் முடிவில் விருந்தினர்களுடன் தமது பிரச்சினைகளைப்பற்றி எடுத்துரைத்து சலுகைகளை எதிர்பார்ப்பதும் நாட்சென்ற கதை. இதனை முஸ்லிம்களின் வியாபார அரசியலின் ஓர் அங்கம் எனவும் அழைக்கலாம். ஆனால் பிரச்சினைகளின் யதார்த்த உண்மையை அல்லது அவற்றின் அடிப்படைக் காரணத்தை உணர்ந்து அவற்றிற்கு நிரந்தர பரிகாரமொன்றை மேற்கொள்ளாது காலத்துக்குக் காலம் எழும் பிரச்சினைகளுக்கே முடிவு தேட முனைவது, ஏதோ நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்வில் இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன நமக்கென சில சலுகைகளைப் பெற்று அமைதியுடன் வாழ்ந்துவிட்டு நிரந்தரமான பரலோக வாழ்வை நோக்கி நகர்வதே ஒரு முஸ்லிமுக்கு அழகு என்ற தவறான வைதீகமார்க்கத் தத்துவத்தின் பிரதிபலிப்பேயன்றி வேறில்லை.
அந்தப் பிரபலங்கள் சமர்ப்பித்த மகஜரில் அடங்கிய மதரசாக்கள் பற்றிய பிரச்சினை, இஸ்லாமிய நூல்கள் பற்றிய பிரச்சினை, திருமண விவாகரத்து சம்பந்தமான பிரச்சினை என்ற பல சமூக நோய்களின் அடிப்படைக் கிருமி எங்கே என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்து அந்தக்கிருமியைக் கொல்லும் மருந்தை அணுகாது ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனியே மருந்து தேடுவது பிரயோசனமற்றது என்பதையும் ஒரு நோயைத் தீர்த்தால் இன்னொரு நோய் வேறொரு விதத்தில் உருவாகும் என்பதையும் ஏன் முஸ்லிம்கள் உணரமறுக்கிறார்கள் என்பதுதான் ஒரு புதிராக இருக்கிறது. ஜனாதிபதியையும் அமைச்சர்களையும் சந்தித்துக் கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பிரபலங்களின் செல்வாக்குப் பெருகுவதற்கு உபயோகப்படலாம். தேர்தல் காலம் வரும்போது முஸ்லிம்களின் வாக்குகளைக் கவர அவ்வாறான சந்தர்ப்பங்கள் உதவலாம். அந்த நோக்கில் பார்க்கப்போனால் இப்பிரச்சினைகள் தீராமல் இருப்பதே இப்பிரபலங்களுக்கு நல்லது எனத் தெரியவில்லையா? இதுதான் முஸ்லிம் அரசியல்வாதிகளின் அந்தரங்க இரகசியமோ?
முஸ்லிம் பிரச்சினைகளின் தோற்றம் எங்கே? ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சௌஜன்ய உறவுடன் சகல இனங்களுடனும் வாழ்ந்த முஸ்லிம்கள் ஏன் அண்மைக் காலத்தில் பிரச்சினைக்குரிய ஓர் இனமாக மாறினர்? இதை விளங்குவதற்கு இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட வரலாற்றை நாடவேண்டியுள்ளது. எனினும் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே 1915 இல் சிங்கள பௌத்த இனத்துவேஷத்தின் முதலாவது பாடத்தை முஸ்லிம்கள் படித்தனர். முஸ்லிம்கள் ஆயிரம் ஆண்டுகளாக இலங்கையில் வாழ்ந்திருந்தாலும் அவர்கள் இந்த நாட்டுக்கு உரியவர்களல்லர், அன்னியர்கள் என்ற பாடத்தை சிங்கள பௌத்த மக்களுக்கு முதலிற் கற்பித்தவர் இலங்கையின் தேசியத்தலைவன் என்றழைக்கப்படும் அநகாரிக தர்மபால. முஸ்லிம்களை அரபு நாட்டுக்கு அனுப்பு என்று அவர்தான் பிரித்தனிய குடியேற்ற ஆட்சியாளர்களை வேண்டினார். அந்தக் கோரிக்கைக்கு தமிழினம் அப்போது ஆதரவு கொடுக்கவில்லை. அதற்குக் காரணம் பொன்னம்பலம் இராமநாதன் போன்ற தமிழ் தலைவர்களின் கருத்தில் முஸ்லிம்கள் இஸ்லாத்தைத் தழுவிய தமிழரே என்பதாகும். எவ்வாறாயினும் தர்மபால நினைத்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. அக்கலவரத்தின் பின்னர் எந்த ஒரு முஸ்லிமும் நாட்டைவிட்டுத் துரத்தப்படவும் இல்லை, ஓடவும் இல்லை. இலங்கை மண்ணிலேயே மேலும் இறுக்கமாகக் கட்டுண்டு வாழலாயினர். ஆனால் பௌத்த சிங்கள மக்களுக்கு மட்டுமே இலங்கை சொந்தமான ஒரு நாடு என்ற ஒரு புனை கதையை வரலாற்று உண்மையென நம்பச் செய்தவர் தர்மபால. அந்தப் புனை கதையே உண்மை எனக்கருதப்பட்டு பௌத்த சிங்களப் பேரினவாதமாக சுதந்திரத்துக்குப் பின்னர் வளரலாயிற்று.
அந்தப் புனை கதையின் முதலாவது அத்தியாயமே 1948 இல் சுதந்திர நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட இலங்கைக் குடியுரிமைச் சட்டம். 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு, பிரித்தானியரின் கோப்பி, தேயிலை, றப்பர் தோட்டங்களில் கூலிகளாக அமர்த்தப்பட்டு இந்த நாட்டின் வருவாய்க்கு உழைத்த பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் குடியுரிமை ஒரே நொடியில் பறிக்கப்பட்டு அவர்களை நாடற்றவர்களாக்கியது அந்தச் சட்டம். அந்தச் சட்டத்தின் அந்தரங்கக் காரணம் என்னவெனில் இந்தியத் தமிழர்களுக்கு வாக்குரிமை கிடைக்குமானால் பௌத்த சிங்களவர்களின் பெரும்பான்மை ஆட்சி பறிபோகும் என்ற பயம். எனினும் அந்தச் சட்டம் நிறைவேறுவதற்கு வாக்களித்த இலங்கை தமிழரினதும் முஸ்லிம்களினதும் அரசியல்வாதிகளின் கேவலத்தை என்னவென்று கூறுவதோ? பௌத்த சிங்களப் பேரினவாதம் ஓர் அரசியல் சக்தியாக 1950களில் உருவெடுத்து இலங்கைத் தமிழரின் மேல் குறிவைக்கும் என்பதை குடியுரிமைச் சட்டத்துக்குச் சார்பாகக் கை உயர்த்திய தமிழ் தலைவர்களோ, தமிழரைப் பலி கொண்டபின் அது முஸ்லிம்களைத் தாவும் என்பதை முஸ்லிம் தலைவர்களோ உணரத்தவறியது அவர்களின் மடமையே.
இந்தியத் தமிழரை ெவளியேற்றுவதுடன் ஆரம்பித்த பௌத்த சிங்களப் பேரினவாதம் இலங்கைத் தமிழரின்மேல் பாய்ந்தவுடன் முஸ்லிம்கள் அதனை தமக்குக் கிைடத்த ஓர் அரிய அரசியல் வரப்பிரசாதமாகக் கருதினர். முஸ்லிம்களின் வியாபார அரசியல் இங்கேதான் ஆரம்பமாகியது. ஆனால் அதே சமயம் பேரினவாதம் முஸ்லிம்களை அதன் அரசியல் சதுரங்க ஆட்டத்தின் ஒரு பகடையாகப் பாவிக்கப் போகின்றது என்பதை முஸ்லிம் தலைவர்கள் அன்று உணரவில்லை. தமிழின நசுக்குதலை இந்தியாவும் இன்னும் சில நாடுகளும் உலக அரங்கில் இலங்கையின் சிறுபான்மைக்கு எதிரான பேரினவாதமெனக் கண்டித்தபோது அது தவறென்பதை உணர்த்த இலங்கை அரசு முஸ்லிம்களுக்குக் கொடுக்கும் சலுகைகளையே ஆதாரமாகக் காட்டியது. முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழினத்தின் கொதிப்பில் கூதல் காய்ந்தனர். எரிகின்ற வீட்டில் பிடுங்குவது லாபம் என்பதுபோல அவர்களின் போக்கு அமைந்திருந்தது.
அந்த நிலை மாறியது 2009 இல். அரசின் படைகள் தமிழினத்தின் ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்தவுடன் அடுத்து வெளியேற்ற வேண்டியவர்கள் முஸ்லிம்களே என்று பௌத்த சிங்கள பேரினவாதிகள் முடிவு செய்தனர். முஸ்லிம்கள் அன்னியர் என்ற கோஷம் மீண்டும் தலைதூக்கியது. அளுத்கம தாக்குதல் அந்தக் கோஷத்தின் வெளிப்பாடே. அதனைத் தொடர்ந்து பல கலவரங்களை முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. சஹ்ரான் என்ற கொடியோனின் கொலை வெறிக்குப் பின்னர் முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சினைகள் பெருகத் தொடங்கின. பள்ளிவாசல்களின் முன் புத்தர் சிலை தோன்றுதல், பள்ளிவாசல்களே பறிபோகுதல், மதரசாக்கள் மூடப்பட வேண்டும் என்ற கூக்குரல், இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்யத் தடை, முஸ்லிம்களின் வியாபாரப் பகிஷ்கரிப்பு, முஸ்லிம் திறமைசாலிகளின்மேல் அபாண்டமான குற்றச்சாட்டுகள், அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் முஸ்லிம்களின் நிலங்கள் பறிபோகுதல் என்றவாறு ஒன்றன்பின் ஒன்றாக பேரினவாதிகளின் இம்சைகளுக்கு முஸ்லிம்கள் ஆளாயினர். ஆகவே முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் யாவற்றுக்கும் பேரினவாதமே மூல காரணம் என்பதை மேலும் உணர்த்த வேண்டுமா?
இந்த நிலையில் ஒவ்வொரு பிரச்சினையும் எழும்போது தலைவர்களிடம் ஓடுவதும் மகஜர் சமர்ப்பிப்பதும் நிரந்தரத் தீர்வைத் தருமா? அல்லது அப்பிரச்சினைகளின் மூலகாரணத்தை அகற்றுவதால் நிரந்தரத் தீர்வு ஏற்படுமா? இரண்டாவது வழியே சிறந்தது என்பதை ஏன் முஸ்லிம் பிரபலங்கள் இன்னும்தான் உணர மறுக்கின்றனரோ? அந்த வழியிற் பயணித்து நாட்டின் அரசியலை இன, மதச் சார்பற்ற ஒன்றாக மாற்ற வேண்டுமென்று சிங்கள மக்களின் மத்தியிலிருந்தே குரல்கள் எழுந்தபோது முஸ்லிம் தலைவர்கள் அந்தக் குரல்களுக்கு வலுவூட்டினார்களா? இல்லவே இல்லை. ஏன்?
1950, 1960களில் இலங்கையின் இடதுசாரிக் கட்சிகள் இன, மதச் சார்பற்ற ஓர் அரசியல் அமைப்பின் மூலம் நாட்டை சமதர்மக் கொள்கைகளின் அடிப்படையில் கட்டியெழுப்ப நினைத்துத் தேர்தலில் குதித்தபோது இரண்டு சிறுபான்மை இனங்களும் அவர்களுக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டன.
மெளலவிமார் அவர்களை நாத்திகர் என்றும் முஸ்லிம் முதலாளிகளோ அவர்களை தனியார் வியாபாரத்தின் எதிரிகள் என்றும் பட்டஞ்சூட்டி இனவாதம் பேசிய கட்சிகளுக்கே முஸ்லிம்களின் வாக்குகளை திரட்டிக் கொடுத்தனர். தமிழினமோ சிங்கள இனவாதத்துக்குப் பதிலடி கொடுக்க தமிழ் இனவாதத்தை வளர்த்தனர். அந்த இனவாதம் 1983க்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் அவிழ்த்து விடப்பட்டது. அதற்குப் பதிலடி கொடுக்கவே முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஒரு முஸ்லிம் இனவாதக்கட்சி உருவானது. அதனால் ஏற்பட்ட இலாபம் என்ன? தனிக்கட்சி இல்லாமலே 1950 முதல் முஸ்லிம் அரசியல்வாதிகள் நடாத்திய வியாபார அரசியலை இப்போது கட்சியமைத்து இளைய தலைமுறை மேற்கொள்கிறது. இதுவரை இந்தத் தலைமுறை சாதித்தவை என்ன? மேலே குறிப்பிட்ட பிரச்சினைகள் வளர வழிவகுத்தவர்கள் இவர்களே என்பதை வெளிப்படையாகவே இக்கட்டுரை சுட்டிக்காட்ட விரும்புகிறது. இனியாவது முஸ்லிம் சமூகம் கண்திறக்குமா?
பேரினவாதிகளின் ஆட்சி நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்தாக்கி நாட்டையே கடனாளியாக்கி பதினேழாவது முறையாக சர்வதேச நாணய நிதியின் காலடியில் மண்டியிடச் செய்துள்ளது. அதனால் விளைகின்ற கஷ்ட நஷ்டங்களை சாதாரண மக்கள் தினமும் அனுபவிக்கின்றனர். நாணய நிதியும் இலங்கையின் மத்திய வங்கியும் இன்னும் ஓரிரு வருடங்களில் நாட்டின் பொருளாதாரம் பழைய நிலையை அடையும் என்று கூறுகின்றன. ஜனாதிபதியோ 2048ஆம் ஆண்டளவில் இலங்கை ஒரு சொர்க்கபுரியாகும் என்று ஆருடம் கூறுகின்றார். ஆனால் ஜனாதிபதியோ அவருடைய ஆதரவாளர்களோ நாட்டின் அரசியலின் அடித்தளமாக விளங்கி ஊழல் மலிந்த ஒரு பொருளாதாரத்தை உருவாக்கி நாட்டையே வங்குரோத்தாக்கிய சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு முடிவுகட்ட முன்வருவதாகக் காணோம்.
ஏனெனில் அந்த ஏணியில் கால் வைக்காமல் ஜனாதிபதியோ அவரின் ஆதரவாளர்களோ ஆட்சியில் அமர முடியாது. அதைத்தான் தேசிய மக்கள் சக்தியைத் தவிர்ந்த ஏனைய எதிர்க்கட்சிகளும் உணர்ந்துள்ளன. ஆனால் அந்த அடித்தளத்தை தகர்த்தெறியும் வரை இந்த நாடு நிரந்தர சபீட்சத்தை அடைய முடியாது.
பௌத்த சிங்கள பேரினவாதத்தின் எழுதப்படாத ஒரு தத்துவம் என்னவெனில் ஆட்சி பௌத்த சிங்களவர் கைகளில் இருக்கும்வரை அந்த ஆட்சியாளர்கள் யாருக்கும் பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் எப்படியும் நிர்வகிக்கலாம். இன்று நடைபெறுகின்ற ஊழல்களுக்கு வழிவகுத்ததே இந்தத் தத்துவமே. இதனை இனியாவது மக்கள் உணர்வார்களா? உதாரணமாக, நாட்டின் மொத்தம் 500,000 வரியிறுப்பாளர்களில் 31,000 பேர் மட்டுமே வரி செலுத்துகிறார்கள் என்பதும், 105,000 பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுள் ஆக 382 மட்டும் 82 சதவீத வரியைச் செலுத்துகின்றன என்பதும் அண்மையில் வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்கள்.
நாட்டில் நிலவும் ஊழலுக்கு இதைவிடவும் சிறந்த ஓர் உதாரணம் வேண்டுமா? இந்தச் சீரழிவையும் அதன் பாதுகாவலனான பௌத்த சிங்களப் பேரினவாதத்தையும் களைந்தெறியாமல் எந்தப் பொருளாதாரப் பரிகாரமும் நிலையான பலன்தரப் போவதில்லை.
இன்றைய நிலையில் தேசிய மக்கள் சக்தி ஒன்றே கடந்த கால இடதுசாரிக் கட்சிகளைப்போன்று இன மத அடிப்படையற்ற ஓர் அரசியலை அமைக்க முன்வந்துள்ளது. 2022 இல் அரகலய இளைஞர் ஆரம்பித்த போராட்டத்தை வழிநடத்திச் செல்லும் ஓர் இயக்கமாக தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளது. அதன் பொருளாதாரக் கொள்கை சர்வதேச நாணய நிதியின் ஏவல்களுக்கு முற்றாக அடிபணியாமல் அவற்றுள் பொருத்தமானவற்றை ஏற்று இலங்கையின் உள்நாட்டு வளங்களுக்கும் உழைப்புச் சக்திக்கும் செயற்திறனுக்கும் முதலிடம் வழங்கி, சந்தைச் சக்திகளுடன் இணைந்து வெளிநாட்டு முதலீட்டையும் திட்டமிட்ட முறையில் வழிப்படுத்தி ஒரு புதுப்பாதையிலே நாட்டை இட்டுச் செல்வதாகும். தேசிய மக்கள் சக்தியின் தலைமைக்குள் பல திறமைசாலிகளும் வல்லுனர்களும் காணப்படுகின்றனர். திறமைக்கு முதலிடம் வழங்கும் ஒரு கட்சியாக இது தென்படுகின்றது. இதனை முஸ்லிம்கள் நிதானமாக எடைபோட்டுப்பார்க்க வேண்டும். ேபரினவாதக் கட்சிகளுடன் இனியும் பேரம்பேசாமல் முஸ்லிம் இனவாதக் கட்சிகளையும் புறந்தள்ளி முற்போக்குச் சிந்தனையுள்ள ஒரு புதிய தலைமுறையுடன் இணைந்து தமது சமூகத்தின் எதிர்கால வாழ்வை வளப்படுத்த வேண்டும் என்பதே இக்கட்டுரையின் தீர்க்கமான கோரிக்கை.-Vidivelli