மஹரகம கபூரியா அரபுக் கல்லூரி விவகாரம்: வெளியேற்றப்பட்ட மாணவர்களின் புத்தகங்களை மீள கையளிக்க மறுப்பு
திணைக்களத்தில் முறையிடுவதற்கு பாதிக்கப்பட்டோர் தீர்மானம்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
மஹரகம கபூரியா அரபுக்கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள மாணவர்களின் பாடநூல்கள், பயிற்சிப் புத்தகங்கள் என்பவற்றை மீள கையளிக்க கல்லூரியின் புதிய அதிபர் மறுத்துள்ள நிலையில் இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு முறையிடுவதற்கு மாணவர்கள் தீர்மானித்துள்ளனர்.
கல்லூரியின் மாணவர்களுக்கு கல்லூரிக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கல்லூரியில் இருக்கும் தாம் பயன்படுத்திய தமது பாடநூல்கள், பயிற்சி புத்தகங்கள் மற்றும் உபகரணங்களைக் கோரி எழுத்துமூலம் அறிவித்திருந்தனர். தமது கோரிக்கைக்கு பதில் ஏதும் கிடைக்காமையினால் அவர்கள் அண்மையில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காக கல்லூரி வளாகத்திலுள்ள பள்ளிவாசல் திறக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்று தங்களது பாடநூல்கள், பயிற்சி புத்தகங்களை அதிபரிடம் கோரியுள்ளார்கள். ஆனால் அவர்களது உடமைகள் வழங்கப்படாது பலவந்தமாக திருப்பியனுப்பப்பட்டுள்ளார்கள்.
‘‘நான் 7 வருடகாலமாக கபூரியாவில் பயின்றேன். எமது பாடநூல்கள் கல்லூரியில் இருக்கிறது. அவை எனக்குத் திருப்பித் தரப்படவில்லை. இன்றைய நிலையில் அவற்றின் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாகும்’’ என மாணவர் ஒருவர் விடிவெள்ளிக்கு தெரிவித்தார்.
கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள 62 மாணவர்கள் தற்போது வேறு அரபுக்கல்லூரிகளில் இணைந்து கல்வியைத் தொடர்வதாக கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஐ.எல்.டில்சாட் மொஹமட் தெரிவித்தார்.
கபூரியா அரபுக்கல்லூரி அதன் வக்பு சொத்துக்கள் தொடர்பில் வக்பு ட்ரிபியுனல், உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் எட்டு வழக்குகள் விசாரணையின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விவகாரம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைசலை தொடர்பு கொண்டபோது இவ்விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என்றார்.- Vidivelli