கொத்துக் கொத்தாக உயிர்களைப் பலியெடுக்கும் கொட்டலிய பாலம்!

மன்னம்பிட்டியில் நடந்தது என்ன?

0 308

எம்.வை.எம்.சியாம்

“மன்­னம்­பிட்டி கொட்­ட­லிய பாலத்தை அண்­மிக்­கும்­போது இரவு 7.45 மணி­யி­ருக்கும். பஸ் மிக வேக­மாக சென்று கொண்­டி­ருந்­தது. பாலத்­துக்கு அருகே வேகக் கட்­டுப்­பாட்டு தடங்­களில் டயர்கள் பட்­ட­துமே பஸ் கட்­டுப்­பாட்டை இழந்து பாலத்­தையும் உடைத்­துக்­கொண்டு ஆற்­றுக்குள் விழுந்­தது. அதுதான் எமது வாழ்க்­கையின் கடைசி நிமி­டங்கள் என நினைத்தேன்” என மன்­னம்­பிட்­டியில் 11 உயிர்­களைப் பலி­யெ­டுத்த பஸ் விபத்தில் உயிர்­தப்­பிய முர்ஷித் அஹமட் தெரி­வித்தார்.

கது­ரு­வெ­ல­வி­லி­ருந்து ஒலுவில் நோக்கிச் சென்ற தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக இஸ்­லா­மிய கற்­கைகள் மற்றும் அரபு மொழி பீட மாண­வ­னான முர்ஷித் அஹமட் தனது அந்த ‘திக் திக்’ அனு­ப­வங்­களை விடி­வெள்­ளி­யுடன் பகிர்ந்­து­கொண்டார்.

அன்று இரவு என்ன நடந்­தது?
“நான் கண்­டி­யி­லி­ருந்து கது­ரு­வெ­ல­விற்கு வந்து, குறித்த பஸ்ஸில் ஏறினேன். என்­னுடன் கண்­டி­யி­லி­ருந்து வந்­த­வர்­களும், கொழும்­பி­லி­ருந்து வந்த மற்­று­மொரு பஸ்ஸில் வந்­த­வர்­க­ளுமே குறித்த பஸ்ஸில் ஏறி­னார்கள். 7.20 மணி அளவில் பஸ் தரிப்­பி­டத்தில் இருந்து பய­ணத்தை ஆரம்­பித்து பின் பஸ் இடை­ந­டுவே 10 நிமி­டங்கள் கது­ரு­வெல தனியார் பஸ் தரப்­பி­ட­மொன்றில் நிறுத்­தப்­பட்டு 7.30க்கு கல்­முனை நோக்கி பய­ணத்தை ஆரம்­பித்­தது.

பய­ணத்தை ஆரம்­பித்­தது முதல் வேக­மாக சென்ற பஸ் சுமார் 7.45 மணி­ய­ளவில் மன்­னம்­பிட்டி கொட்­ட­லிய பாலத்தை அண்­மித்த சந்­தர்ப்­பத்தில் வேகத்தை குறைக்­காமல் அதே வேகத்­தி­லேயே பாலத்­தினுள் நுழைந்­தது. முன்னால் இருந்த ஸ்பீட் ப்ரேக்­கரை கவ­னிக்­காமல் அதில் வேக­மாக பஸ்ஸை செலுத்­தி­ய­மையால் தீடீர் என தூக்­கப்­பட்ட பஸ் டயர்கள் இழுத்துச் செல்­லப்­பட்டு சார­தி­யினால் பஸ்ஸை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் பாலத்தின் கம்­பி­களை உடைத்து கொண்டு கீழே வீழந்­தது.

மலை­யொன்றின் மேலி­ருந்து கீழே வீழ்­வது போன்­றுதான் இருந்­தது. பஸ்­ஸினுள் இருந்த அனை­வரும் கூக்­கு­ர­லிட்­டனர். வீழ்ந்த உடனே பஸ்­ஸுக்குள் நீர் உட்­பு­கு­வதை அவ­தா­னித்த பின்­னரே நாங்கள் ஆற்­றுக்குள் வீழ்ந்­துள்ளோம் என்று விளங்­கி­யது. அதுதான் வாழ்க்­கையின் கடைசி நிமி­டங்கள் என எண்ணிக் கொண்டோம். அதி­க­ள­வி­லான நீரையும் குடித்­து­விட்டேன். பின்­னர்தான் ஒரு­வாறு சுதா­க­ரித்துக் கொண்டு திறந்­தி­ருந்த ஜன்னல் வழி­யாக நான் மேலே வந்தேன். அந்த சந்­தர்ப்­பத்தில் இருட்­டாக இருந்­தது.

காலில் இருந்த ஒரு பாத­ணி­யு­ட­னேயே ஆற்­றை­விட்டும் வெளி­யேறி வீதிக்கு ஏறி வந்து எம்மை காப்­பாற்­று­மாறு உதவி கோரினேன்” என தான் உயிர் தப்­பிய கணங்­களை முர்ஷித் அஹமட் எம் கண்­முன்னே கொண்டு வந்தார்.

விபத்து நடந்த மறு­க­ணமே அவ்­வ­ழியால் பய­ணித்த பொது மக்­களும் அருகில் இருந்த பிர­தே­ச­வா­சி­களும் தம் உயி­ரையும் துச்சம் என மதித்து ஆற்­றுக்குள் குதித்து உயி­ருக்கு போராடிக் கொண்­டி­ருந்­த­வர்­களை மீட்கும் பணியில் ஈடு­பட்­டனர். பொலிஸ் மற்றும் இரா­ணு­வத்­தி­னரும் சம்­பவ இடத்­துக்கு விரைந்து உயிர்­களை காப்­பாற்றும் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். இவ்­வாறு உட­ன­டி­யாக பொது மக்­களும் படை­யி­னரும் மீட்புப் பணியில் ஈடு­பட்­டி­ரா­விடின் பலி­யா­ன­வர்­களின் எண்­ணிக்கை மேலும் உயர்ந்­தி­ருக்கும் என சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

சுமார் 3 மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் அதி­க­மாக மேற்­கொள்­ளப்­பட்ட மீட்பு பணி­க­ளுக்கு பின்னர் 10 பேர் உயி­ரி­ழந்த நிலையில் சட­லங்­க­ளாக மீட்­கப்­பட்­டனர். 42 பேர் காயங்­க­ளுடன் பொலன்­ன­றுவை மற்றும் மன்­னம்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். மறுநாள் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

11 பேர் உயி­ரி­ழப்பு
இச் சம்­ப­வத்தில் மொத்­த­மாக 11 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக வைத்­தி­ய­சாலை தக­வல்கள் உறு­திப்­ப­டுத்­தின. ஆரம்­பத்தில் 12 பேர் உயி­ரி­ழந்­த­தாக தக­வல்கள் வெளி­வந்த போதிலும் இறு­தி­யான கணக்­கெ­டுப்­பு­க­ளின்­படி 11 பேரே மர­ணித்­துள்­ள­தாக பொலன்­ன­றுவை வைத்­தி­ய­சாலை நிர்­வாகம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதில் சிங்­கள சமூ­கத்தைச் சேர்ந்த 4 பேரும் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த 7 பேரு­மாக 11 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

ஏறா­வூரைச் சேர்ந்த ஒரு பெண் உட்­பட மூன்று பேரும், ஓட்­ட­மா­வ­டியைச் சேர்ந்த ஒரு பெண் உட்­பட மூன்று பேரும் ஒலுவில் பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு ஆணும், பொல­ன­று­வையைச் சேர்ந்த ஒரு ஆணும், அலவ்வ, ஆன­ம­டுவ, மற்றும் ஹலா­வத்த ஆகிய பிர­தே­சங்­களைச் சேர்ந்த தலா ஒரு­வ­ரு­மாக 11 பேர் இதில் இது­வரை உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இந்த கோர­வி­பத்தில் கிழக்கு பல்­க­லைக்­க­ழக்­கத்தின் தொழி­நுட்ப பீடத்தின் 3 ஆம் ஆண்டு மாண­வர்­க­ளான புத்­தளம், ஆன­ம­டுவ பிர­தே­சத்தைச் சேர்ந்த 23 வய­து­டைய தமித் சாகர மற்றும் தும்­ம­ல­சூ­ரிய பிர­தே­சத்தைச் சேர்ந்த 23 வய­து­டைய சாமித தில்ஷான் எனும் மாண­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ள­துடன், 18 வய­து­டைய செவ­னப்­பிட்­டிய பிர­தே­சத்தைச் சேர்ந்த டில்சான் சஞ்­சீவ எனும் இளை­ஞரும் உயி­ரி­ழந்­தி­ருந்தார்.
மேலும் கொழும்­பி­லி­ருந்து ஒலுவில் நோக்கி பய­ணித்த 29 வய­து­டைய ரபி­யுத்தின் முஹம்­மதும் சம்­ப­வத்தின் போது உயி­ரி­ழந்­துள்ளார். இவர் மூன்­றரை மாத குழந்­தையின் தந்­தை­யாவார்.

அதே­போன்று ஏறா­வூரைச் சேர்ந்த மூன்று பேரும் இச் சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­தனர். இவர்­க­ளது ஜனா­ஸாக்கள் கடந்த திங்­கட்­கி­ழமை நள்­ளி­ரவு ஏறாவூர் நூறுஸ்­ஸலாம் பள்­ளி­வாயல் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டன. ஏறாவூர் அரபா வித்­தி­யா­ல­யத்­துக்கு அருகில் வசித்து வந்த மஃரூப் என்­ப­வரும், ஏறாவூர் ஆலை­யடி வீதியில் வசித்த வந்த முனாஸ் என்­ப­வரும், 3 பிள்­ளை­களின் தாயான கபீலா வீவி என்­ப­வ­ருமே இவ் விபத்தில் உயி­ரி­ழந்த ஏறா­வூரைச் சேர்ந்தவர்­க­ளாவர்.

அதே­போன்று ஓட்­ட­மா­வடி பிர­தே­சத்தைச் சேர்ந்த மூவரும் இவ்­வி­பத்தில் உயி­ரி­ழந்­தனர். இவர்­க­ளது ஜனா­ஸாக்கள் பொது அமைப்­பு­களின் ஏற்­பாட்டில் ஓட்­டா­ம­வடி நாவ­லடி கேணி நகர் அக்பர் ஜும்ஆ மைய­வா­டியில் நேற்­று­முன்­தினம் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டன. இவர்கள் ஓட்­ட­மா­வடி, கது­ரு­வெல போன்ற பகு­தி­களில் யாச­கத்தில் ஈடு­பட்டு வரு­ப­வர்கள் எனத் தெரிய வரு­கி­றது.

விபத்தின் போது அலவ்வ, சிலாபம், பொலன்­ன­றுவை பிர­தே­சங்­களைச் சேர்ந்­த­வர்­களும் உயி­ரி­ழந்­துள்­ளனர். காய­ம­டைந்­த­வர்­களில் இது­வ­ரையில் 25 பேர் வைத்­தி­ய­சாலையை விட்டு வெளி­யே­றி­யுள்­ளனர். ஜனாஸாக்களை விரைவாக விடுவிக்கும் பணியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மெளலானா உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர்.

விபத்தை ஏற்­ப­டுத்­திய பஸ்
தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்கள்
சச்சின் எனும் பெய­ரைக்­கொண்ட குறித்த தனியார் பஸ் பல வரு­டங்­க­ளாக போக்­கு­வ­ரத்து சேவையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்த பஸ் அதிக வேகம், எதிர்த்திசையில் வரும் வாக­னங்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் வகையில் பய­ணித்தல், முன்னால் செல்லும் வாக­னங்­களை பொருட்­ப­டுத்­தாமல் முந்­திச்­செல்­வது என ஒழுங்­கு­வி­தி­களை மீறியே தினமும் பய­ணத்தை மேற்­கொள்­வ­தாக பய­ணிகள் குற்­றம்­சாட்­டு­கின்­றனர்.

விபத்­துக்­குள்­ளான இதே தனியார் பஸ் வண்­டியின் முறை­கே­டுகள் குறித்து கடந்த 2020 மார்ச் 6 ஆம் திகதி பயணி ஒருவர் அதி­ருப்தி தெரி­வித்து தனது பேஸ்புக் பக்­கத்தில் வெளி­யிட்ட பதி­வா­னது தற்­போது இணை­யத்தில் அதிகம் பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளது.
அப்­ப­திவில் “ இந்த பஸ் விரைவில் மக்­களின் உயிரைப் பறிக்கப் போகி­றது. பல தட­வைகள் பார்த்­து­விட்டேன். அதிக வேகம். எதிர் திசையில் வாகனம் வந்­தாலும் இடம் கொடுக்­காமல் முந்திச் செல்ல முற்­ப­டு­கி­றது. பஸ் உரி­மை­யா­ளரே, உங்கள் சார­தி­யையும் நடத்­து­ன­ரையும் மக்­க­ளுக்கு ஆபத்து வரா­த­படி நடந்து கொள்ளச் சொல்­லுங்கள்’’ என அப்பதிவில் குறிப்­பிட்­டி­ருந்தார். அவர் எதிர்வுகூறியபடியே அனைத்தும் நடந்து முடிந்துள்ளது.

சார­திக்கு விளக்கமறியல்
விபத்­துக்குக் கார­ண­மான பஸ்ஸின் சாரதி உயிர்­தப்­பி­யுள்ள நிலையில் அவர் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு எதிர்­வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். சந்­தேக நபர் மட்­டக்­க­ளப்பு, சந்­தி­வெளி பிர­தே­சத்தைச் சேர்ந்த நட­ராஜா விமல்ராஜ் என்­ப­வ­ராவார்.

இதே சாரதி ஏற்­க­னவே ஆபத்­தான முறையில் வாக­னத்தைச் செலுத்­திய குற்­றச்­சாட்டில் அப­ராதம் விதிக்­கப்­பட்­டவர் என பொலிசார் தெரி­விக்­கின்­றனர். எவ்­வா­றா­யினும், விபத்து இடம்­பெற்ற போது சாரதி மது­போ­தையில் இருக்­க­வில்லை எனவும் அவர் வேறு ஏதேனும் போதைப்­பொ­ருளை பயன்­ப­டுத்­தி­யுள்­ளாரா என்­பது குறித்து விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வ­தாகவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் தெரி­வித்தார்.

அமைச்சர், ஆளுநர் கூறு­வது என்ன?
குறித்த தனியார் பஸ் நிறு­வ­னத்­துக்கு தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்­கு­ழுவின் அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­ப­ட­வில்லை எனவும் மாகாண அதி­கார சபை­யினால் ஏதேனும் அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளதா என்­பது தொடர்பில் ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக ஆணைக்­கு­ழுவின் தலைவர் சஷி வெல்­கம தெரி­வித்தார்.

இதே­வேளை, விபத்து தொடர்பில் அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு போக்­கு­வ­ரத்து துறை­யி­ன­ருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்­டமான் பணிப்­புரை விடுத்­துள்ளார். அத்­துடன் காய­ம­டைந்த தரப்­பி­ன­ருக்கு போதிய மருத்­துவ வச­தி­களை பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறும் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

இதே­வேளை நாட்டின் கடன் மறு­சீ­ர­மைப்பு இடம்­பெறும் வரை பாலங்­களை மீள புன­ர­மைக்க முடி­யாது என போக்­கு­வ­ரத்து பெருந்­தெ­ருக்கள் அமைச்சர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்­துள்ளார். “பாரிய வீதிகள் அமைக்­கப்­பட்­டுள்ள போதிலும் வீதி­க­ளுக்கு பொருந்­தாத பாலங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. பாலத்தில் பிரச்­சி­னை­யில்லை. பஸ் சார­தியே விபத்துக் காரணம். எனினும் பாலத்தை விஸ்­த­ரிப்­ப­தற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. பாலத்தை புன­ர­மைக்க 300 மில்­லியன் தேவைப்­ப­டு­வ­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இருப்­பினும் கடன் மறு­சீ­ர­மைப்பு இடம்­பெறும் வரை இவ்­வா­றான விபத்­துகள் இடம்­பெற்­றாலும் பாலங்­களை புன­ர­மைக்க முடி­யாது” என்றும் அமைச்சர் குறிப்­பிட்­டுள்ளார்.

அவ­லத்­திற்கு முற்­றுப்­புள்ளி
வைக்­கப்­ப­டுமா?
நாட்டில் விபத்துச் சம்­ப­வங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. மன்னம்பிட்டியில் குறித்த விபத்து நடந்த அதே தினம் நாட்டில் மொத்தமாக 18 பேர் விபத்துக்களில் மரணித்துள்ளனர். அன்றைய தினம் அம்பன்பொல மற்றும் புசல்லாவ ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் இருவர் மரணித்துள்ளனர். மட்டக்களப்பு, தன்னாமுனை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒன்றரை வயது சிறுமி ஒருவர் மரணித்துள்ளார்.

அதேபோன்று மன்னம்பிட்டி, கொட்டலிய பாலத்தில் இடம்பெற்ற விபத்து இதுவே முதல் தடவையுமல்ல. இதே இடத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வேன் ஒன்று விபத்துக்குள்ளாகி ஆற்றில் வீழ்ந்ததில் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்­வா­றான விபத்­துக்­க­ளுக்கு கார­ண­மாகும் சார­தி­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­துடன் பாது­காப்­பற்ற வீதிகள் மற்றும் பாலங்­களை புன­ர­மைக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இன்றேல் இவ்­வாறு தினம் தினம் அப்­பாவி உயிர்கள் அநி­யா­ய­மாக பறிக்­கப்­ப­டு­வதை தடுக்க முடியாது போய்விடும்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.