(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்வருடம் ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட இலங்கை யாத்திரிகர்கள் யாத்திரை தொடர்பான முறைபாடுகள் இருப்பின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு, எழுத்து மூலமோ, மின்னஞ்சல் மூலமோ அனுப்பி வைக்க முடியும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட். ஏ.எம்.பைசல் ‘விடிவெள்ளிக்’குத் தெரிவித்தார்.
இது தொடர்பில் பகிரங்க அறிவித்தல் விடுக்கப்படுமெனவும் அவர் கூறினார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் சவூதி அரேபியா மினாவில் இடம் பெற்ற அசெளகரியங்களைத் தவிர வேறு சம்பவங்களை இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் எதிர்கொள்ளவில்லை. மொத்தத்தில் இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் பயணம் சிறப்பாக நிறைவேறியது.
மினாவில் இடம் பெற்ற அசெளகரியங்களை இலங்கை யாத்திரிகர்கள் மாத்திரம் எதிர்கொள்ளவில்லை. பங்களா தேஷ், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளின் யாத்திரிகர்களும் எதிர்கொண்டனர்.
இதேவேளை இவ்வருடம் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட யாத்திரிகள் மொத்தமாக நான்கு பேர் சவூதியில் வபாத்தாகியுள்ளனர். ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வபாத்தாகியுள்ளார். நால்வரில் ஒருவர் வீதிவிபத்தில் வபாத்தாகியமை குறிப்பிடத்தக்கது என்றும் தெரிவித்தார்.
மேலும் ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்து ஹஜ் முகவர்கள், யாத்திரை, மற்றும் ஒப்பந்தங்கள் மீறப்பட்டமை தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைபாடுகள் சுயாதீன குழுவொன்றின் மூலம் ஆராயப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.- Vidivelli