முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்டு அனுப்பிய தனியார் திருத்த சட்ட திருத்த அறிக்கை; ஹலீம்தீன் குழுவின் கலந்துரையாடலின் பின் இறுதி தீர்மானம்
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவிப்பு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான சட்ட மூலத்துக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கையளித்துள்ள அறிக்கை சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையிலான குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுவினை கலந்துரையாடியதன் பின்பே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படுமெனவும் நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரியினால் குறிப்பிட்ட சட்டத்திருத்தங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டதே சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையிலான குழுவாகும்.
சப்ரி ஹலீம்தீன் தலைமையிலான குழுவினருடனான பேச்சுவார்த்தை ஓரிரு தினங்களில் இடம்பெறுமெனவும் நீதியமைச்சர் தெரிவித்தார். இதேவேளை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு நீதியமைச்சருக்கு கையளித்த குறிப்பிட்ட முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் தொடர்பிலான அறிக்கை தனக்குக் கிடைத்துள்ளதாக சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் தலைமையிலான குழுவில் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஹக்கீம் அபூபக்கர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அர்கம் நூராமித், சட்டத்தரணிகள் சபானா குல்பேகம், எர்மிசா டேகல் மற்றும் ஷேக் முயீஸ் புஹாரி, நாமிக் நபாத் ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli