வீதி விபத்துக்களை குறைக்க சட்டம் இறுக்கமாகுமா?

0 345

மன்­னம்­பிட்டி கொட்­ட­லிய பாலத்தில் பஸ் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளான சம்­பவம் முழு நாட்­டை­யுமே அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. இச் சம்­ப­வத்தில் 11 அப்­பாவி உயிர்கள் பறிக்­கப்­பட்­டுள்­ள­துடன் பலர் காய­ம­டைந்து தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

குறித்த பாலத்தில் ஏலவே 2011 இல் மரு­த­மு­னையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று பய­ணித்த வேன் வீழ்ந்து விபத்­துக்­குள்­ளா­னமை நினை­வி­ருக்­கலாம். இதில் 6 பேர் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர். இப் பாலத்தின் இரு மருங்­கிலும் பாது­காப்­பற்ற வகை­யி­லேயே வேலிகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. பாரிய வாக­னங்கள் விபத்­துக்­குள்­ளாகும் பட்­சத்தில் குறித்த வேலி­களைத் தகர்த்துக் கொண்டு வாக­னங்கள் ஆற்­றினுள் விழு­வ­தற்­கான சாத்­தி­யங்­களே அதிகம் உள்­ளன. இதன் கார­ண­மா­கவே இந்த பஸ் வண்­டியும் ஆற்­றினுள் வீழ்ந்­துள்­ளது.

பஸ் சார­தியின் பொறுப்­பற்ற தன்­மையே இந்த விபத்­துக்குக் காரணம் என்­ற­போ­திலும் எதிர்­கால ஆபத்­துக்­களைத் தவிர்க்கும் வகையில் உட­ன­டி­யாக பாது­காப்­பான வேலிக் கட்­ட­மைப்பை உரு­வாக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். நாட்டின் பொரு­ளா­தார நிலை­மையைக் கார­ணம்­காட்டி பாலங்­களைப் புன­ர­மைக்க நிதி ஒதுக்க முடி­யாது என அமைச்சர் பந்­துல பொறுப்­பற்ற வகையில் கருத்துக் கூறி­யி­ருப்­பது கண்­டிக்­கத்­தக்­க­தாகும். இந்த நெருக்­க­டி­யான நிலை­யிலும் அரச நிதி வீண் விரயம் செய்­யப்­பட்டுக் கொண்­டி­ருக்­கையில் மக்­களின் உயிர்­களைப் பாது­காப்­ப­தற்­காக நிதி ஒதுக்­கீடு செய்­வ­தற்கு அர­சாங்கம் பின்­னிற்கக் கூடாது என வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம்.

இத­னி­டையே நாட்டில் அண்மைக் கால­மாக விபத்துச் சம்­ப­வங்கள் அதி­க­ரித்­துள்­ளமை கவலை தரு­வ­தாக உள்­ளன. இந்த வரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் மாத்­திரம் 1190 பேர் விபத்­துக்­களில் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் இது­வரை 1126 பாரிய விபத்துச் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் தெரி­வித்­துள்ளார்.
2022 இல் 19740 வீதி விபத்­துக்கள் பதி­வா­கி­யுள்­ளன. இவற்றில் 2371 விபத்­துக்கள் பாரி­யவை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது. இவ்­வி­பத்­துக்கள் மூலம் 2022 இல் 2485 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இவற்றில் அதிக மர­ணங்கள் மற்றும் காயங்­க­ளுக்கு மோட்டார் சைக்கிள் விபத்­துக்­களே காரணம் என்றும் தர­வுகள் கூறு­கின்­றன.

சுகா­தார அமைச்சின் தர­வு­க­ளுக்­க­மைய, ஒவ்­வொரு வரு­டமும் 12 ஆயிரம் பேர் இலங்­கையில் விபத்­துக்­களால் மர­ணிக்­கின்­றனர். இதற்­க­மைய ஒவ்­வொரு 90 நிமி­டங்­க­ளிலும் 2 பேர் விபத்­துக்கள் மூலம் தமது உயிரைப் பறி கொடுக்­கின்­றனர். இவ்­வாறு உயி­ரி­ழப்­ப­வர்­களில் அதி­க­மானோர் 15 முதல் 44 வய­துக்­கி­டைப்­பட்­ட­வர்­க­ளாவர் என்றும் சுகா­தார அமைச்சு தெரி­விக்­கி­றது.

இவ்­வாறு உயி­ரி­ழப்போர் மற்றும் காய­ம­டை­வோ­ருக்கு சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்­காக தமது அமைச்சு வரு­டாந்தம் பாரிய தொகை பணத்தைச் செல­வி­ட­வேண்­டி­யுள்­ள­தாக சுகா­தார அமைச்சின் தொற்றா நோய்கள் தொடர்­பான விசேட வைத்­திய நிபுணர் டாக்டர் சமித சிறி­துங்க சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். விபத்­துக்கள் இடம்­பெ­றாது தவிர்ப்­பதன் மூலம் அர­சாங்­கத்­திற்கு பெருந்­தொகை நிதியைச் சேமிக்க முடியும் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

நாட்டில் பாதைகள் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டுள்­ள­மை­யா­னது வாக­னங்கள் வேக­மாகப் பய­ணிக்க வழி­ச­மைத்­துள்­ளது. பாதைகள் சீரா­க­வுள்­ளன என்­பது வேக­மாகப் பய­ணிப்­ப­தற்­கான அனு­ம­தி­யல்ல. அதி வேகப் பாதைகள் தவிர, ஏனைய பாதை­களில் 60 கி.மீ. வேகத்­திற்கு குறை­வா­கவே வாக­னங்கள் பய­ணிக்க வேண்டும் என்­பது விதி­யாகும்.

எனினும் தூரப் பய­ணங்­களில் ஈடு­படும் பஸ் வண்­டி­களும் ஏனைய வாக­னங்­களும் 100 கி.மீ. வேகத்தில் கூட செல்­வதை நாம் அவ­தா­னிக்­கிறோம். போக்­கு­வ­ரத்துப் பொலிசார் சேவையில் ஈடு­ப­டு­கின்ற போதிலும் அவர்கள் கூட இலஞ்சம் பெற்றுக் கொண்டு இவ்­வா­றான சார­திகள் தொடர்ந்தும் இதே தவறை இழைப்­ப­தற்கு அனு­ம­திக்­கின்­றனர்.
நாட்டில் இலஞ்சம் ஊழல் என்­பன சகல துறை­க­ளிலும் புரை­யோடிப் போயுள்­ளன.

அவற்றின் நேரடி விளை­வையே மன்­னம்­பிட்டி கொட்­டலி பாலத்தில் நடந்த விபத்தில் நாம் கண்­டுள்ளோம். குறித்த பஸ் சேவையை நடத்­து­பவர் உரிய அனு­ம­திப்­பத்­தி­ர­மின்­றியும் பய­ணி­களின் பாது­காப்பை பொருட்­ப­டுத்­தா­மலும் பல வருட காலமாக தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும் குறித்த பஸ் சேவை உரிமையாளருக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. இன்று இந்த அலட்சியங்கள் அப்பாவி உயிர்களைப் பலியெடுத்துள்ளன. இதில் உயிரிழந்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாட்டில் இதே நிலை நீடிக்குமானால் இவ்வாறான விபத்துக்கள் தொடர்வதை தடுக்க முடியாது போய்விடும். சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தை சரிவர நடை முறைப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.