கவிமணி மெளலவி
எம்.எம்.எம்.புஹாரி (பலாஹீ)
காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரியில் சிரேஷ்ட விரிவுரையாளராக நீண்ட காலம் கடமையாற்றியவரும் காத்தான்குடி தப்லீக் மர்கஸ் ஸபீலுர் றஷாத் அறபுக் கல்லூரியின் அதிபருமான பீ.எம்.எம்.ஹனீபா மெளலவி (ஆதம் லெப்பை ஹஸறத்) கடந்த 23.06.2023 வெள்ளிக்கிழமை காலமானார்கள். அன்னாரின் ஜனாஸா 24.06.2023 சனிக்கிழமை காலையில் காத்தான்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸா நல்லடக்கத்தில் உள்ளூர் வெளியூர்களைச் சேர்ந்த பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
ஆதம்லெப்பை ஹஸறத் அவர்கள் ஆரம்பத்தில் விவசாயத்தில் ஈடுபட்டார்கள். பின்னர் சிறிது காலம் வியாபாரத்தை மேற்கொண்டார்கள். பின்னர்தான் ஜாமிஅதுல் பலாஹில் சேர்ந்து புனித மார்க்கக் கல்வியைக் கற்றார்கள். கற்கும்போது மிகவும் திறமைசாலியாக விளங்கினார்கள். கற்றுக்கொண்டே கற்றுக்கொடுக்கும் உஸ்தாதாகத் திகழ்ந்தார்கள். நானும் அவர்களிடம் கற்கும் பாக்கியம் பெற்றேன்.
பலாஹின் அதிபராக இருந்த சங்கைக்குரிய ஷைகுல் பலாஹ் அவர்களுக்கு மிக்க உறுதுணையாக இருந்து பலாஹைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.
ஷைகுல் பலாஹ் அவர்கள் தனது உற்றார், உறவினர்களைத் துறந்து இந்தியாவின் அதிராம் பட்டிணத்திலிருந்து வந்து அர்ப்பணிப்புடன் பணி புரிந்தபோது அவர்களைத் தனது தந்தைபோன்று அரவணைத்து பக்கபலமாக இருந்து செயற்பட்டார்கள். அவர்களது இன்ப துன்பங்களில் பங்கெடுத்துத் துணை நின்றார்கள். பல தடவைகளில் அவர்களது தாயகமான அதிராம் பட்டிணத்துக்குச் சென்று அன்னாரின் குடும்ப நலன்களைப் பேணுவதில் அக்கறை செலுத்தினார்கள்.
ஷைகுல் பலாஹ் அவர்களைப் பெரிய ஹஸறத் என்றும், ஆதம் லெப்பை ஹஸரத் அவர்களை உதவி ஹஸறத் என்றும் மாணவர்களும் மற்றவர்களும் அழைப்பார்கள்.
ஜாமிஅதுல் பலாஹின் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்படும்போது அதில் பெரும் பங்கு வகித்தார்கள். புதிய கட்டிடத்திறப்பு விழா 1971 ஆம் ஆண்டு வெ-குவிமரிசையாக நடைபெற்றபோதுதான் ஆதம்லெப்பை ஹஸறத் அவர்களது பட்டமளிப்பு விழாவும் இடம் பெற்றது.
மெளலவி பலாஹீ பட்டம் பெற்ற உடனேயே ஜாமிஅதுல் பலாஹின் விரிவுரையாளராக நியமனம் பெற்று சிறப்பாக பணியாற்றினார்கள். இக்கால கட்டத்தில்தான் புனித தப்லீக் ஜமாஅத் பணியின் தீவிர பிரச்சாரகர் பேராசிரியர் மழ்ஹறுத்தீன் அவர்கள் ஜாமிஅதுல் பலாஹுக்கு வருகை தந்து மாணவர்களதும், விரிவுரையாளர்களதும் மத்தியில் சிறப்பான உரை நிகழ்த்தினார்கள். இவர்களது உரையினால் ஈர்க்கப்பட்ட ஆதம்லெப்பை ஹஸறத் புனித தப்லீக் பிரச்சார பணியில் பங்கெடுத்தார்கள். அன்று முதல் இறுதி மூச்சுவரை தப்லீக் பணியில் ஈடுபட்டார்கள். அதன் மூலம் நாட்டின் பல பாகங்களிலும், வெளிநாடுகள் பலவற்றிலும் இப்பணியில் மும்முரமாகப் பங்குகொண்டார்கள். இலங்கை தப்லீக் இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராக விளங்கினார்கள். கொழும்பு தப்லீக் ஜமாஅத் பிரதான மர்கஸில் பொறுப்புதாரிகளில் ஒருவராகச் செயற்பட்டார்கள்.
புனித இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கைப் பிரச்சாரம் தலைதூக்கியபோது அதற்கு எதிராக முன்னின்று குரல் கொடுத்தார்கள். இது தொடர்பாக சிறைவாசம் அனுபவிக்கும் துர்ப்பாக்கிய நிலையும் அவர்களுக்கு ஏற்பட்டது.
காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமாவுடன் இணைந்து சமய சீர்த்திருத்தப் பணியில் மும்முரமாக ஈடுபட்டார்கள். காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேனத்தை உருவாக்குவதில் அதிக பங்களிப்புச் செய்தார்கள். அதன் மூலம் கூட்டு ஸகாத் திட்டத்தை ஆரம்பிப்பதில் பெரும்பங்கு வகித்தார்கள். இறுதிவரை சம்மேளனத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக நின்றார்கள்.
தன்னைபோன்றே தனது மக்களையும் மார்க்கப் பணியாளராக உருவாக்கினார்கள். அவர்களது ஆண், பெண் மக்களிற் பலர் ஆலிம்களாகவும், ஹாபிழ்களாகவும், மார்க்கப்பணியாளர்களாகவும் திகழ்வதை நாம் பார்க்கிறோம்.
அவர்கள் தீவிர இஸ்லாமியப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டதன் காரணமாக ஜாமிஅதுல் பலாஹில் உஸ்தாதாகக் கடமையாற்ற முடியாமற்போனது. எனினும் அக்கல்லூரியின் பணிப்பாளர் சபையின் உறுப்பினராக இருந்து அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி உதவினார்கள்.
காத்தான்குடி தப்லீக் மர்கஸில் அறபுக் கல்லூரி ஒன்றை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தினார்கள். ‘ஸபீலுர் ரஷாத்’ என்ற பெயரில் இயங்கும் அக்கல்லூரியின் அதிபராக சுகவீனம் அடையும்வரை கடமையாற்றினார்கள்.
அவர்களது மரணச் செய்தி அறிந்து இலங்கையின் எல்லாப் பகுதிகளிலுமிருந்தும் உலமாக்களும், ஹாபிழ்களும், அரபுக்கல்லூரிகளின் விரிவுரையாளர்களும் மாணவர்களும் வந்து ஜனாஸாத் தொழுகையிலும், நல்லடக்கத்திலும் கலந்து கொண்டார்கள். இது காத்தான்குடியின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது.
அன்னாருக்கு அல்லாஹ், மறுமைப் பாக்கியங்களை நிறைவாகக் கொடுக்கப் பிரார்த்திப்போம்!- Vidivelli