உலக முஸ்லிம்களை கொதித்தெழச் செய்த சுவீடன் “குர்ஆன் எரிப்பு’ சம்பவம்!
ஏ.ஆர்.ஏ.பரீல்
உலக முஸ்லிம்கள் தியாகத் திருநாளான ஹஜ் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் சுவீடனில், முஸ்லிம்கள் தங்களது உயிரிலும் மேலாகக் கருதும் புனித குர்ஆன் பகிரங்கமாக எரியூட்டப்பட்டிருக்கிறது.
கடந்த மாதம் 28 ஆம் திகதி புதன் கிழமை சுவீடனின் ஸ்டொக் ஹோம் நகரில், அதுவும் பள்ளிவாசலொன்றுக்கு முன்னால் இந்த அவமதிப்பு அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
சுவீடன் பொலிஸாரின் அனுமதி பெற்று நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போதே உலக முஸ்லிம்களை கொதித்தெழச் செய்த இந்த உணர்வு மேலிட்ட சம்பவம் இடம் பெற்றிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு சுவீடனை வந்தடைந்திருந்த சல்வான் மொமிகா என்ற 37 வயதான ஈராக்கிய பிரஜையே புனித குர்ஆன் பக்கங்களை தீயிட்டுக் கொழுத்தியுள்ளார்.
முஸ்லிம்களின் புனித குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு எதிராக பெரும்பாலான நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. முஸ்லிம் நாடுகள் தங்கள் நாடுகளிலிருக்கும் சுவீடன் தூதுவர்களை அழைத்து சுவீடன் மீதான தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாட்டினை வன்மையாகக் கண்டித்துள்ளன. மதத்தினை நிந்தனை செய்யும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டாமெனவும் கோரியுள்ளன.
இதேவேளை இலங்கை அரசாங்கமும் இச்செயலை எதிர்த்து கண்டன அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
குர்ஆன் எரிப்பு விவகாரம் தொடர்பில் ஐ.நா.வின் மனித உரிமை பேரவையில் ஆராயப்படவேண்டுமென பாக்கிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானின் கோரிக்கையையடுத்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அவரச கூட்டமொன்றினை நடாத்தியுள்ளது.
இலங்கை அரசு கண்டனம்
சுவீடனில் அல்குர்ஆன் தீயிட்டு எரிக்கப்பட்டமையை இலங்கை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாக அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
‘கருத்து சுதந்திரம் ஏனையவர்களின் உரிமைகளை மதிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். கருத்தச் சுதந்திரம் ஏனைய மதங்களுக்கிடையில் பிளவுகளை உருவாக்குவதற்கும், வெறுப்புகளை ஏற்படுத்துவதற்கும் வழங்கப்படவில்லை. அனுமதிக்கப்படவில்லை. தேசிய மற்றும் சர்வதேச அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் நலன் கருதி சமூகங்களுக்கிடையே மத சகிப்புத்தன்மையை ஏற்படுத்தி வெறுப்பு செயல்களைத் தடுப்பதற்கு அனைத்து நாடுகளும், தனிநபர்களும் கடமைப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல்
உலமா சபை
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை இந்த இழிவான வெறுக்கத்தக்க செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. சுவீடன் அரசாங்கம் புனித குர்ஆனை எரியூட்டிய நபருக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான செயல்கள் சமூகங்களின் மத்தியில் சமாதானத்துக்கு இடையூறு ஏற்படுத்தி ஒற்றுமையை இல்லாமற் செய்யும் என்பதால் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என அகில இங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ் ஷெய்க் முப்தி எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஈதுல் அழ்ஹா தினத்தில் தனிநபர் ஒருவர் புனித அல்குர்ஆனின் புனிதத்தன்மையைக் கெடுக்கும் விதத்தில் ஸ்டொக் ஹோம் பள்ளிவாசலுக்கு வெளியே புனித குர் ஆனின் பக்கங்களை எரியூட்டியுள்ளார். இந்தச் செயல் இலங்கை முஸ்லிம்கள் உட்பட உலக முஸ்லிம்கள் மத்தியில் பெரும் சோகத்தை தோற்றுவித்துள்ளது.
அதேவேளை இந்தச் செயலை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்தோடு சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை நிலவுவதற்காக இவ்வாறான சமய வெறுப்பு செயல்களைத் தவிர்க்குமாறு அனைத்து நாடுகளையும், தனிநபர்களையும் வேண்டிக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
சூபி தரீக்காக்களின் உயர்பீடம்
கண்டனம்
சுவீடன் நாட்டில் புனித குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் வெறுப்பினை வெளித்தள்ளிய இஸ்லாத்துக்கு எதிரான சிலரின் விஷத்தன்மையான நடவடிக்கையாகும். சுவீடனின் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் குர்ஆன் எரிக்கப்பட்டமை அந்நாட்டின் மீது வெறுப்பினையும், கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என சூபி தரீக்காக்களின் உயர்பீடம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இன்றைய நாகரீக உலகில் சுவீடன் நாட்டினது இந்த வெறுப்பான செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். சுவீடனின் பெரும்பான்மையான மக்கள் சமாதான சகவாழ்வினை விரும்புபவர்கள். இவ்வாறான செயற்பாடு இடம்பெற்றிருக்கக் கூடாது. இவ்வாறான இஸ்லாத்துக்கு எதிரான சம்பவங்கள் நிறுத்தப்படவேண்டும். சுவீடன் மக்கள் மத சுதந்திரத்துக்கு எதிரான இவ்வாறான செயற்பாடுகளை உணர்வுபூர்வமாக எதிர்த்து குரல் கொடுக்கவேண்டும். இத்தகைய சம்பவங்கள் நாடு முழுவதும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம்.
குர்ஆன் முஸ்லிம்களால் பயபக்தியுடன் புனிதமாக கருதப்படும் நூலாகும். குர்ஆன் கருணையையும் அன்பினையும் போதிக்கிறது.
சூபி தரீக்காக்களின் உயர்பீடம் சுவீடனிலுள்ள இனவாதிகளால் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாத்துக்கெதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதிக்கு கடிதம்
சுவீடன் நாட்டில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் வலுவான கண்டன அறிக்கையை இலங்கை மற்றும் உலக முஸ்லிம் சமூகம் பாராட்டி வரவேற்கிறது. புனித குர்ஆன் அவமதிக்கப்பட்டபோது இந்திய பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவான இலங்கை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுடன் தனது ஒற்றுமையை வெளிப்படுத்த முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்ததற்கு நன்றிகள் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கண்டன அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது. குறிப்பிட்ட கண்டன அறிக்கையை வரவேற்று நன்றி தெரிவிக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் உதவித் தலைவர் ஹில்மி அஹமட் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.
அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்ட விவகாரம் கடந்த நாட்களில் பல முஸ்லிம் நாடுகளில் சீற்றத்தை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் சுவீடன் அதிகாரிகளுக்கு பரவலாக கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 28 ஆம் திகதி புதன்கிழமை சுவீடன் ஸ்டொக் ஹோமில் பள்ளிவாசலொன்றுக்கு வெளியில் இரு நபர்கள் புனித குர்ஆன் பாகங்களைக் கிழித்து பள்ளிவாசலுக்கு வெளியில் எரித்தனர். ஈத் அல் அழ்ஹாவின் முக்கியமான இஸ்லாமிய விடுமுறையின்போது இஸ்லாமிய புனித நூலான குர்ஆன் எரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், பல நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் இதனால் ஆத்திரமுற்றனர். வேதனைப்பட்டனர். குர்ஆன் அல்லாஹ்வின் நேரடி வார்த்தைகள் என்று முஸ்லிம்களால் நம்பப்படுகிறது. அத்தோடு இவ்வாறு வேண்டுமென்றே குர்ஆனை எரித்து அவமதிப்பது தெய்வ நிந்தனையாகும். மாறாக குர்ஆனை மதிப்பது இஸ்லாத்தின் மத நம்பிக்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். உலகெங்கிலுமுள்ள இஸ்லாமிய வெறுப்பாளர்கள் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் இஸ்லாத்தையும் புனித குர்ஆனையும் தமது அன்புக்குரிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் தொடர்ந்து அவமதித்து வருகிறார்கள். இது ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் அடங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தின் ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரானது.
அந்தந்த நாடுகளின் அனைத்து பிரஜைகளுக்கும் உள்ள உரிமையைப் போலவே முஸ்லிம்களின் உரிமைகளையும், அவர்களின் நம்பிக்கையை கண்ணியத்துடன் கடைப்பிடிப்பதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
பல முஸ்லிம் நாடுகள் தங்கள் நாட்டிலுள்ள சுவீடன் தூதுவர்களை வரவழைத்து, மதங்களையும், மதத்தலைவர்களையும் அவமதிப்பதை அனுமதிக்கும் சுவீடன் அரசாங்கத்தினது நிலைப்பாட்டுக்கு எதிராக தமது கோபத்தையும் ஏமாற்றத்தையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளன. கருத்துச் சுதந்திரத்துக்கான ஆதரவை வெளிப்படுத்தும் சுவீடன் நீதிமன்றம் எரிக்கும் போராட்டக்காரர்கள் எவரையும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் நீதிமன்றத்தை அவமதித்தவர்கள் மீது சுவீடன் நீதி கட்டமைப்பு எவ்வாறு செயற்படுகிறது என்பதை நாம் இன்னும் அறியவில்லை.
இரண்டு இஸ்லாமிய வெறுப்பாளர்கள் புனித குர்ஆனை அவமதித்தபோது, இந்திய பெருங்கடலில் உள்ள சிறிய தீவான இலங்கை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுடன் தனது ஒற்றுமையை வெளிப்படுத்த முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்ததற்கு எமது நன்றிகள்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா கண்டனம்
சுவீடன் ஸ்டொக்ஹோம் மத்திய பள்ளிவாசலுக்கு முன்னால் இஸ்லாத்துக்கு எதிரானவரொருவர் புனித குர்ஆனை எரித்தமைக்கு சவூதி அரேபியா தனது பலத்த கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் சுவீடன் நாட்டின் தூதுவரை அழைத்து மத நிந்தனையான இச்செயலை கண்டிப்பதாகவும், நிராகரிப்பதாகவும் தெரிவித்தார். இவ்வாறான மதத்தையும் முஸ்லிம்களையும் அவமானப்படுத்தும் செயல்கள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
அத்தோடு சகிப்புத் தன்மை, மிதவாதம் மற்றும் தீவிரவாதத்தை நிராகரித்தல் என்பவற்றுக்காக மேற்கொள்ளப்படும் சர்வதேச முயற்சிகளுக்கு நேரடியாக முரண்படும் அனைத்து நடவடிக்கைகளையும் சுவீடன் அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் சவூதி வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாப்பரசர் கண்டனம்
சுவீடன் நாட்டில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டமை தன்னை சினமும், வெறுப்பும் அடையச் செய்துள்ளதாக பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
பேச்சுச் சுதந்திரத்தைக் காரணம் காட்டி குறிப்பிட்ட சம்பவத்திற்கு அனுமதி வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் உலகெங்குமுள்ள கத்தோலிக்கர்களின் தலைவரான பாப்பரசர் கூறியுள்ளார்.
கத்தோலிக்கர்களின் தலைவரான பாப்பரசரின் கண்டனத்தை பல முஸ்லிம் நாடுகள் வரவேற்றுள்ளன.
குர்ஆனை எரித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
முஸ்லிம்கள் தங்கள் உயிரிலும் மேலாக கருதும் புனித குர்ஆனை எரித்த இனவாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். சுவீடன் அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். இதுவே உலக முஸ்லிம்களினதும் மதங்களுக்கிடையில் நல்லுறவை பேணுபவர்களினதும் எதிர்பார்ப்பாகும்.– Vidivelli