மதீனா வீதி விபத்தில் இலங்கை ஹஜ் முகவரொருவர் உயிரிழப்பு
2023 ஹஜ் யாத்திரையில் இதுவரை மூன்று இலங்கையர்கள் மரணமாகியுள்ளனர்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஹஜ் யாத்திரைக்காக இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்கு யாத்திரிகர்களை அழைத்துச்சென்ற ஹஜ் முகவர் ஒருவர் மதீனாவில் வீதி விபத்தில் சிக்கி வபாத்தாகியுள்ளார்.
இவ்வாறு வீதி விபத்தில் வபாத்தானவர் பிஸ்மில்லாஹ் ட்ரவல்ஸ் உரிமையாளரான சிஹாப்தீன் என்பவராவார்.
இவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வபாத்தானதாக ஜித்தாவிலுள்ள இலங்கையின் கொன்சியுலர் ஜெனரல் காரியாலயம் உறுதி செய்துள்ளது.
சிஹாப்தீன் கடந்த திங்கட்கிழமை வீதி விபத்துக்குள்ளானார். அவர் உடனடியாக மதீனா மிர்காத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை வபாத்தானார் என ஜித்தாவிலுள்ள இலங்கையின் கொன்சியுலர் ஜெனரல் பலாஹ் ஹிப்ஸி மெளலானா தெரிவித்தார்.
ஜனாஸா வைத்தியசாலையிலிருந்து எடுத்துவரப்பட்டு ஜென்னத்துல் பக்கி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிஹாப்தீன் கொழும்பு ஹமீதியா, அல்ஹுசைனி கல்லூரியின் பழைய மாணவராவார். இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரை மேற்கொண்ட 3500 பேர்களில் சிஹாப்தீனின் மரணம் மூன்றாவதாகும். ஏனைய இரு மரணங்களும் இருதய நோய் காரணமாக நிகழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.
நேற்று முன்தினம் மக்காவிலிருந்து ஹஜ் யாத்திரை மேற்கொண்ட ஸீனத் சப்ரா செய்யத் அலி என்ற பெண் மாரடைப்பினால் காலமானார்.
இவரது ஜனாஸா நேற்றுமுன்தினம் மக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.– Vidivelli