பலஸ்தீனின் ஜெனின் நகர் மீது இஸ்ரேலிய படையினர் கடந்த இரண்டு தினங்களாக முன்னெடுத்த பலத்த தாக்குதல்களில் 12 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான ஆக்கிரமிப்புகளில் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது.
பலஸ்தீனிலுள்ள மிகப் பாரிய அகதி முகாம்களுள் ஒன்றான ஜெனின் மீது நடாத்தப்பட்ட இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் 4000 இற்கும் அதிகமானோர் தமது வீடுகளை விட்டும் வெளியேறியிருப்பதாகவும் பலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் மக்களின் வீடுகள் மற்றும் பொது கட்டிடங்கள் பாரிய சேதங்களுக்குள்ளாகியுள்ளன.
இதன்போது இடம்பெற்ற மோதல்களில் இஸ்ரேலிய படையினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு அப் பகுதியிலிருந்து அவர்கள் வெளியேறியுள்ளதாகவும் தாக்குதல்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும் பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1000 இஸ்ரேலிய படையினர் இத் தாக்குதலில் பங்கெடுத்ததாகவும் இதன்போது தாக்குதல் ஹெலிகொப்டர்கள், ட்ரோன்கள், தாக்குதல் விமானங்கள் மற்றும் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் 20 தடவைகள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் மேற்குக் கரையில் கடந்த 20 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் ஒன்று என மிடில் ஈஸ்ட் மொனிடர் சுட்டிக்காட்டியுள்ளது.
இத் தாக்குதல்களை பலஸ்தீன அதிகார சபை உட்பட சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன.
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் இஸ்ரேலினால் நடாத்தப்பட்ட தாக்குதல்களில் 26 சிறுவர்கள் உள்ளிட்ட 170 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் அறிக்கைகளுக்கமைய இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் இஸ்ரேலிய குடியேறிகள், மாதாந்தம் தலா 95 தாக்குதல்களை பலஸ்தீனர்கள் மீது நடாத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய மொத்தமாக 570 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 160 தாக்குதல்களில் பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர். இது இஸ்ரேலிய இராணுவத்தினர் மாத்திரமன்றி சட்டவிரோத யூத குடியேற்றவாசிகளும் அப்பாவி பலஸ்தீனர்கள் மீது எந்தளவு தூரம் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுகின்றனர் என்பதைத் தெளிவுபடுத்துவதாகவுள்ளது.
அதுமாத்திரமன்றி, பலஸ்தீனின் மொத்த நிலப்பரப்பில் 85 வீதமான நிலப்பகுதியை தற்போது இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கைகளுக்கமைய, 2012 முதல் 2022 வரையான காலப் பகுதியில் மேற்குக் கரையில் ஆக்கிரமிப்பாளர்களின் சனத்தொகை 520,000 இலிருந்து 700,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஒரு தசாப்த காலப்பகுதியில் பலஸ்தீனர்கள் மீது குடியேற்றவாசிகளால் 3372 தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இவற்றில் 1222 பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று உலகில் எந்தவித விலைமதிப்புமற்றதாக பலஸ்தீனர்களின் உயிர்களும் அவர்களது நிலங்களும் மாறியுள்ளன. தினமும் இஸ்ரேல் கட்டவிழ்த்துவிடும் காட்டுமிராண்டித்தனங்களைத் தட்டிக்கேட்க எவருமற்ற அநாதரவான நிலைக்கு அந்தமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக இன்று வரை நூற்றுக் கணக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் இதுவரை அவற்றில் ஒன்றேனும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே கவலையான செய்தியாகும். ஒரு சில இஸ்லாமிய நாடுகளை தவிர எல்லா சர்வதேச நாடுகளும் இஸ்ரேலின் இந்த வன்முறைகளை சகித்துக் கொண்டு அதனுடன் தொடர்ச்சியாக தேனிலவு கொண்டாடி வருகின்றன. இந்நிலை மாற வேண்டும். இஸ்ரேலுடனான உறவுகள் துண்டிக்கப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும்.
எவ்வாறு தீவிரவாத இயக்கங்களை தடை செய்து அவற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுகின்றவோ அதேபோன்று மனித குலத்துக்கு எதிரான தீவிரவாதத்தில் கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும்.
பலஸ்தீன மக்கள் மீதான ஆக்கிரமிப்புகள் முடிவுக்கு வரவும் அம்மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழல் பிறக்கவும் அனைவரும் பிரார்த்திப்போமாக.– Vidivelli