மஹர பள்ளியை வேறொரு இடத்தில் நிர்மாணிக்க காணி ஒதுக்கீடு செய்க
புத்தசாசன அமைச்சிடம் முஸ்லிம் திணைக்களம் கோரிக்கை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு விடுதியாக மாற்றப்பட்டுள்ள நூற்றாண்டு கால வரலாறு கொண்டுள்ள மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை புதிய இடத்தில் நிர்மாணிக்க சிறைச்சாலை உத்தியோக பூர்வ இல்லத்துக்கு பின்னால் 20 பேர்ச் காணி ஒதுக்கித்தரவும், அல்லது பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் 20 பேர்ச் காணி ஒதுக்கித்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மத நடவடிக்கைகளுக்கான மேலதிக செயலாளரைக் கோரியுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைசல் கடிதம் மூலம் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; 2022 டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மஹர சிறைச்சாலை பள்ளிவாசல் தொடர்பில் நீதியமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு நீதியமைச்சர் பதிலளிக்கையில் சிறைச்சாலை திணைக்களம் இது தொடர்பில் ஜனாதிபதியை தெளிவுபடுத்தியுள்ளது.முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அதற்கென காணியொன்றினை பெற்றுத்தந்ததும் அவ்விடத்தில் பள்ளிவாசலை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று கூறினார். திணைக்களத்தினால் தகுந்த காணியொன்றினை இனங்காண முடியாமையாலே அமைச்சிடம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலை பள்ளிவாசல் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் R/1079 /GM/31 எனும் இலக்கத்தின் கீழ் 1967.03.07 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளது.
1902 ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பாரிய கலவரங்களையடுத்து நிர்வாகம் அங்கு கடமையிலிருந்த சிறைச்சாலை அதிகாரிகள், காவலர்களை நீக்கிவிட்டு மலே நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட சிறைக்காவலர்களால் கலவரங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
மலே நாட்டு சிறைக்காவலர்களுக்காகவே இந்தப் பள்ளிவாசல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. பல தசாப்த காலமாக முஸ்லிம் சிறைக்காவலர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இப்பள்ளிவாசலை பயன்படுத்தி வந்துள்ளனர்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு இப்பள்ளிவாசல் சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு நாட்டின் வக்பு சட்டத்தை மீறியதாகும். ஜனாஸா நல்லடக்கத்துக்கு தேவையான உபகரணங்கள் பள்ளிவாசலில் இருந்தன. இந்த உபகரணங்களை உபயோகிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு வதியும் முஸ்லிம்கள் பல அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை புதிய இடத்தில் நிர்மாணிக்க குறைந்தது 20 பேர்ச் காணியினைப் பெற்றுத்தரவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கடிதம் அனுப்பப்பட்டு ஒரு மாத காலமாகியும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.- Vidivelli