இந்த வருட புனித ஹஜ் யாத்திரையே கொவிட் முடக்கத்தின் பின்னர் அதிகமானவர்கள் பங்கேற்ற யாத்திரையாக அமையவுள்ளதாக சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு தெரிவித்துள்ளது.
2020 முதல் நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடுகள் இம்முறை முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதால், சுமார் 160 நாடுகளைச் சேர்ந்த 2 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் யாத்திரையில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டவர்களாவர்.
2020 இல், வெறும் 10,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். 2021 இல் 59,000 பேரும் கடந்த ஆண்டு ஒரு மில்லியன் பேரும் யாத்திரையில் பங்கேற்றனர்.
யாத்திரைக்கான சகல ஏற்பாடுகளும் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின்போது எதிர்நோக்கும் பிரதான சவால் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக அதிகரித்திருப்பதேயாகும்.
32,000க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ்கள் வெப்ப பக்கவாதம், நீரிழப்பு மற்றும் சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருப்பதாக சவூதி அதிகாரிகள் தெரிவித்தனர். யாத்திரிகர்களுக்கு சேவையளிக்க 6000 கட்டில்களுடன் 32 வைத்தியசாலைகள் தயார் நிலையில் உள்ளன.
நேற்று முன்தினம் வரை மக்காவிலும் மதீனாவிலும் 80,973 யாத்திரிகர்கள் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இவற்றில் 23 இதய சத்திர சிகிச்சைகளும் 168 பேருக்கு இதய வடிகுழாய் சிகிச்சையும் 464 சிறுநீரக நோயாளிகளுக்கு இரத்த சுத்திகரிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடமாட முடியாதவர்கள் மற்றும் அங்கவீனமுற்றவர்களுக்கான சுமார் 9000 சக்கர நாற்காலிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவற்றில் நவீன இலத்திரனியல் சக்கர நாற்காலிகளும் அடங்கும்.
இதேவேளை யாத்திரிகர்களின் பயன்பாட்டுக்காக மே 21 முதல் ஜுன் 24 வரை சவூதியின் தேசிய நீர்வழங்கல் சபை 21.4 மில்லியன் கன மீற்றர் அளவு நீரை விநியோகித்துள்ளது.
மினாவில் 2 மில்லியன் பேர்
இம்முறை ஹஜ் யாத்திரையின் பிரதான தலங்களில் ஒன்றான மினாவில் நேற்று முன்தினம் திங்கட் கிழமை சுமார் 2 மில்லியன் பேர் கூடாரங்களில் தங்கியிருந்ததாக சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு அறிவித்துள்ளது.
சன நெரிசலை முகாமை செய்வதில் சவூதி அரேபியா சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குவதாக இத்துறையில் நிபுணரான அக்ரம் ஜான் அரப் நியூசுக்குத் தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித தலங்களில் ஒன்றுகூடும் மில்லியன் கணக்கான மக்களை ஒழுங்குபடுத்த 400 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரபா பிரசங்கம் 20 மொழிகளில்
இம்முறை அரபா பிரசங்கம் 20 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு, ஆங்கிலம், பாரசீகம், உருது, ஹவுசா, ரயன், துருக்கி, பஞ்சாபி, சீனம், மலாய், சுவாஹிலி, ஸ்பானி, போர்த்துகீசியம், அம்ஹாரிக் உட்பட 20 மொழிகளில் மொழிபெயர்க்கப்படவுள்ளது.
5000 கி.மீ. சைக்களில் பயணித்த யாத்திரிகர்
மொரோக்கோவை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நபீல் அந்நஸ்ரி எனும் யாத்திரிகர் 11 நாடுகள் ஊடாக 57 நாட்களாக சுமார் 5000 கி.மீ. தூரம் பயணித்து ஹஜ் யாத்திரைக்கு வருகை தந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பிரான்சிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த அவர், இத்தாலி, ஸ்லோவேனியா, குரோசியா, மாண்டினீக்ரோ, பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, அல்பேனியா, கிரீஸ், ஜோர்டான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஊடாகப் பயணித்தே சவூதியை வந்தடைந்துள்ளார்.
இவர் ஒரு பிரெஞ்சு விவகார ஆய்வாளர், எழுத்தாளர் மற்றும் சிவில் சமூக ஆர்வலர் ஆவார். “என்னால் வெறுமனே 7 மணித்தியாலங்கள் பயணித்து சவூதிக்கு வந்திருக்க முடியும். எனினும் இவ்வாறு கஷ்டமான பயணத்தை மேற்கொண்டு இங்கு வந்து ஹஜ் யாத்திரையை முன்னெடுப்பதில் உள்ள திருப்தி அலாதியானது” என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மக்கள் கால் நடையாக ஹஜ்ஜுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் அன்று பட்டகஷ்டங்களை உணர்ந்து கொள்வதும் எனது இந்தப் பயணத்தின் நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
8500 கி.மீ. நடந்து ஹஜ்ஜுக்கு வந்த இந்தியர்
இதேவேளை இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த சிஹாபுத்தீன் செய்யித் அலவி எனும் இளைஞர் சுமார் 8500 கி.மீ. நடந்து ஹஜ் யாத்திரைக்கு வருகை தந்துள்ளார். இதற்காக அவர் ஒரு வருடமும் 17 நாட்களையும் செலவிட்டுள்ளார். கடந்த வருடம் ஜூன் 2 ஆம் திகதி கேரளாவிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த அவர், இவ்வருடம் ஜூன் 7 ஆம் திகதி மக்காவை வந்தடைந்தார். இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் ஊடாக நடந்தே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.
“குவைத் – சவூதி எல்லையை நான் வந்தடைந்த போது அன்று ரமழான் தினம் அதிகாலை 5.17 மணியாகவிருந்தது” என அவர் குறிப்பிட்டார். மக்காவை நான் வந்தடைந்தபோது கடந்த ஒரு வருடங்களாக நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறைந்துவிட்டன என்றார் அவர். 31 வயதான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
“எனக்கு எல்லா நாடுகளிலும் சட்டபூர்வ விசா இருந்தது. ஈரான் எனக்கு நுழைவு விசா வழங்கியது, பாகிஸ்தான் எனக்கு போக்குவரத்து விசா வழங்கியது, குவைத் காவல்துறையும் எனக்கு அனுமதி வழங்கியது, சவுதி அரேபியாவிற்கு, நான் பல நுழைவு விசாவைப் பெற்றேன். இங்குள்ள அதிகாரிகள் எனக்கு அன்பான வரவேற்பு அளித்தனர். ஏ- தர ஹஜ் சேவை வழங்குநர்களில் ஒருவர் மூலம் ஹஜ் செய்ய அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளேன். இது அனைத்து ஹஜ் யாத்திரிகர்களிடமும் சவூதி அதிகாரிகள் காட்டும் அளப்பரிய அன்பை காட்டுகிறது. நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,” என்றார்.
போரில் பாதிக்கப்பட்ட சிரியர்களுக்கு வாய்ப்பு
போரினால் பாதிக்கப்பட்ட சிரிய நாட்டு பிரஜைகளும் இம்முறை ஹஜ் யாத்திரையில் பங்கேற்றுள்ளனர். அங்கிருந்து ஹஜ்ஜுக்குச் செல்வதற்கு சுமார் 4200 டொலர்கள் செலவாகின்றன. இந்நிலையில் சவூதி இளவரசர் அப்துல் அஸீஸின் அனுசரணையில் போரினால் பாதிக்கப்பட்ட 500 சிரிய பிரஜைகளுக்கு யாத்திரையில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
“நான் என் கால்களை இழந்தேன், ஆனால் அல்லாஹ் தனது புனித வீட்டைப் பார்வையிடும் வாய்ப்பை எனக்கு அளித்தான்” என்று சிரிய-துருக்கிய எல்லைக்கு அருகிலுள்ள அட்மே முகாமில் வசிக்கும் எட்டு குழந்தைகளின் தந்தையான இஸ்மாயில் அல்-மஸ்ரி கூறினார். 2016 ஆம் ஆண்டில் அவரது கிராமமான கஃப்ருமா மீது அசாத் அரசாங்க படைகள் வீசிய விமான பீப்பாய் வெடிகுண்டு காரணமாக அவர் தனது காலை இழந்தார். இவ்வாறு பாதிக்கப்பட்ட 500 பேரே இம்முறை ஹஜ் செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli