துல் ஹிஜ்ஜா மாதம் பிறை பத்து அன்று பெருநாள் தொழுகை முடிந்ததில் இருந்து அய்யாமுத் தஷ்ரீக் பிறை 11, 12, 13 அன்று இறுதி நேரம் வரை உள்ள காலங்களில் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளை அல்லாஹ்வுக்காக அறுப்பதையே உழ்ஹிய்யா என்று கூறப்படுகிறது.
அல்லாஹ் கூறுகிறான் : அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக! அல்குர்ஆன் (22 : 37)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம் (சொந்த தேவைக்காகவே) அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறாரோ அவரது (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகிவிடும். மேலும் அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப்பின்பற்றியவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 5546
உழ்ஹிய்யா என்ற வணக்கம் இஸ்லாத்தில் வலியுறுத்தி சொல்லப்பட்ட ஒரு சுன்னாவாகும். இது முஸ்லிம்களின் சிறந்த வழிமுறையாகும். மேலும் இது அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருக்கி வைக்கும் இபாதத்துகளில் மிக மகத்தான ஓர் இபாதத் ஆகும்.
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘ஈதுல் அழ்ஹா’ பெருநாளில் நபி (ஸல்) அவர்கள் ‘(பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்’ என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (அபூ புர்தா) எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இது, இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள்’ என்றுகூறி, தம் (வீட்டார் மற்றும்) அண்டை வீட்டார் (உடைய தேவை) பற்றி(யும் அதனாலேயே தாம் தொழுகைக்கு முன்பே அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார். மேலும், தம்மிடம் ஒரு வயது பூர்த்தியான வெள்ளாடு இருப்பதாகவும், அது இறைச்சி ஆடுகள் இரண்டைவிடச் சிறந்தது என்றும் (அதை இப்போது குர்பானி கொடுக்கலாமா என்றும்) கேட்டார்.
நபி(ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். இந்த அனுமதி அவரல்லாதவருக்கும் பொருந்துமா? அல்லது பொருந்தாதா? என்று எனக்குத் தெரியாது. பிறகு நபி(ஸல்) அவர்கள் இரண்டு செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று அவ்விரண்டையும் அறுத்தார்கள். மக்கள் ஒரு சிறு ஆட்டு மந்தைக்குச் சென்று (அதிலிருந்த) ஆடுகளைத் தமக்குள்ளே பிரித்துக் கொண்ட (பின் குர்பானி கொடுத்த)னர். நூல் : புகாரி 5549.
நிறைய சிறப்புக்களையுடைய உழ்ஹிய்யா என்ற இந்த வணக்கம் அனைத்து மனிதர்களும் பெருநாள் தினங்களில்உண்டு, பருகி சந்தோஷமாக இருப்பதற்கே விதியாக்கப்பட்டிருக்கிறது. மேலுள்ள நபி மொழியில் இடம்பெறுகின்ற “இறைத்தூதர் அவர்களே! இது, இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள்’ என்று கூறி, தம் (வீட்டார் மற்றும்) அண்டைவீட்டார் (உடைய தேவை) பற்றி(யும் அதனாலேயே தாம் தொழுகைக்கு முன்பே அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார்” என்ற இந்த வாசகம் அதனையே எமக்கு உணர்த்துகிறது. பொதுவாக இஸ்லாமிய சட்டவிதிகள் யாவுமே மனிதர்களுக்கு நன்மை பயக்கக்கூடியதாகவும் சந்தோஷத்தையும் மனமகிழ்ச்சியையும் வழங்கக்கூடியதுமாகவே அமையப்பெற்றிருக்கின்றன. அதே நேரம் முஸ்லிமல்லாதவர்களுக்கோ பிற மனிதர்களுக்கோ குறித்த அந்த செயல் தொந்தரவாக அமையும் பட்சத்தில் அந்த வணக்கம் குறைபாடுள்ளதாகவே இஸ்லாத்தில் கருதப்படுகிறது. எனவே அந்த வணக்கத்தின் பரிபூரண நன்மைகளை அடைந்து கொள்வதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உழ்ஹிய்யா வணக்கத்தில் சுகாதார வழிமுறைகளை பேணுவதோடு அரசாங்க விதிமுறைகளையும் வழிகாட்டல்களையும் முற்றுமுழுதாக நாம் கடைப்பிடிக்க வேண்டும். நாட்டின் சமகால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, உழ்ஹிய்யாவின் உன்னத இலக்குகளை அடைந்து கொள்ளும் பொருட்டு அதனை ஊரின் தலைமை பள்ளிவாசலினூடாக சூழலுக்கேற்ப தேவைகளைக் கருத்திற்கொண்டு, சாதக, பாதகங்களை கவனித்து, ஆலோசனையின் அடிப்படையில் நாட்டு சட்டங்களுக்கு முழுமையாக இணங்கி, கூட்டாக நிறைவேற்றுவதே சிறந்தவழியாகும்.
குடும்பத்தில் ஏழைகளை ஒதுக்கிவிட்டு வசதி படைத்தவர்கள் மட்டும் உழ்ஹிய்யாவை தமக்குள்ளே பங்குவைத்துக்கொள்வதாலும் தமக்குள் மாத்திரம் சந்தோஷங்களை பரிமாறிக் கொள்வதாலும் ஒரு பொழுதும் அதன் நன்மையை முழுமையாக அடைந்து கொள்ள முடியாது.
பள்ளிவாசலின் தலைமையின் கீழ் கூட்டாக கொடுக்கின்ற போது பிற மத சகோதரர்களின் உணர்வுகளை காயப்படுத்திவிடாது பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி காயப்படுத்திவிட்டு நாம் மட்டும் சந்தோஷமாக இருக்க நினைப்பதுவும் இதன் உன்னத இலக்குகளை அடைந்து கொள்வதை விட்டும் எம்மை தூரமாக்கி விடுகின்றது.
ஊர் ஒற்றுமை என்ற அடிப்படையில் பள்ளிவாசல்களை மையப்படுத்தி குர்பானி கொடுக்க முயலும் போது அங்கு மாடுகளை அதிகமாக கட்டி வைக்க வேண்டியேற்படும். இது மாற்று மத சகோதரர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தலாம். அந்த வெறுப்பு, இஸ்லாம் பற்றிய தப்பான பார்வையை அவர்களிடத்தில் விதைத்துவிட அதிக வாய்ப்பிருக்கிறது.
எனவே முடியுமான வரை உழ்ஹிய்யா பிராணியை பிற மத சகோதரர்கள் பார்க்க முடியாத மறைவான இடத்தில் அறுப்பது நல்லது. பெருநாள் தவிர்ந்த அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில் நிலைமைகளை அவதானித்து சூரியன் உதயமாக முன்னரும் அது மறைந்த பின்னரும் இறைச்சிகளை விநியோகிப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும். மேலும்உழ்ஹிய்யா கொடுக்கும் போது அரச விதிமுறைகளை மீறாது நடந்து கொள்ளவேண்டும்.
உழ்ஹிய்யா பிராணிகளைக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டால் விற்பவரின் இடத்திலேயே வைத்து அறுத்து இறைச்சியை மறைவான பைகளிலிட்டு கொண்டு செல்ல வேண்டும். ஆடு மாடுகளை கொண்டுவருதல், கட்டிவைத்தல், அறுத்தல், பங்கிடல், துப்பரவு செய்தல், விநியோகித்தல் போன்ற எல்லாக் கட்டங்களையும் பிற மத சகோதரர்களின் பார்வையிலிருந்து முடியுமானவரை மறைத்தே செய்ய வேண்டும்.
இஸ்லாம் சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றது என்ற வகையில் ஆடு மாடு போன்றவற்றை அறுப்பதனால்வெளியேறக்கூடிய இரத்தத்தை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி விட வேண்டும். அத்துடன் அவற்றின் கழிவுகளை நிலத்தில் குழி தோண்டி புதைக்க வேண்டும். அல்லது நன்றாக பைகளில் வைத்து கட்டி பொதி செய்து குப்பை அள்ளுவோரிடம் கையளிக்க வேண்டும். கண்ட கண்ட இடங்களில் வீசிவிடாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் அவற்றை குப்பைக்குள் வீசுவோர் நாற்றம் எடுக்காத வகையில் பொதி செய்து அவற்றை வீச வேண்டும். சூழலை மாசுபடுத்தாது முடியுமானளவு அதனை துப்புரவாக வைத்திருத்தல் வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் நமது அசிங்கமான செயற்பாடுகளால் இந்த வணக்கத்திற்கே தடையேற்படாதிருக்க இவ்வருடத்தின் செயற்பாடுகளை நல்லமுறையில் மேற்கொள்ள வேண்டும்.
இறைச்சியை பங்கு வைக்கும் போது முஸ்லிமல்லாத சகோதரர்களாகிய நம் அயலவர்கள், ஊர்வாசிகள், உறவினர்கள் என்று எம்மோடு கலந்து வசிக்கும் முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு அவர்கள் விரும்பும் பட்சத்தில் இன நல்லுறவைப்பேணும் நோக்குடன் உழ்ஹிய்யா இறைச்சியை வழங்க முடியும் என்பதே பொருத்தமான நிலைப்பாடாகும்.
முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்; அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு அவர்களது குடும்பத்தில் ஆடு அறுக்கப்பட்டது. அவர் வீடு வந்தவுடன் எனது யூத அயலவருக்கு இதிலிருந்து வழங்கினீர்களா? எனது யூத அயலவருக்கு இதிலிருந்து வழங்கினீர்களா ? என இருமுறை கேட்டுவிட்டு நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூற கேட்டுள்ளேன், அண்டை அயலவர் பற்றி ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் எனக்கு வலியுறுத்திக் கூறினார்கள். அவரை எனக்கு அனந்தரக்காரராக ஆக்கி விடுவார்களோ என்று நான் அஞ்சும் அளவிற்கு எனக் கூறினார்கள் திர்மிதி (1943). அல்லாமா அல்பானி அவர்கள் இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசை பலமானது எனக்கூறியுள்ளார்கள்.
இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்; முஸ்லிமல்லாதவர்கள், சிறைக்கைதிகள், திம்மிக்களுக்கு ஏனைய ஸதகாக்கள் வழங்குவது போன்று உழ்ஹிய்யா இறைச்சியையும் வழங்க முடியும். நூல் அல்முக்னீ (9/450)
பதாவா அல்லஜ்னதுத் தாயிமாவின் (11/424) தீர்ப்பின் படி முஸ்லிம்களோடு இணங்கிப் போகும் இறை நிராகரிப்பாளர்கள், சிறைக் கைதிகள், அயலவர்கள், மாற்றுமதத்திலுள்ள உறவினர்கள் போன்றோர் இதனால் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுவார்கள் என்ற காரணியை வைத்து உழ்ஹிய்யா இறைச்சியை அவர்களுக்கு வழங்கமுடியும் என்று கூறப்பட்டுள்ளது.
அல்லாமா அப்துல் அஸீஸ் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் முஸ்லிம்களோடு போர் தொடுக்காத காபிர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சியை வழங்க முடியும் என தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.
மஜ்மூஉ பதாவா இப்னு பாஸ் – (48/18)
முஸ்லிமல்லாதவர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சியை வழங்கக் கூடாது என்று தடை செய்யக்கூடிய தெளிவான ஒரு அடிப்படை இல்லாமையின் காரணமாகவும் இலங்கை போன்ற முஸ்லிம் சிறுபான்மை நாடுகளில் இன நல்லுறவைப்பேணும் நோக்குடன் அயலவர்கள், ஊர்வாசிகள் , உறவினர்களாக எம்மோடு வசிக்கும் முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சியை வழங்க முடியும் என்பதே பொருத்தமான நிலைப்பாடாகும்.
நாம் மகிழ்வுற்று நம்மால் பிறர் மகிழ்வுறும் இப்புனித தினங்களில் இறைவனின் திருப்பொருத்தத்தை இலக்காக கொண்டு இந்த வணக்கத்தில் பேணவேண்டிய மேற்சொன்ன ஒழுக்கங்களை கடைப்பிடித்து ஒழுக முயற்சிப்போம்.- Vidivelli