இஸ்லாத்துடன் மானிடவியல் கலைகளையும் கற்பித்து துறைசார் நிபுணர்களை உருவாக்குகிறது நளீமியா
கலாபீட முதல்வர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்
ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய கலாநிலையத்தின் பொன்விழா மற்றும் 11ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24.06.2023 சனிக்கிழமை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வை முன்னிட்டு ஜாமிஆ நளீமிய்யாவின் முதல்வரும் இஸ்லாமிய அறிஞருமான அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
Q: ஜாமிஆ நளீமிய்யா பொன்விழாக் காணும் இந்த சந்தர்ப்பத்தில் பொன் விழா மற்றும் 11ஆவது பட்டமளிப்பு நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து சுருக்கமாக கூற முடியுமா?
முதல்வர்: இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். ஏனெனில், ஜாமிஆ நளீமிய்யாவின்கல்விப் பயணத்தில் அரை நூற்றாண்டு காலத்தை பூர்த்தி செய்கின்ற சந்தர்ப்பம் இது. அதனைக் கொண்டாடுவதில் பேருவகை அடைகின்றோம். அவ்வாறே கடந்த 50 வருடங்களில் எமது நிறுவனத்தில் பட்டம் பெற்று பொதுவாக பொதுக் கல்வித் துறையிலும் ஏனைய துறைகளிலும் குறிப்பாக இஸ்லாமிய கல்வித் துறையிலும் பட்டதாரிகள் நிகழ்த்திய சாதனைகள், அடைவுகள் பல. அவற்றுக்கு அடித்தளமிட்ட கல்வி நிறுவனம் என்ற வகையில் ஜாமிஆ நளீமிய்யா 50ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது. இச்சந்தர்ப்பத்தில் ஏழு தொகுதி பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளமையினாலும் இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.
இவ்வாறானதொரு பாரிய நிகழ்வை கல்லூரி வளாகத்திற்கு வெளியில் குறிப்பாக பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடத்துவது இதுவே முதல் தடவையாகும். இதுவும் நிகழ்வின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. இதற்கு முன்னர் 1986ஆம் ஆண்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் “Muslims of Sri Lanka: Avenues to Antiquity” எனும் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வை நடத்தியிருந்தோம். குறித்த அந்த நிகழ்வு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Q: பொன்விழாவை மையமாகக் கொண்டு வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருக்கின்றீர்களா?
முதல்வர்: எமது உயர் கல்வி நிறுவனம் நிலைநிறுத்தியுள்ள கல்விப் பாரம்பரியத்தை (Legacy) மேலும் மேம்படுத்தும் வகையிலும் குறிப்பாக இஸ்லாமியக் கல்வியை மேம்படுத்தும் வகையிலும் விஷேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொன்விழா நிகழ்வுகளைத் தொடர்ந்து, பழைய மாணவர்களின் (ராபிததுந் நளீமிய்யீன்) ஒன்றுகூடலும் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இது பழைய மாணவர்கள் மீண்டும் இணைவதற்கும் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நிறுவனத்தின் பழைய மாணவர் வலையமைப்பை வலுப்படுத்துவதற்குமான சந்தர்ப்பமாக அமையும் என எதிர்பார்க்கின்றோம்.
மேலும், ஜாமிஆவின் முன்னாள் பணிப்பாளரும் நாடறிந்த புத்திஜீவியாகவும் திகழ்ந்த கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களின் “கல்வித் துறைப் பங்களிப்பும் ஆய்வுப் பணிகளும்” என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
பொன் விழாவையொட்டி ஜாமிஆ நளீமிய்யாவின் ஐந்து தசாப்த கல்விப் பயணத்தை மையப்படுத்தி காலம் வேண்டி நிற்கும் பல கருப்பொருள்களில் தொடர் ஆய்வரங்குகள் நடத்தப்படவுள்ளன. ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிடப்படவுள்ளன.
Q: பொன்விழா நிகழ்ச்சி நிரல் பற்றி சுருக்கமாக கூற முடியுமா?
முதல்வர்: பொன்விழா மற்றும் பட்டமளிப்பு விழாவின் சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நிகழ்ச்சி நிரல் அமையும்.
அதிதிகளின் உரைகள், சிறப்புரைகளுடன் ஜாமிஆ நளீமிய்யா கடந்து வந்த பாதை, அதன் அடைவுகள் குறித்த ஆவணப் படம் (Video Documentary) திரையிடப்படும். 50 ஆண்டு நிறைவையிட்டு நினைவு மலரின் வெளியீட்டு நிகழ்வும் அதன்போது இடம்பெறும். சமூகத்தில் முக்கிய பிரமுகர்கள் சிலரிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட வீடியோ பதிவுகள் சில நிமிடங்கள் கொண்ட சுருக்கமான காணொளித் தொகுப்பாக திரையிடப்படும். குறித்த பிரமுகர்கள் வழங்கிய முழுமையான காணொளிகள் நளீமிய்யாவின் உத்தியோகபூர்வ Face Book, YOUTUBE தளங்களில் பதிவேற்றப்படும் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
Q: ஜாமிஆ நளீமிய்யா, அடிப்படையில் இஸ்லாமிய கற்கைகளுக்கான ஒரு கலாபீடம் என்பது அனைவரும் அறிந்த ஓர் உண்மை. கடந்த காலங்களில் நளீமிய்யாவின் முக்கிய நிகழ்வுகளில் சர்வதேச மட்ட இஸ்லாமிய அறிஞர்களும் புத்திஜீவிகளும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர் என்பதை நாம் அறிவோம். ஆயினும் இம்முறை நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடத்தக்க இஸ்லாமிய அறிஞர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பதை அவதானிக்க முடிகிறது. இது பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
முதல்வர்: உண்மைதான். கடந்த காலங்களில் ஜாமிஆவின் நிகழ்வுகளில் சர்வதேச மட்ட இஸ்லாமிய அறிஞர்களின் பங்கேற்பு அதிகமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும் பிற்பட்ட காலங்களில் சமகால சூழமைவுகளை கவனத்திற்கொண்டு உள்நாட்டு அறிஞர்களையும் புத்திஜீவிகளையும் முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்து வருகின்றோம். எமது சமூகத்திற்கு செய்திகள் சொல்லப்படவேண்டிய தேவை இருப்பதுபோலவே தேசிய மட்டத்திலும் நாட்டு மக்களுக்கு நம்மைப் பற்றிய உண்மையான செய்திகளை சொல்ல வேண்டியது காலத்தின் தேவையாக மாறியிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில்தான் உலமாக்கள், சமூகத் தலைமைகள், முஸ்லிம் புத்திஜீவிகள் முதலானோரின் பங்கேற்போடு தேசிய பல்கலைக்கழக மட்ட பேராசிரியர்களையும் அரசியல் தலைவர்களையும் முன்னிலைப்படுத்தி இம்முறை நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
ஜாமிஆ ஆரம்பிக்கப்பட்டது முதல் நாட்டினதும் சமூகத்தினதும் எல்லா மட்ட பிரதிநிதித்துவங்களும் உள்வாங்கப்பட்டே எமது நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். ஏனெனில் ஜாமிஆ என்பது இஸ்லாமிய கலைகளைப் போதிக்கின்ற ஒரு கலாபீடமாக இருப்பது போலவே மானிடவியல் கலைகளையும் கற்பித்து நாட்டுக்கு தேவையான துறைசார் நிபுணர்களையும் வளவாளர்களையும் உருவாக்குகின்ற ஒரு கலாபீடமாகவும் இருக்கின்றது. மேலும், பாகுபாடுகளுக்கும் வேறுபாடுகளுக்கும் அப்பால் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு அனைத்து தரப்பினரையும் அரவணைத்து பயணிக்கும் ஒரு நிறுவனமாகவும் விளங்குகின்றது என்பதை எல்லோரும் அறிவர்.
Q: நிகழ்ச்சி நிரலுக்கான அதிதிகள் தெரிவு பற்றி…
முதல்வர்: ஜாமிஆவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வில் கண்டிப்பாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய அறிஞர்கள், புத்திஜீவிகள், சமூகத் தலைவர்கள் தேசிய மட்டத்திலும் சமூக மட்டத்திலும் பெருந்தொகையானோர் இருக்கிறார்கள். ஆயினும் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சிகளை நிறைவு செய்யும் வகையில் செறிவான நிகழ்ச்சி நிரலை வகுப்பதற்கு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இதன்காரணமாகவே முக்கியத்துவம் வாய்ந்த பலரை அழைப்பிதழிலும் நிகழ்ச்சி நிரலிலும் உள்வாங்க முடியாமல் போனது. இதனையிட்டு நாம் பெரிதும் கவலைப்படுவதோடு அதற்காக எமது வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Q: பொன்விழா மற்றும் பட்டமளிப்பு விழா நிகழ்வுகளுக்கு நேரடியாக சமுகமளிக்க முடியாதவர்கள் அதனை ஒன்லைன் நேரலை மூலமாக பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் உள்ளனவா?
முதல்வர்: வரையறுக்கப்பட்ட ஆசன வசதி மற்றும் தற்போதைய சூழ்நிலை காரணமாக எல்லோரையும் நிகழ்வுக்கு நேரடியாக அழைக்க முடியாது என்பது யதார்த்தம்.இருப்பினும், நிகழ்வில் கலந்து கொள்வதற்கு ஆர்வமுள்ள அனைவரது பங்கேற்பையும் ஆதரவையும் நாம் மதிக்கிறோம். எமது உத்தியோகபூர்வ Facebook பக்கத்தில் விழா நிகழ்ச்சிகளை நேரலையாக (Live Streaming) காண்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தாம் இருக்கும் இடத்திலிருந்தபடியே பொன்விழா மற்றும் பட்டமளிப்பு விழா நிகழ்வுகளைப் பார்வையிட முடியும். – Vidivelli