உழ்ஹிய்யா பிராணிகளை கொண்டுசெல்கையில் தேவையற்ற தாமதங்களை தவிர்த்து விடுவிக்குக
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஹஜ் பெருநாள் காலத்தில் குர்பானுக்கான கால்நடைகள் வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் இடம்பெறும். இந்நிலையில் மாடுகளை போக்குவரத்து செய்வதற்கான சட்டரீதியான ஆவணங்களிருப்பின் தேவையற்ற தாமதங்களைத் தவிர்த்து விடுவிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் 2023.06.14 ஆம் திகதியிடப்பட்ட ஆர்ரிஎம் (361) சுற்று நிருபமொன்று அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஹஜ் பெருநாள் காலத்தில் மதக் கடமையான குர்பான் விலங்குகள் ஆடு, மாடுகள் போக்குவரத்து செய்யும் விடயத்தில் தற்போது அமுலிலுள்ள மிருக வதைச்சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பெளஸி மற்றும் நகீப்மெளலானா ஆகியோர் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரம ரத்னவைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்தே எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதிவரை மாடுகளை போக்குவரத்து செய்யும்போது தேவையற்ற தாமதங்களை ஏற்படுத்த வேண்டாமென பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளையும் வேண்டியுள்ளார்.
இது தொடர்பில் கடமையில் ஈடுபட்டிருக்கும் அனைத்து பொலிஸாரையும் அறிவுறுத்தும்படி பிரதி பொலிஸ்மா அதிபர்கள், வலயத்துக்கு பொறுப்பான பொலிஸ்மா அதிபர்கள், மாவட்டங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் வேண்டப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட சற்று நிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு ள்ளதாவது; ‘மிருகவதை தொடர்பிலான விதிமுறைகள் ஏற்கனவே பின்பற்றப்பட்டமை போன்று பின்பற்றப்பட வேண்டும்.
மேலும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் வேறு மதங்களின் வைபவங்களும் இடம் பெறவுள்ளதால் மாடுகள் போக்குவரத்து செய்யும்போது சில தடைகள் ஏற்படுத்தப்படலாம் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் தங்களது விசேட கவனம் செலுத்தப்பட்டு ஏதேனும் சம்பவங்கள், அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் இத்துடன் அறியத் தருகிறேன் என பொலிஸ் அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ள கடித்தில் தெரிவித்துள்ளார்.- Vidivelli