இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஜீ 20 மாநாட்டில் துருக்கிய ஜனாதிபதி தைய்யிப் அர்துகானை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் அமெரிக்காவில் வசித்துவரும் முஸ்லிம் மதத் தலைவரை நாடு கடத்துவதாக எவ்வித வாக்குறுதியும் அளிக்கவில்லை என சிரேஷ்ட வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கடந்த திங்கட்கிழமை தெரிவித்தார்.
ஜீ 20 மாநாட்டில் ஜனாதிபதி அர்துகானை சந்தித்த ட்ரம்ப் பெதுல்லாஹ் குலெனை நாடு கடத்துவது தொடர்பில் எவ்வித வாக்குறுதியும் அளிக்கவில்லை என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்தார்.
குலென் நாடுகடத்தப்பட வேண்டும் என துருக்கி நீண்ட காலமாக கோரி வருகின்றது. குலெனையும் மற்றும் ஏனையோரையும் நாடுகடத்துவது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஆர்ஜென்டீனாவில் நடைபெற்ற ஜீ 20 மாநாட்டில் ஜனாதிபதி தைய்யிப் அர்துகானிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் தெரிவித்ததாக துருக்கிய வெளிநாட்டமைச்சர் மெவ்லட் கவுசொலுகு கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.
ஸ்தான்பூலில் வைத்து கொலை செய்யப்பட்ட சவூதி அரேபிய ஊடகவியலாளரான ஜமால் கஷோக்ஜியின் விவகாரம் தொடர்பில் சவூதி அரேபியா மீதான துருக்கியின் அழுத்தங்களைத் தணிப்பதற்கு மதத் தலைவரான பெதுல்லாஹ் குலெனை நாடு கடத்துவது தொடர்பில் சிந்திக்கவில்லை என கடந்த மாதம் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
குலென் ஆதரவாளர்களுக்கு நிதியளிப்போரை இலக்கு வைத்து வெளிநாடுகளில் புதிய முன்னெடுப்புக்களை மேற்கொள்ளப்போவதாக கடந்த வாரம் அர்துகான் அறிவித்திருந்தார். அர்துகானின் நெருக்கமான நண்பராக இருந்து பின்னர் எதிரியாக மாறிய எதிர்க்கட்சி மதகுருவான பெதுல்லாஹ் குலென் 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அங்காரா அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தோல்வியில் முடிவடைந்த சதிப்புரட்சியின் சூத்திரதாரியாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
சுமார் 300 பேரின் உயிர்களைக் காவு கொண்ட 2016 ஜுலை 15ஆம் திகதி சதிப்புரட்சிக்கு குலெனே காரணமாக இருந்ததாக குற்றம் சுமத்தப்படும் அதேவேளை பென்சில்வேனியாவில் வசித்துவரும் நிலையில் அவரது குழுக்கள் நாட்டின் ஆட்சியை சீர்குலைப்பதற்கு நீண்ட கால அடிப்படையில் துருக்கிய நிறுவனங்கள் குறிப்பாக இராணுவம்,பொலிஸ் மற்றும் நீதித்துறையினுள் ஊடுருவுவதற்கு முயற்சித்து வருவதாகவும் துருக்கி குற்றம் சுமத்தியுள்ளது.
குலெனுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும் சதிப்புரட்சியோடு தொடர்பு பட்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும் துருக்கியில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இராணுவ அதிகாரிகள், அரசாங்க உத்தியோத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 110,000 இற்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
-Vidivelli