புத்தளம் மாவட்ட எம்.பி. அலி சப்ரி ரஹீம் தங்கம் கடத்திய விவகாரம்: அரசியல் கட்சிகளின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப எம்மால் செயற்பட முடியாது
இதில் தலையிட மாட்டோம் என்கிறார் அப்துல்லாஹ் ஆலிம்
(எஸ்.என்.எம்.சுஹைல்)
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் விவகாரத்தில் எம்மால் அரசியல் கட்சிகளின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ற வகையில் ஒருபோதும் செயற்பட முடியாது என புத்தளம் பெரிய பள்ளிவாசலின் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் தெரிவித்தார்.
அத்தோடு, இந்த விடயத்தில் நாங்கள் எந்தவகையிலும் தலையிட மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் புத்தளம் சிவில் சமூக நிறுவனங்களின் ஒன்றிய (பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020) த்தின் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிமுக்கு ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் (தராசு சின்னம் கட்சி) செயலாளர் மஸீஹுதீன் நயீமுல்லாஹ் கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார். குறித்த கடிதத்திற்கு இதுவரை பதில்கிடைக்காத நிலையில், இதுகுறித்து அப்துல்லாஹ் ஆலிமிடம் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புத்தளத்திற்கு பாராளுமன்ற பிரதிநிதியொருவரை வென்றெடுக்க வேண்டும் என்கிற வேட்கை எமக்கு இருந்தது. இதனடிப்படையில் இம்மாவட்டத்திலுள்ளவர்கள் தன்னார்வமாகவே இந்த முயற்சியில் ஈடுபட்டு ஒற்றுமைப்பட்டு செயற்பட்டனர். எம்.பி. பதவியொன்றை வென்றெடுக்கும் தேவை அரசியல் கட்சிகளுக்கும் இருந்தது. அந்த அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்டோர்களுடன் இன்னும் பல பிரதிநிதிகளும் இணைந்து ஒன்றாக போட்டியிட முன்வந்தனர்.
அதற்கமைய அனைவருமாக இணைந்து தராசு சின்னத்தில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு (தற்போது ஐக்கிய தேசிய கூட்டமைப்பு என பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஊடாக தேர்தலில் போட்டியிட்டனர். இதன்போது, அரசியல் கட்சிகளுக்கிடையேதான் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. அவர்களின் தேவைகளுக்கு ஏற்பவே இவற்றை செய்துகொண்டனர்.
தற்போது பிரச்சினையொன்று வந்துவிட்டது. எனவே, அவர்கள் தப்பித்துக்கொள்வதற்கு எம்மை சாடுகின்றனர். அவர்கள் நழுவிக்கொள்வதற்காகவே இவ்வாறு செய்கின்றனர். புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பான சர்ச்சையில் நாம் தலையிடப்போவதில்லை. அவர்களின் பிழைகளை மறைத்துக்கொள்வதற்கும் விடயத்தை திசை திருப்புவதற்குமே இந்த செயற்பாடுகளில் இறங்கியிருக்கின்றனர் என்றார்.- Vidivelli