ஐ.சி.சி.பி.ஆர். சட்டம் ஞானசார தேரருக்கு எதிராக ஏன் அமுல்படுத்தப்படவில்லை
ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் முஸ்லிம் கவுன்ஸில் கேள்வி
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
போதகர் ஜெரோம், நகைச்சுவை நடிகை நட்டாஷா எதிரிசூரிய மற்றும் யுடியூப் பதிவர் புருனோ திவாகர ஆகியோர் பெளத்த சமயத்தின் மீது வெறுப்பினைத் தூண்டும் வகையில் செயற்பட்டார்கள் என்பதற்காக ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்.
அதேவேளை எந்தவொரு சமயத்தையும் அவமதிப்பதை மன்னிக்க முடியாது. இஸ்லாத்தையும் எங்கள் அல்லாஹ்வையும் அவமதித்த ஞானசார தேரருக்கோ அல்லது முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு எதிராகவோ ஐசிசிபி ஆர் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. இந்நாட்டின் சட்ட ஆட்சிக்கு என்ன நடந்துள்ளது. ஐசிசிபிஆர் சட்டம் அமுல்படுத்தப்படுவதில் ஏன் இந்த வேறுபாடு? பாகுபாடு? என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வியெழும்பியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட அளுத்கம வன் செயல்களின் 9 வருட நிறைவினை நினைவுகூர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் பதில் தலைவர் ஹில்மி அஹமட் அனுப்பிவைத்துள்ள குறிப்பிட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
2014 ஜூன் மாதம் அளுத்கமையில் முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு 9 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. ஞானசார தேரரின் வெறுப்புப் பேச்சினால் இந்தக்கலவரம் ஏற்பட்டது. 2014 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி களுத்துறையில் ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு உரையை நிகழ்த்தினார். இவரது உரையினால் தூண்டப்பட்டு அளுத்கமயில் உருவான வன்செயல்களினால் 4 உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. முஸ்லிம்களின் பொருளாதாரம் சிதைக்கப்பட்டது.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களினால் அளுத்கம மற்றும் பேருவளையில் மத தலங்களின் சொத்துக்களும், முஸ்லிம்களின் சொத்துக்களும் சிங்கள பெளத்த கலகக்கார கும்பல்களால் அழிக்கப்பட்டன. அளுத்கம, பேருவளை, தர்கா டவுண் ஆகிய நகரங்களில் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
பொதுபல சேனாவின் பேரணியைத் தொடர்ந்து வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது. வன்செயல்களை தூண்டியதாக பொதுபல சேனா அமைப்பின்மீதே குற்றம் சுமத்தப்பட்டது. அரசாங்கத்தின் உத்தரவினையடுத்து பிரதான ஊடகங்கள் வன்செயல்கள் தொடர்பான செய்தியை தணிக்கை செய்தது.
2014 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி பெளத்த குரு அயகம சமித்த மற்றும் அவரது சாரதி தர்கா நகரில் முஸ்லிம்களால் தாக்குதலுக்கு உள்ளானதாக செய்தி பரப்பப்பட்டது. பெளத்த குரு சமித்த தேரரின் பன்சலையிலிருந்து வன்செயல் குழுவொன்று குருவுடன் இணைந்து அளுத்கம பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்டு பெளத்த குரு தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து 2014 ஜூன் 15 ஆம் திகதி பொதுபல சேனா களுத்துறையில் பொதுக்கூட்டமொன்றினை நடாத்தியது. இக்கூட்டமே வன்செயல்களுக்கு காரணமாய் அமைந்தது.
குறிப்பிட்ட பெளத்த குருமீது தாக்குதல் நடாத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் குற்றவாளிகளல்ல எனவும் அவர்கள் மீதான குற்றச் சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும் நிரூபணமானது.
அளுத்கம வன்செயல்கள் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையினை நடாத்தி இதனுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி நீதியை நிலைநாட்டுங்கள் எனக்கோரப்பட்டுள்ளது.- Vidivelli