எம்.எல்.எம். மன்சூர்
தேசியவாதத்தையும், இனவாதத்தையும் பரப்பும் ஒரு கருவியாக வரலாற்றையும், தொல்லியலையும் பயன்படுத்திக் கொள்வது இலங்கை அரசுகள் வழமையாக பின்பற்றி வந்திருக்கும் ஒரு நடைமுறை. சிங்கள – பௌத்தம் முன்வைத்து வரும் அந்த பெரும் கதையாடலுக்கு (Grand Narrative) எவரேனும் சவால் விடுக்கும் பொழுது எல்லோரும் பதற்றமடைகிறார்கள். அவ்வாறு சவால் விடுக்கும் நபரை தேசத் துரோகியாக முத்திரை குத்துகிறார்கள்.
இப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவின் முறை வந்திருக்கிறது.
இதற்கு முன்னர் 1987 இல் ஜே ஆர் ஜெயவர்தனவும், 2000 மற்றும் 2005 ஆகிய வருடங்களில் சந்திரிகா குமாரதுங்கவும் சிங்கள இனவாதிகளிடமிருந்தும், தேசியவாதிகளிடமிருந்தும் இதே மாதிரியான ஓர் அச்சுறுத்தலை எதிர்கொண்டார்கள். ஜே ஆர் அந்த எதிர்ப்பை வெற்றிகரமாக சமாளித்து, நாட்டில் இரத்த ஆறு ஓடிய நிலையில் (ஊரடங்குச் சட்டத்தை அமுல் செய்து) மாகாண சபைகளின் உருவாக்கத்துக்கு வழிகோலிய இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் 1987 இல் கைச்சாத்திட்டார். ஆனால், 2000 இல் புதிய அரசியல் யாப்பொன்றுக்கான நகல் வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்திலும், 2005 இல் `PTOMS’ என்ற சுனாமி நிவாரண பொதுக் கட்டமைப்பு மசோதா சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் இனவாத சக்திகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அவற்றை விலக்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் சந்திரிகாவுக்கு ஏற்பட்டது.
மக்களின் உணர்வுகளைத் தூண்டக் கூடிய ஒரு (Sensitive) பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதிக்கும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், உயர் மட்ட அரச அதிகாரிகளுக்குமிடையில் ஒரு கலந்துரையாடல் இடம்பெறுகிறது. இப்படியான ஒரு கலந்துரையாடலில் பேசப்படும் எல்லா விடயங்களையும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. அது வழமையும் அல்ல. அக்கலந்துரையாடலின் பின்னர் அது தொடர்பாக சுருக்கமான ஓர் ஊடக அறிக்கையை வெளியிட்டால் போதும். ஆனால், ஜனாதிபதி ஊடகப் பிரிவு அவ்வாறு செய்வதற்குப் பதிலாக, அச்சந்திப்பில் பேசப்பட்ட அனைத்து விடயங்களையும் பகிரங்கப்படுத்தும் விதத்தில் சம்பந்தப்பட்ட காணொளிகளை ஊடகங்களுக்கு வழங்கியிருந்தது.
அச்சந்தர்ப்பத்தில் குருந்தூர் மலை மற்றும் திரியாய தொல்லியல் அமைவிடங்கள் தொடர்பாக ஜனாதிபதி ஒரு சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். இது இலங்கையில் ‘Voice Cut‘ கள் வழங்குவதை ஒரு சந்தோஷமான பொழுதுபோக்காக மேற்கொண்டு வரும் ஆட்களுக்கு மீண்டுமொரு முறை ஒரு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழர் தரப்பில் சாணக்கியன் என்றால் சிங்களவர் தரப்பில் கம்மன்பில. ஒருவர் மாறி ஒருவர் தத்தமது ஆதரவாளர்களை குஷிப்படுத்தும் விதத்தில் பேசுவார்கள். இறுதியில், இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொள்ளும் சமூகங்களுக்கு இந்த வாய்ச் சவடால்களால் எந்தப் பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை.
‘எதிரிக்கு சவால் விடுக்கும்‘, ‘எதிரியின் வேட்டியை உருவும்‘ (`Entertainment Value’ வை மட்டும் கொண்டிருக்கும்) இந்த மாதிரியான ‘Voice Cut‘ களை பகிர்ந்து, சுய இன்பம் அனுபவிப்பதற்கென்றே ஏராளமான WhatsApp குழுமங்கள் முளைத்திருக்கின்றன.
இந்தப் பின்னணியில், கோட்டாபய ராஜபக்சவின் சிங்கள பௌத்த செயல்திட்டத்தின் தீவிர ஆதரவாளர்களான மெதகொட அபயதிஸ்ஸ தேரரையும் உள்ளிட்ட பல முன்னணி தேரர்கள் ஊடக மாநாடுகளை நடத்தி, ஆவேசமான தொனியில் ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்து வரும் காட்சிகளை நாங்கள் பார்க்கிறோம்.
சிங்கள பொதுசன அபிப்பிராயத்தை வடிவமைப்பதில் மிக முக்கியமான ஒரு வகிபாகத்தை வகித்து வரும் முன்னணி தேரர்கள் பலரும் இது தொடர்பாக தெரிவித்திருக்கும் கண்டனங்களின் சாராம்சம் இது தான்:
”ஜனாதிபதி சிங்கள மக்களின் தொல்லியல் பாரம்பரியம் மற்றும் மரபுரிமைகள் என்பவற்றுடன் விளையாடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறில்லாது, அவர் தொடர்ந்தும் அத்தகைய ஒரு நிலைப்பாட்டை முன்னெடுத்து வந்தால் நாங்கள் அவருடைய அரசியல் வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைப்போம்.”
SJB மற்றும் JVP போன்ற பிரதான எதிர்க்கட்சிகள் இந்த சர்ச்சை தொடர்பாக ‘அரச அதிகாரிகளை பகிரங்கமாக மிரட்டுவதற்கு ஜனாதிபதிக்கு இடமளிக்க முடியாது‘ என்ற விதத்தில் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. இங்குள்ள அடிப்படை பிரச்சினை (Core Issue) குறித்து கருத்துத் தெரிவிப்பதைத் தவிர்த்து, அக்கட்சிகள் நழுவிச் செல்வதை பார்க்க முடிகிறது.
‘மற்றொரு இனத்தை, மதத்தை ஒடுக்குவதற்கு இலங்கையில் நாங்கள் தொல்லியலை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகின்றோமா?‘ என டி வி நிகழ்ச்சியொன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு களனிப் பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ இப்படி பதிலளிக்கிறார்:
”இலங்கையில் அரசியல்வாதிகள் தமது அரசியல் செயற்பாட்டில் வரலாற்றை ஒரு மூலதனமாக முதலீடு செய்கிறார்கள்…. அரசியலில் வெற்றியீட்ட வேண்டுமானால் பெரும்பான்மை மக்கள் செவிமடுக்க விரும்பும், கவர்ச்சிகரமான ஒரு தலைப்பைக் கையிலெடுக்க வேண்டும்….
….பெரும்பான்மை சமூகத்தின் தனிச் சிறப்பு மற்றும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் என்பன குறித்துப் பேச வேண்டும்…. அவற்றைப் பேசுவதற்கு கணிதத்தையோ அல்லது விஞ்ஞானத்தையோ பயன்படுத்திக் கொள்ள முடியாது; குடியியல் மூலமும் அத்தகைய ஒரு கருத்தை வலியுறுத்த முடியாது.
….(ஏனையவர்கள் உரிமை கோர முடியாத) நமது வரலாற்று பெருமிதம் மற்றும் தனித்துவமான மரபுரிமைகள் என்பன குறித்துப் பேசுவது தான் அதற்குள்ள ஒரே ஒரு வழி….”
பேராசிரியர் சோமதேவ சுட்டிக் காட்டும் இந்த வரலாற்று பெருமிதத்தின் மற்றொரு வெளிப்பாடு தான் வாகனங்களின் பின் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சில ஸ்டிக்கர்களில் காணப்படும் ‘இது இந்த இரத்தம்‘, ‘இது இன்னாரின் தேசம்‘ போன்ற வாசகங்கள். எவரும் தமது இனம் மற்றும் மதம் குறித்து பெருமிதமடையலாம். அதில் தவறில்லை. ஆனால், இந்த வாசகங்களில் மறைந்திருக்கும் உளவியல் வன்முறை ஆபத்தானது – ‘மற்றவர்கள்‘ அனைவரையும் அந்நியர்களாகப் பார்க்கும் மனப்பான்மை; ‘நீங்கள் எங்களில் ஒருவர் அல்ல‘ என்ற விதத்தில் அவர்களுக்கு விடுக்கப்படும் செய்தி.
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கட்டமைப்பு மாற்றம் (System Change) உண்மையில் இலங்கையில் இடம்பெற வேண்டுமானால், அதற்கான ஒரு முன்நிபந்தனை என்ற முறையில் முதலில் இந்த மனப்பாங்கு (Mindset) மாற்றமடைய வேண்டும். – Vidivelli