ஹஜ் ஏற்­பா­டு­க­ளை­ ஒ­ழுங்­கு­ப­டுத்­து­வது அவ­சியம்

0 347

வழக்கம் போலவே இவ்­வ­ரு­டமும் ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் குள­று­ப­டிகள் இடம்­பெற்­றுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது. ஹஜ் கோட்டா பகிர்வு, பேசா விசாக்­களை பங்­கிட்­டமை, ஹஜ் நிதி­யத்தின் நிதியை பயன்­ப­டுத்­திய விதம் மற்றும் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு தர­மற்ற தடுப்­பூசி ஏற்­றப்­பட்­டமை என இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டுகள் விமர்­ச­னத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளன.

ஹஜ் விவ­கா­ரங்­களைக் கையாள்­வ­தற்­கான பொறுப்பு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்­கு­ரி­ய­தாகும். இதற்கு மேல­தி­க­மாக அரச ஹஜ் குழு ஒன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­விரு தரப்­பி­னரும் இணைந்து ஹஜ் விவ­கா­ரங்­களை வினைத்­தி­ற­னான முறையில் கையாள வேண்டும் என்­பதே அனை­வ­ரதும் எதிர்­பார்ப்­பாகும். துர­திஷ்­ட­வ­ச­மாக முஸ்லிம் சமூ­கத்­தினுள் நிலவும் அர­சியல் மற்றும் நிர்­வாக பல­வீ­னங்கள் கார­ண­மாக கடந்த பல வரு­டங்­க­ளாக ஹஜ் ஏற்­பா­டுகள் சர்ச்­சை­க­ளையே தோற்­று­வித்து வரு­கின்­றன.

வருடா வருடம் ஹஜ் குழு­வுக்கு எதி­ராக முக­வர்­களால் வழக்­குகள் தாக்கல் செய்­யப்­ப­டு­கின்­றன. இம்­மு­றையும் நான்கு முக­வர்கள் இணைந்து உயர் நீதி­மன்­றத்தில் அடிப்­படை உரிமை மீறல் வழக்கைத் தாக்கல் செய்­துள்­ளனர். இதற்­கப்பால் ஹஜ் நிதி­யத்தில் இருக்கும் பெருந்­தொகைப் பணம் என்ன நோக்­கங்­க­ளுக்­காக செலவு செய்­யப்­ப­டு­கின்­றது என்­பதில் வெளிப்­ப­டைத்­தன்­மையைக் காண­வில்லை. ஆயிரக் கணக்­கான ஏழை­களும் மார்க்கப் பணி செய்­வோரும் ஹஜ் யாத்­தி­ரைக்குச் செல்­வ­தற்கு வச­தி­யற்­றி­ருக்க, வசதி படைத்த ஹஜ் குழுவின் உறுப்­பி­னர்­களும் அதி­கா­ரி­களும் ஹஜ் யாத்­தி­ரைக்குச் செல்­வ­தற்கு இந்தப் பணத்தை செல­வி­டு­வது எந்த வகையில் நியா­ய­மா­னது என்ற கேள்­வியும் பல­ராலும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் நேற்­றைய தினம் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப், ஹஜ் விவ­கா­ரங்­களை ஒழுங்­க­மைப்­ப­தற்­கான பொறி­முறை ஒன்றின் அவ­சி­யத்தைச் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

அது மாத்­தி­ர­மன்றி சவூதி அரே­பி­யா­வுக்கு ஹஜ் யாத்­தி­ரைக்­காக வருகை தரும் அனை­வரும் Meningococcal எனப்­படும் துடுப்­பூ­சியை ஏற்ற வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இந்த தடுப்பூசியா­னது 2 முதல் 8 பாகை செல்­சியஸ் எனும் வெப்ப நிலையில் வைத்து பாது­காக்­கப்­பட வேண்­டி­ய­தாகும். துர­திஷ்­ட­வ­ச­மாக இந்த தடுப்­பூ­சி­யா­னது இலங்­கையில் கிடைக்கப் பெறு­வ­தில்லை எனவும் தேசிய மருந்­துகள் ஒழுங்­கு­ப­டுத்தல் அதி­கார சபையின் கீழ் பதிவு செய்­யப்­பட்ட எந்­த­வொரு நிறு­வ­னமும் இந்த தடுப்­பூ­சியை இறக்­கு­மதி செய்­வ­தில்லை எனவும் தெரி­ய­வந்­துள்­ளது. மாறாக, சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கொண்டு வரப்­பட்டு, உரிய வெப்ப நிலையில் பொருத்­த­மான குளி­ரூட்­டி­களில் வைத்துப் பரா­ம­ரிக்­கப்­ப­டாத தடுப்­பூ­சி­களை இலங்­கை­யி­லி­ருந்து பய­ணிக்கும் சுமார் 3500க்கும் மேற்­பட்ட யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய ஊட­கங்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

உலகின் பல நாடு­க­ளி­லி­ருந்தும் சுமார் 25 இலட்­சத்­துக்கும் அதி­க­மான முஸ்­லிம்கள் இம்­முறை ஹஜ் யாத்­தி­ரைக்­காக சவூதி அரே­பி­யாவில் ஒன்­று­கூ­ட­வுள்­ளனர். இந்­நி­லையில் இவர்கள் மத்­தியில் எந்­த­வி­த­மான தொற்று நோய்­களும் பர­வி­விடக் கூடாது என்­பதில் சவூதி அரே­பிய சுகா­தா­ரத்­துறை உறு­தி­யா­க­வுள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் உலக நாடுகள் அனைத்­தி­லி­ருந்தும் வருகை தரும் யாத்­தி­ரி­கர்கள் சவூ­தியின் சுகா­தார வழி­காட்­டல்­களைக் கண்­டிப்­பாக பின்­பற்ற வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எனினும் இலங்­கையில் இவ்­வாறு உரிய தடுப்­பூ­சிகள் ஏற்­றப்­ப­டு­வ­தில்லை என எழுந்­துள்ள குற்­றச்­சாட்­டா­னது பார­தூ­ர­மா­ன­தாகும். இது எதிர்­கா­லத்தில் வேறு விளை­வு­களைத் தோற்­று­விக்­கலாம். என­வேதான், ஹஜ் குழு, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் இத­னுடன் தொடர்­பு­பட்ட தரப்­புகள் வரு­டாந்தம் ஹஜ் யாத்­தி­ரைக்கு முன்­ப­தாக இந்த தடுப்­பூ­சியை உரிய அனு­ம­திக்­கப்­பட்ட நிறு­வ­னங்கள் மூல­மாக இறக்­கு­மதி செய்து யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு வழங்க ஏற்­பாடு செய்ய வேண்டும் என வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம்.

அது மாத்­தி­ர­மன்றி, சில ஹஜ் முக­வர்­களும் பல்­வேறு குள­று­ப­டி­க­ளிலும் மோச­டி­க­ளிலும் ஈடு­ப­டு­கின்­றன. கடந்த காலங்­களில் இவர்கள் மீது பல குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. எனினும் முக­வர்­களின் மோச­டி­களை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­கான ஏற்­பா­டு­களும் இது­வரை போதி­ய­ளவில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

என­வேதான் ஹஜ் யாத்­தி­ரைக்­கான ஏற்­பா­டு­களை ஒழுங்­கு­ப­டுத்தும் வகையில் சட்ட ரீதி­யான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். வெறு­மனே அர­சி­யல்­வா­தி­களின் சிபா­ரி­சு­களின் பேரில் ஹஜ் குழுவின் உறுப்­பி­னர்­களை நிய­மிக்­காது, தகு­தி­வாய்ந்த அரச அதி­கா­ரி­களைக் கொண்ட ஹஜ் ஒழுங்­கு­ப­டுத்தல் நிறு­வனம் ஒன்று ஸ்தாபிக்­கப்­பட வேண்டும். இந்­நி­று­வனம் அர­சி­யல்­வா­தி­க­ளி­னதோ அல்­லது சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­ரி­னதோ தலை­யீ­டுகள் இன்றி சுதந்­தி­ர­மாக செயற்­பட வேண்டும். முழுக்க முழுக்க யாத்­தி­ரி­கர்­களின் நலன்­களே முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­பட வேண்டும். குறிப்­பாக தற்­போது 20 இலட்சம் ரூபா வரை உயர்ந்­துள்ள ஹஜ் யாத்திரைக்காக செலவு கணிசமானளவு குறைக்கப்பட வேண்டும். இவற்றை நோக்காகக் கொண்டு குறித்த பொறிமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும். இதற்கான அழுத்தங்களை சம்பந்தப்பட்டவர்கள் வழங்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.