அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)
பீடாதிபதி, இஸ்லாமிய கற்கைகள் பீடம்,
ஜாமிஆ நளீமிய்யா.
பேருவலையில் 19.08.1973 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட ஜாமிஆ நளீமிய்யா இவ்வருடம் அதன் பொன்விழாவைக் கொண்டாடுகிறது. இந்தக் கலாநிலையம் நாடறிந்த கொடை வள்ளல் அல்ஹாஜ் எம்.ஐ.எம்.நளீம் அவர்களது சிந்தனையில் கருவுற்று அக்காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் இருந்த மிக முக்கியமான புத்திஜீவிகளதும் சமூக ஆர்வலர்களதும் ஆலோசனைகள், வழிகாட்டுதல்களின் அடியாக உருப்பெற்றது.
நளீமிய்யாவின் கல்விசார் இலக்குகள், கல்வித் திட்டம், பாடப்பரப்பு என்பன சிறந்த கல்விப் புலமும், அறிவார்ந்த அணுகுமுறையும், பரந்த நோக்கும், ஆன்மீக–பண்பாட்டுப் பயிற்சியும் கொண்ட அறிஞர் பரம்பரையொன்றை உருவாக்கும் நோக்கைக் கொண்டவையாகும். நளீமிய்யாவில் கற்றவர்கள் அரபு, ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழியறிவைக் கொண்டிருப்பதுடன் பாரம்பரிய இஸ்லாமிய கலாஞானங்களோடு நவீன சிந்தனைப் போக்குகளையும் இந்த நாட்டின் பொதுக் கலைத் திட்டத்தையும் கற்றிருக்கின்றனர். இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் தம்மாலான எல்லா முயற்சிகளை தாம் வகிக்கும் அரச மற்றும் தனியார் பதவிகள் ஊடாக அவர்கள் செய்து வருகிறார்கள்.
கற்கைநெறியின் இரு கட்டங்கள்
நளீமிய்யாவின் கற்கை நெறி ஏழு வருடங்களைக் கொண்டதாகும்.
முதல் மூன்று வருடங்களைக் கொண்ட அடிப்படை கற்கைகள் பிரிவில் அறபுமொழி, அரபு இலக்கணம், தர்பியா,ஃபிக்ஹுஸ் ஸுலூக், தஜ்வீத் சட்டங்கள், குர்ஆன் மனனம்,தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுடன் க.பொ.த. உயர்தர (கலைப்) பிரிவுக்கான பாடங்களும் கற்பிக்கப்பட்டு உயர் தரப் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றுகின்றனர்.
இஸ்லாமியக் கற்கைகள் பீடம் நான்கு வருடங்களைக் கொண்டது. இப்பிரிவில் மாணவர்களுக்கு குர்ஆன், ஸுன்னா விளக்கங்களும் அவற்றோடு தொடர்பான கலைகளும், இபாதாத், குடும்பம், வியாபாரம், நீதித் துறை, பாகப் பிரிவினை என்பவற்றோடு தொடர்பான இஸ்லாமிய சட்டங்களும் (ஃபிக்ஹ்), அகீதா, முஸ்லிம்கள் இலங்கையில் சிறுபான்மையினராக வாழ்வதால் இலங்கையின் பன்மத ,பல்லின கலாசாரச் சூழமைவை கவனத்திற் கொண்டு சமாதான கற்கைகள், இஸ்லாமிய வங்கியியல், சிறுபான்மையினருக்கான வாழ்வொழுங்கு, பிரதான மதங்கள், அவற்றின் ஒப்பீட்டாய்வு போன்ற பாடங்களும் தர்க்கவியல், சமூகவியல், இஸ்லாமிய உலகின் சிந்தனைப் பாங்குகள், தஸவ்வுப், இல்முல் கலாம், தத்துவம், ஸீரா, இஸ்லாமிய வரலாறு என்பனவும், தகவல் தொழில்நுட்பத்தோடு தொடர்பான பாடங்களும் ஆங்கிலம், அறபு, சிங்களம் போன்ற மொழிகளும் போதிக்கப்படுகின்றன. ஆய்வாளர்களுக்கு அவசியமான மென்திறன் (Soft skills)பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இலங்கையின் அரச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகமொன்றின் பட்டப் படிப்பை வெளிவாரியாக மேற்கொள்வதற்கு மாணவர்கள் இக்காலப்பிரிவில் தயார்படுத்தப்படுவதோடு இதற்கான ஊக்குவிப்பும் வழிகாட்டல்களும் வழங்கப்படுகின்றன. இதனால், நளீமிய்யாவின் பட்டதாரிகளாக வெளியேறுபவர்கள் ஏக காலத்தில் அதன் உள்ளகக் கற்கை நெறியையும், வெளிவாரிப் பட்டப் படிப்பையும் பூர்த்தி செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
மாணவர்களது எழுத்து, பேச்சாற்றல், மென் திறன்கள், மொழி, விளையாட்டுத் திறன்கள் போன்றவற்றை விருத்தி செய்யும் நோக்குடன் ஜாமிஆவின் ‘வெளிக்களப் பிரிவு’ இயங்கி வருகிறது. ‘றாபிதா கலமிய்யா’ என்ற பெயரில் வாராவாரம் இயங்கும் சுவரொட்டிப் பத்திரிகை மூலம் மாணவர்கள் தமது எழுத்தாற்றல்களை வளர்க்கின்றனர். அத்துடன் காலம் வேண்டி நிற்கும் பல கருப்பொருள்களில் விஷேட கருத்தரங்குகளும் பயிற்சிப் பட்டறைகளும் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
முக்கிய பிரிவுகள்
ஜாமிஆவின் நூலகம் ஆங்கிலம், தமிழ், சிங்களம், அரபு ஆகிய மொழிகளில் சுமார் 50,000 நூல்களையும், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆய்வறிக்கைகள் என்பவற்றையும் கொண்டிருக்கிறது. அது விரிவுரையாளர்களதும் மாணவர்களதும் அறிவையும், ஆராய்ச்சித் திறன்களையும் வளர்ப்பதற்காக பெரிதும் துணையாக அமைந்துள்ளது. நவீன பாணியிலான உத்திகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு மொழியை திறம்பட கற்பிப்பதற்காக அறபு மொழி ஆய்வு கூடத்தை (Language Lab) உள்ளடக்கிய அறபு மொழி நிறுவனமும் உள்ளது. மாணவர்களது கணினி மற்றும் தொழில்நுட்பத் துறையிலான அறிவுகளை விருத்தி செய்வதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயற்பட்டு வருகிறது.
அபிவிருத்தி, ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கும் பயிற்சிக்குமான நிறுவனம் (ADRT) சமூகத்தின் பல துறை சார்ந்தவர்களை பயிற்றுவிப்பதற்காக இயங்கும் அதே வேளை, நளீமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகம் இதுவரையில் ஆய்வு சஞ்சிகையான ‘இஸ்லாமிய சிந்தனை’ யின் 156 இதழ்களையும் பல நூல்களையும் வெளியிட்டுள்ளது.
இஸ்லாத்தின் சமாதானத் தூதை எமது நாட்டுக்கு சிறந்த முறையில் எடுத்துக்கூறுவதுடன் இலங்கை முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தையும் சமாதான சகவாழ்வையும் கட்டி எழுப்பும் நோக்கோடு அண்மையில் Salam Center உருவாக்கப்பட்டது.
நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் மீள்நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை இலக்காக கொண்டு இலங்கை அரசாங்கத்தால் தெரிவு செய்யப்பட்ட 7 பல்கலைக்கழகங்களில் ஜாமிஆவும் ஒன்றாகும். அந்த வகையில், தேசிய ஐக்கியத்துக்கும் மீள்நல்லிணக்கத்துக்குமான முன்மாதிரி பீடம் (Model Faculty National Unity and Reconciliation) 2018 இல் ஆரம்பிக்கப்பட்டது.
உட்கட்டமைப்பு
ஜாமிஆ சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளையும் மாணவர்களது உடல், உள ஆரோக்கியத்தை கருதிக் கொண்ட ஏற்பாடுகளையும் ரம்யமான, கவர்ச்சியான, பசுமையான, அமைதியான, சந்தடிகளற்ற சூழலையும் கொண்டிருக்கிறது. வளாகத்தின் கட்டடங்கள் இஸ்லாமிய கட்டடக்கலைப் பாரம்பரியத்தை பறைசாற்றி நிற்கின்றன. மொத்தத்தில் வளாகம் அறிவுச்சூழலுக்கென்றே மிகவும் திட்டமிடப்பட்டு அழகிய முறையில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சர்வதேச அங்கீகாரம்
ஜாமிஆ வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், மனிதவள விருத்திக்காக இயங்கும் பல அமைப்புகளோடு நீண்ட காலமாக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தனிப்பட்ட ரீதியிலும் பல முக்கியஸ்தர்களும் கல்விமான்களும் அவ்வப்போது ஜாமிஆவுக்கு வருகை தந்திருக்கிறார்கள்.
ஜாமிஆவின் பட்டச் சான்றிதழ் சர்வதேச பல்கலைக்கழகங்கள் பலவற்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய உலகின் பல்கலைக்கழகங்களது ஒன்றியத்தில்(FUIW) ஜாமிஆ அங்கத்துவம் வகிப்பதுடன் சில சர்வதேச பல்கலைக்கழகங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. அந்த வகையில் சர்வதேச தொடர்புகளை ஜாமிஆ பெற்றிருப்பதானது அதன் சர்வதேச தரத்திற்கான முக்கிய சான்றாகும்.
சாதனைகள்
கடந்த 50 வருட காலத்தில் மகத்தான வளர்ச்சியைக் கண்டு இலங்கை முஸ்லிம்களின் ஓர் உயர் பல்கலைக்கழகம் என கருதப்படுமளவுக்கு சிறப்புற்று விளங்கும் நளீமிய்யா அதன் அரை நூற்றாண்டு வரலாற்றில் கணிசமான அளவு சாதனைகளை ஈட்டியிருக்கிறது. இஸ்லாமிய ஆய்வுத் துறையிலும் கற்றல், கற்பித்தல் துறையிலும் இஸ்லாத்தை முன்வைக்கும் பணியிலும் முஸ்லிம் சமூகத்திற்கு அறிவுத் தலைமைத்துவத்தை வழங்குவதிலும் நளீமிய்யா பட்டதாரிகள் முன்னணி வகிக்கிறார்கள்.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நளீமிய்யாவின் கற்கைநெறியை முழுமையாகப் பூரணப்படுத்தியுள்ளனர். மலேசியா, பாகிஸ்தான், எகிப்து, துருக்கி, யெமன், ஸஊதி அரேபியா, சூடான், இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட வேறு பல நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் தமது உயர்கல்வியை தொடர்ந்தவர்களில் கணிசமான தொகையினர் கலாநிதி பட்டங்களை பெற்றிருப்பதுடன் இன்னும் பலர் அதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். M.Phil. M.A. Bachelor Degree, Diploma சான்றிதழ்களையும் பலர் பெற்றுள்ளார்கள். மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகம், இஸ்லாமிய கலைகளுக்கான பல்கலைக்கழகம், சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம், பாகிஸ்தானின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம், தாய்லாந்து இளவரசர் சோங்க்லா பல்கலைக்கழகத்தின் பட்டாணி வளாகம், புரூனை தாருஸ் ஸலாம் பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் மார்க் ஃபீல்ட் கலாநிலையம் போன்ற தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் துறைத் தலைவர்களாக, விரிவுரையாளர்களாக ஆய்வாளர்களாக பல நளீமீக்கள் பணியாற்றியுள்ளனர்; தற்போதும் பலர் பணியாற்றி வருகின்றனர். மேலும் சிலர் பேராசிரியர்களாகவும் உள்ளனர்.
நளீமிய்யா பட்டதாரிகளுள் பலர் SLEAS (இலங்கை கல்வி நிர்வாக சேவைப்) பரீட்சையில் சித்தியடைந்து கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர் போன்ற பதவிகளை வகிக்கின்றனர். தேசிய கல்வி நிறுவனத்தில் பாடசாலைப் பாடங்களுக்கான கலைத்திட்டத்தை உருவாக்குதல், அதற்கான பாடப் புத்தகங்களை எழுதுதல், ஆசிரியர் கைநூல்களைத் தயாரித்தல், ஆசிரியர் பயிற்சிகளை வழங்குதல் என பலதரப்பட்ட வேலைத்திட்டங்களுடன் தம்மை இறுக்கமாக சம்பந்தப்படுதியுள்ளார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் பாடசாலைகளில் அதிபர்களாக, பிரதி அதிபர்களாக, பகுதிப் பொறுப்பாளர்கள் சேவையாற்றுகின்றனர்.
இலங்கையின் நிருவாக சேவைப் பரீட்சை (SLAS)யில் இதுவரை பலர் சித்தியடைந்து அமைச்சுகளில் செயலாளர்,மேலதிக செயலாளர், சிரேஷ்ட உதவிச் செயலாளர், திணைக்களங்களது பணிப்பாளர்கள் போன்ற பதவிகளோடு சேர்த்து பிரதேச செயலாளர்களாகவும் கடமை புரிகின்றனர். கடல்கடந்த சேவை பரீட்சை (SLOS)யில் நளீமீக்கள் சித்தியடைந்து வெளிநாட்டு தூதுவராலயங்களில் உயர் பதவிகளை வகிக்கிறார்கள். சிலர் நீதிபதிகளாக இருப்பதுடன் கணிசமான தொகையினர் சட்டதரணிகளாக செயற்படுகின்றனர்.
நளீமீக்களில் பலர், கணிசமான தொகை நூல்களையும் மொழிபெயர்ப்புக்களையும், பொதுவான ஆக்கங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளனர். ஆங்கிலம், அரபு, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் அவர்களால் எழுதப்பட்டுள்ளன. கடந்த ஐந்து தசாப்தங்களாக அவர்களால் எழுதப்பட்ட ஆக்கங்களை மதிப்பீடு செய்கையில் அவை சமநிலையான சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அறிவியல் பங்களிப்புகளாக அமைந்துள்ளதை அவதானிக்கலாம்.
தேசிய ரீதியாக இயங்கும் அமைப்புக்களிலும் ஊர் மட்டங்களில் உள்ள கல்வி, பொருளாதார, சமூக மேம்பாட்டு அமைப்புகளிலும் அவர்கள் பிரதான பதவிகளை வகிக்கின்றனர். சிலர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் வளவாளர்களாகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாகவும் உள்ளனர். தனியார், அரச வானொலிகள், தொலக்காட்சிகளில் பலர் நிகழ்ச்சிகளை செய்து வருகிறார்கள். பலர் கிரமமாகவும் அவ்வப்போதும் குத்பாக்களை நிகழ்த்துகின்றனர்.
1996 ஆம் ஆண்டு முதல் ‘றாபிததுன் நளீமிய்யீன்’ எனப்படும் பழைய மாணவர் அமைப்பு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல கிளைகளைக் கொண்டு இயங்குகிறது. நளீமிய்யாவுக்குப் பங்களிப்பு செய்தல், நளீமீக்களின் ஐக்கியத்திற்காக உழைத்தல், இஸ்லாமிய பிரச்சாரத்திற்கு பங்களிப்பு செய்தல் ஆகிய மூன்று இலக்குகளையும் அது கொண்டிருக்கிறது.
தனித்துவமான சிந்தனைப் போக்கு
ஜாமிஆ நளீமிய்யாவின் இலக்கு தெளிவானது. அல்லாஹ் மனித சமூகத்துக்குத் தந்த இஸ்லாத்தை அங்க சம்பூரணமான வாழ்க்கைத் திட்டமாக, நாகரிகமாக, மனித சமூகம் நவீன காலத்தில் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்குமான தீர்வாக முன்வைக்கின்ற, இஸ்லாமிய கலாஞானங்களையும் நவீன கலைகளையும் கற்ற, இஸ்லாம் தற்காலத்தில் எதிர் நோக்கும் அறைகூவல்களை அறிவுபூர்வமாக எதிர்கொள்ளும் திராணி படைத்த, சமநிலை ஆளுமையும், திறமைகளும், இறையச்சமும், தூர நோக்கும், அழகிய பண்பாடுகளும், சமயோசிதமும், அறிவுப் பின்புலமும் கொண்ட, சமூத்திற்கு அறிவுத் தலைமைத்துவத்தை வழங்கும் ஒரு பரம்பரையை உருவாக்குவதே அந்த இலக்காகும்.
இலங்கை முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருப்பதால் அவர்கள் தமது இஸ்லாமிய தனித்துவங்களைப் பேணி வாழ்வதோடு பிற சமுதாயங்களோடு சமாதான சகவாழ்வை மேற்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். ஆழமான ஈமானைக் கொண்ட, அறிவு பூர்வமான, இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட, எவ்வித தீவிரங்களும் அற்ற, நடுநிலையான சமுதாயமாக மிளிர வேண்டும். அத்தகைய ஒரு சமூக அமைப்பை கட்டியெழுப்பும் பாரிய பொறுப்ைபச் சுமந்தவர்களாக தியாக சிந்தையுடன் அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே இலக்காகக் கொண்டு வாழும் புத்திஜீவிகளை உருவாக்கும் வகையிலேயே ஜாமிஆவின் கலைத்திட்டம் அமைந்திருக்கிறது.
நிறுவனம் இது வரை கண்ட எல்லா சாதனைகளுக்கும் அல்லாஹ்வின் அருள் தான் பிரதான காரணமாகும். அல்ஹம்துலில்லாஹ்.இந்நிறுவனத்தை உருவாக்கி, கட்டிக் காத்தவர்கள், தற்போதும் அதனை தமது தோள்களில் சுமந்திருப்பவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் மேலான கூலிகளை வழங்குவானாக!- Vidivelli