(எம்.எப்.அய்னா)
கொழும்பு -கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189ஆவது வருடாந்த உற்சவத்தை மையப்படுத்தி நடாத்தப்படும் சமய அனுஷ்டானங்களின் போது சந்தேகத்துக்கிடமான முறையில் நுழைந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் இம்தியாஸ் மொஹம்மட் நெளபர் எனும் 46 வயது நபர் தொடர்பிலேயே இந்த தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நபர் கரையோர பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, தேசிய உளவுச் சேவை, பொலிஸ் உளவுச் சேவையான பொலிஸ் விஷேட பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிடமிருந்து, கைது செய்யப்பட்ட குறித்த நபர் தொடர்பில் அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.
அந்த அறிக்கைகளை மையப்படுத்தி மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
சந்தேக நபரின் தோற்றத்தை மையப்படுத்திய சந்தேகத்தில், இந்த சந்தேக நபர் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட போதே நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.
பாதுகாப்பு அதிகாரிகள் முன்னெடுத்த பரிசோதனைகளின் போது சந்தேக நபர், அன்டனி டெனட் எனும் பெயரிலான அடையாள அட்டை ஒன்றினை காண்பித்துள்ளார். எனினும் சந்தேக நபரை சோதனை செய்தபோது அவரிடம் இருந்து, கிராம சேவகர் ஒருவர் உறுதிப்படுத்திய தற்காலிக அடையாள அட்டைக்கான ஆவணம் மீட்கப்பட்டுள்ளது. அதில் சந்தேக நபரின் பெயர் இம்தியாஸ் மொஹம்மட் நெளபர் எனவும் வயது 46 எனவும் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.
இது தொடர்பில் சந்தேக நபரை விசாரணை செய்தபோது, தான் திருமணமாகி மாத்தளை -அகலவத்தை – விகாரை மாவத்தையில் வசிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தனது தாய், மட்டக்குளிய -பர்கியூஷன் வீதியில் வசிப்பதாகவும், தனது தாய் முஸ்லிமாக இருந்த போதும் தந்தை ஜோன்சன் ராஜா எனவும் சந்தேக நபரின் வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தான் சிறுவயதாக இருக்கும் போதே தந்தை இறந்துவிட்டதாகவும், அதன் பின்னர் தனது தாயார் முஸ்லிம் ஒருவரை 2 ஆவதாக திருமணம் செய்ததாகவும் அவர் பொலிஸ் விசாரணையில் குறிப்பிட்டுள்ளார். அந்த 2ஆவது மணத்தின் பின்னரேயே தனது பெயர் மொஹம்மட் நெளபர் என மாற்றப்பட்டதாக சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார். திருமணத்தின் பின்னர் தான் மனைவி, பிள்ளைகளுடன் மாத்தளை – அகலவத்த பகுதியில் வசித்ததாக சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபர் தொடர்பில் கரையோர பொலிஸார் மாத்தளை பொலிஸாரிடம் வினவியுள்ளனர். இதன்போது சந்தேக நபருக்கு எதிராக மாத்தளை நீதிவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவொன்று இருப்பது தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதிக மது பாவனைக்கு அடிமையானவராக அறியப்படும் சந்தேக நபர், அதனால் புனர்வாழ்வுக்கும் உட்படுத்தப்பட்டவர் என பொலிஸார் தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர். மதுபானம் அருந்திவிட்டு சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதால், மனைவியும் அவரை பிரிந்து வாழ்வதாக பொலிஸ் தரப்பு கூறுகின்றது.
இவ்வாறான பின்னணியிலேயே, சந்தேக நபர் மட்டக்குளியிலுள்ள தாயின் வீட்டிலிருந்து பஸ் வண்டியில், கிராண்பாஸ் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றினை நோக்கி தான் பயணித்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது கொச்சிக்கடை தேவாலயத்தில் தேவ ஆராதனைகள் தனக்கு கேட்டதாகவும், அப்போது தனது தந்தை ஞாபகத்துக்கு வரவே பஸ்ஸிலிருந்து இறங்கி தேவாலயம் உள்ளே சென்றபோது கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே கைது செய்யப்பட்ட குறித்த நபரின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடமாக இருக்கும் நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.- Vidivelli