என்.எம். அமீன்,
ஏற்பாட்டாளர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்
தமிழ் பேசும் உலகில் புகழ் பூத்த கலைஞராகப் பெயர் பெற்ற கவிஞர் கலைவாதி கலீல் அவர்கள் கடந்த ஒன்பதாம் திகதி பாணந்துறை எழுவிலயில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
மன்னாரின் புகழுக்குரிய நொத்தாரிசு குடும்பத்தில் மதாறுமொஹிதீன் மீரா உம்மா தம்பதிகளின் மகனாக முஹம்மத் கலீல், கலைவாதி கலீல் என்றே பிரசித்தமானார்.
ஆசிரியராக, விரிவுரையாளராக, ஊடகவியலாளராக, கவிஞராக, சித்திரக் கலைஞராக, வானொலிக் கலைஞராக ஆறு தசாப்தங்களுக்கு மேலாக ஓயாது பணிபுரிந்து தனது 80 ஆவது வயதில் அவர் காலமானார்.
கலைவாதிக்கு கடந்த நவம்பர் இரண்டாம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தேறிய பின்பும் வழமைபோன்று இலக்கிய, சமூகப் பணிகளிலே ஈடுபட்டு வந்தார். கடந்த 9ஆம் திகதி காலை மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு அவர் வீட்டிலே தனது குடும்பத்தவர் சூழ இவ்வுலகைப் பிரிந்தார்.
இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் கொழும்பில் முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் தலைமையகத்தில் இடம்பெற்ற மூத்த எழுத்தாளர் மானா மக்கீனின் பிறந்த தினம் மற்றும் நூருல்ஐன் நஜ்முல் ஹுஸைன் எழுதிய நூல் வெளியீட்டில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்டார். இதுவே அவர் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியாகும். அவர் அங்கு ஆற்றிய உரையை யாழ். அஸீம் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் ஆற்றிய உரையை அவருடைய பிரியா விடை உரை இன்றே குறிப்பிடலாம்.
பன்முக ஆளுமை மிகு கலைவாதி வடக்கிலிருந்து 1990 முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபின் மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்து பாணந்துறை எழுவில என்ற முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்தார்.
தனது பள்ளிப் பருவ காலத்திலே அதாவது 1956ஆம் ஆண்டில் ‘லட்டு’ என்ற மாசிகையில் ‘மறைந்த இருள்’ எனும் மகுடத்தில் இவரது முதல் ஆக்கம் வெளியானது. அன்று முதல் சிற்பக்கலை, கரும்பு, கலைக்கடல், செய்தி, மக்கள், தினகரன், வீரகேசரி, தினக்குரல், மல்லிகை, ஈழநாடு, ஞானம், பாமிஸ் மாசிகை, தீப்பொறி, தொழிலாளி, தேசாபிமானி, நவமணி ஆகிய பத்திரிகைகளில் கவிதை, சிறுகதை, கட்டுரை, துணுக்கு எனப் பல்வேறு கோணங்களில் தனது எழுத்தாளுமையை பறைசாற்றியவர்.
கலைவாதியின் சகோதரர்கள் ஐந்து பேரில் மூவர் கலைஞர்களாக தமது வாழ்நாளை அர்ப்பணித்தார்கள். முதலாவது முஸ்லிம் தமிழ் அறிஞர் வித்துவான் ரகுமான், சினிமா துறையில் விருதுகளை வென்று குவித்த எம்.ஏ. கபூர், சமூக சேவையாளரும் ஊடகவியலாளருமான கலைவாதியின் இரட்டைச் சகோதரர் மக்கள் காதர் ஆகியோர் கலைவாதியைப் போன்று தமது துறைகளிலே நாடு போற்ற வாழ்ந்து வந்தார்கள்.
கலைவாதி பிரபல இடதுசாரி செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான மர்ஹூம் அப்துல் லத்தீபினால் நடத்தப்பட்ட இன்சான் என்ற முற்போக்கு பத்திரிகை மூலம் சிறுகதை மற்றும் கவிதைகளை எழுதி தனது பெயரை எழுத்துலகில் பதித்தார்.அதற்கு முன்பு பிரதேசங்களில் வெளிவந்த சிறு சிறு சஞ்சிகைகளிலே அவருடைய ஆக்கங்கள் இடம் பெற்றன.
கலைவாதியின் பணிகளை பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக் காலம், தர்கா நகர் கல்விக் கல்லூரிக் காலம், வானொலி முஸ்லிம் சேவை, தமிழ் சேவைகளில், பிற்காலம் பாமிஸ் சஞ்சிகை, நவமணி என வகுத்து ஆராயலாம்.
தர்கா நகர் கல்விக் கல்லூரியில் உப பீடாதிபதியாகப் பணிபுரிந்த இவர், அங்கிருந்து ஓய்வு பெற்ற பின் நவமணி பத்திரிகையில் பிரதி ஆசிரியர்களில் ஒருவராக இணைந்து அந்தப் பத்திரிகை மூடப்படும் வரை பணிபுரிந்தார். ஜலதரங்கம் என்ற பேரில் நடத்திய இலக்கிய பக்கம் ஜனரஞ்சகமான ஒரு பக்கமாக திகழ்ந்தது. நூற்றுக்கணக்கான இலக்கியவாதிகளை இவர் உருவாக்கியுள்ளார். இளைய தலைமுறையினருக்கு ஊடகங்களில் இடம்பெற்றுக் கொடுப்பதில் இவரது பங்களிப்பு மகத்தானது.
எழுத்தாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கலைவாதி தொடர்ந்து போராடியே வந்தார். கலாசார அமைச்சு வழங்குகின்ற கலாபூஷண விருதுக்கான பரிசுத்தொகையை அதிகரிப்பதற்கு நீண்ட காலமாக கலைவாதி குரல் கொடுத்து வந்தார். ஆரம்பத்தில் இத்தொகை 10,000 ரூபாவாக இருந்தது. சில வருடங்களுக்கு முன் இது 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வானொலியில் கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த அன்பளிப்பு தொகை நிறுத்தப்பட்டமை குறித்து தனது ஆட்சேபனையைத் தெரிவித்து வானொலி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதைத் தவிர்த்துக் கொண்டார். கொடுப்பனவு வழங்கப்படும் வரை தான் வானொலி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதில்லை என சபதம் விட்டிருந்தார். கடைசிவரை அவருடைய அந்தப் போராட்டம் வெற்றியளிக்கவில்லை. அவர் தன்னுடைய சபதத்தை நிறைவேற்றி வந்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஆரம்பகால அங்கத்தவராக இருந்த இவர், இறக்கும் வரை அதிலே பல பதவிகளை வகித்தார். கடைசியாக இறக்கும்போது அவர் அதன் உபதலைவராகப் பணிபுரிந்தார்.
மீடியா போரம் நடத்திய சுமார் 74 ஊடகக் கருத்தரங்குகளில் 72 கருத்தரங்குகளில் இவர் மொழி தொடர்பான வளவாளராகப் பணி பரிந்தார்.
இக்கருத்தரங்குகளில் கலைவாதியின் கருத்தரங்கு பகற் போசனத்தின் பிறகே! தூக்கம் வராத வகையில் அவருடைய விரிவுரைகள் அமைவதனால் அந்த நேரம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். கலைவாதிக்கு இருந்த பிரத்யேக ஆற்றல் இதுவாகும்.
தமிழ் பிழைகள் எங்கு ஏற்பட்டாலும் அதனைச் சுட்டிக்காட்டுவதற்கும் தட்டிக் கேட்பதற்கும் தயங்க மாட்டார். இலத்திரனியல் அறிவிப்பாளர்கள் விடும் தவறுகளை உன்னிப்பாகவே அவதானித்து அதனைச் சுட்டிக் காட்டுவதற்கு தயங்கவே மாட்டார். கலைவாதி ஒரு சித்திரக் கலைஞரும் கூட. நாட்டில் பாடசாலைகளில் இயக்கங்களில் வெளிவந்திருக்கின்ற அநேக சஞ்சிகைகளின் அட்டைப் படங்கள் கலைவாதியினால் வரையப்பட்டதாக இருக்கின்றது குறிப்பிடத்தக்கது
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் அவல நிலையை பகிரங்கப்படுத்துவதற்கு கலைவாதி கடைசி வரை தனது பேனாவைப் பயன்படுத்தினார். வடபுல முஸ்லிம்களின் மேற்கூறிய சவால்களில் ஒன்றான வில்பத்து குறித்து நூல் ஒன்றை வெளியிட்டார்.
வில்பத்துவில் இயங்கிய முஸ்லிம் பாடசாலையில் ஆரம்பத்தில் ஆசிரியராக இருந்த கலைவாதி வில்பத்துவுக்கு இனவாதிகள் விடுத்த சவால்களுக்கு தான் அங்கிருந்ததனை உதாரணம் காட்டினார்.
முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் தேசிய ஊடகங்கள் உருவாக வேண்டும் என்பதற்கு கலைவாதி உறுதியாக செயற்பட்டார்.
நவமணி நாளிதழாக வந்த போது அவர் அடைந்த சந்தோசத்தை என்னால் அவதானிக்க முடிந்தது. நவமணி ஆசிரியர் பீடத்தில் என்னோடு மிகவும் ஒத்துழைத்தார், ஆசிரியர் தலையங்கங்களில் அவர் தனது கருத்துக்களை வெளியிட்டார்.
1958 ஆம் ஆண்டில் ‘கலைக்கடல்’ சஞ்சிகையிலும் மற்றும் அவரது சகோதரர் மக்கள் காதர் நடத்திய ‘மக்கள்’ (1965) சஞ்சிகையிலும் அடுத்து ‘நவமணி’ப் பத்திரிகையிலும் ஆசிரியர் பீடத்தில் தடம் பதித்திருப்பவர்.
அந்த நாட்களில் புரட்சிக் கவிஞன் கே! என்ற புனைப்பெயரில் நன்கு பரீச்சயமானவர்தான் கலைவாதி. இவைகளோடு புரட்சிதாசன், மன்னிநகர் கலீல், சர்தார், மன்னாரான், தீட்சண்யன், பஸீரா மணாளன் எனப் பல புனைப் பெயர்களில் வலம் வந்த வித்துவான்.
‘புரட்சிக்கவிஞன் கே!’ என்ற பெயரில் கவிதைகளையும், ‘மன்னீ நகர்கலீல்’ என்ற பெயரில் சிறுகதைகளையும் ‘மன்னாரான்’ என்ற பெயரில் செய்திகளையும் ‘புரட்சிதாசன்’ என்ற பெயரில் கட்டுரைகளையும் ‘சர்தார்’ என்ற பெயரில் பேனாசித்திரங்களையும் வரைந்தும் எழுதியும் இன்ஸான் பண்ணையின் மூலம் ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.
“இன்ஸான் பண்ணையில் வளர்ந்தவன் நான்” என மார்தட்டிச் சொல்லுவதில் பெருமிதம் கொண்டார்.
எழுத்துத்துறை மாத்திரமல்லாது, அவர் இலத்திரனியல் துறையிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தியிருக்கிறார். இந்தவகையில் இருபத்தைந்து வருடத்துக்கும் மேற்பட்டது அவரது வானொலி வாழ்க்கை. வானொலியில் பங்கு கொண்டு சேவை ஒன்று, இரண்டு, முஸ்லிம் சேவை, கல்விச் சேவை, விளையாட்டுச் சேவை போன்ற வானொலிச்சேவைகளில் இலக்கிய மஞ்சரி, சதுரச் சங்கமம் (குறுக்கெழுத்துப் போட்டி), இலக்கியக் களஞ்சியம், நூல் உலா, கதை கேளீர் (சிறுகதை கூறும் நிகழ்ச்சி), தொடர் கவியரங்குகள், கவிதை எழுதுவோம் வாரீர் மாணவர் மன்றம், (குட்டிக்கதைகள்) பிஞ்சு மனம் – (ஆமீனா பேகம்), ‘மணமேடையில் ஒரு நாடகம்’ – தொடர் நாடகம், மாதர் மஜ்லிஸ் என நிகழ்ச்சிகளை தயாரித்திருக்கிறார். ஏன் இசையும் கதையும் கூட எழுதியிருக்கிறார். சாதித்திருக்கிறார்.
இவை மட்டுமல்ல, சொற்பொழிவு, சிறப்புரைகள், உரைச்சித்திரம், தொலைக்காட்சிப் பிரதிகள் எழுதுதல் -தயாரித்தல் – நடித்தல், மேடை நாடகம் – பிரதி – நடிப்பு – நெறியாள்கை, கவிரயங்குகளிற் பங்கு கொள்ளல் -தயாரித்தல் – தலைமை வகித்தல், ஓவியம் வரைதல் – பத்திரிகைகளுக்கு வரைதல், முகப் போவியங்கள் வரைதல், சுவரோவியங்கள் மற்றும் ‘பெனர்’ வரைதல், நூல் எழுதுதல் -அச்சிடல் -வெளியிடல் போன்றவற்றிலும் தனது பங்களிப்பை வழங்கத் தவறவில்லை.
கலை, இலக்கியம் இரண்டும் கலைவாதியின் இரு கண்கள் எனலாம்.
உலகை மாற்றிய உத்தமர் (இயல் இசைச் சித்திரம்), ஒரு வெள்ளி ரூபாய் (சிறுகதைத் தொகுதி), கருவறையிலிருந்து கல்லறைக்கு (புதுக்கவிதைகள்), றோனியோக்கள் வாழுமா? (ஆய்வு நூல்), ஓ! பலஸ்தீனமே (பலஸ்தீனப் போர்க் கவிதைகள்), வவுனியா முஸ்லிம்களின் வரலாறு, எனது வில்பத்து டயறி, மன்னார் முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும் என்பவை அவர் எழுதிய நூற்களாகும்.
வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்களில் ஒன்றான “வில்பத்து” குறித்து ஒரு நூலையே ஆக்குமளவுக்கு கலைவாதி கலீலின் ஆளுமைகள் இருந்தன.
இவர் எழுதிய சிறுகதைத்தொகுதியில் பிரசுரமான ஒரு வெள்ளி ரூபாய், மையித்து, சகோதரத்துவம், வர்க்கம், நோன்புக் கஞ்சி , வண்டு, எனக்கு நானே எல்லாம், இன்னும் மனிதர்கள் இருக்கிறார்களா?, யாருக்குப் பெருநாள், ஓடப்போறேன், புதிய அலை போன்ற கதைகள் சிலாகித்து கூறத்தக்கவை.
இவரது கதைகள் மொழிமாற்றம் செய்யப்பட்டு பல சிங்கள நாளேடுகளில் பிரசுரமாகியுள்ளதோடு, அனைத்துலக இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாட்டு மலரிலும் இடம்பெற்றுள்ளது. ஏழைச்சிறுமி றிஸானா நபீக் சவூதியில் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டதை ஒரு சிறுகதையாக வடித்திருந்தார். அது ‘விடிவெள்ளி’ வார இதழில் பிரசுரமானது. பின்னர் Daily News நாளோட்டில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. இவ்வாறு ‘றிஸானா’ சிறுகதை பல மொழிகளில் பெயர்க்கப்பட்டு, 7 தடவைகள் பிரசுரமானமை குறிப்பிடத்தக்கது.
கலைவாதிக்கு தெரியாத ஒரு கலை இல்லை எனலாம். தீடீரெனப் பாடுவார். அவர் ஒரு பாடகரும் கூட. இது பலருக்குத் தெரியாது.
கலைவாதி (மன்னார்), பல்கலைக்குரிசில் (-அடம்பன் மன்னார்), தீந்தமிழ்ச் செல்வன் (அட்டாளைச்சேனை நூலகம்), பல்கலைவேந்தன் தாஜுல் உலூம், (முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு 1991), கலாபூஷணம் 1999 -(துறந்தது), கலாபூஷணம் (2002) , இலக்கியவாருதி -(காத்தான்குடி நவ இலக்கிய மன்றம்), தேசமான்ய – (கொழும்பு) போன்ற பட்டங்களை தனதாக்கிக் கொண்ட கலைவாதி, உலக கவிஞர் தினத்தையாட்டி 2015ஆம் ஆண்டு கலாசார அமைச்சு முதற்தடவையாக முதுகவிஞர்களுக்கு ‘காவ்யாபிமானி’ என்ற பட்டம் வழங்கியது. பின்னர் வழங்கப்படவில்லை. அவ்வாறு ‘காவ்யாபிமானி’ பட்டம் பெற்ற ஒரேயொரு முஸ்லிம் கவிஞர் கலைவாதி மட்டுமே என்பது சிலாகிக்கத்தக்கது.
சமூகத்துக்காக, கலைக்காக என்று முற்று முழுதான பணியாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த பல்துறை ஆளுமையை இன்று இழந்திருக்கின்றோம்.
அவரது இழப்பு இலக்கியத்திற்கு மட்டுமல்ல, கல்விச் சமூகத்திற்கும் பேரிழப்பு.
1950 முதல் 2023 வரை கலைத்துறையில் சளைக்காமல் பணிபுரிந்த கலைவாதி ஒரு சிறந்த குடும்பத் தலைவராவார்.
4 பிள்ளைகளின் தந்தையான இவர், உம்மு வஸீரா என்ற தன் கிராமத்தின் பெண்மணியை மணந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு ஆரிப், நஸ்வா, ரம்ஸான், சிபானி என்ற நான்கு பிள்ளைகள் இருக்கின்றார்கள். இவர்களில் இருவர் ஆண்கள். சிபானி என்கின்ற மனைவியின் சகோதரியின் பிள்ளையை அவர் வளர்ப்பு மகளாகத் தத்தெடுத்துள்ளார்.
தனது குடும்பத்தை கட்டி எழுப்புவதை பல சவால்களுக்கு மத்தியில் கலைவாதி வெற்றி கண்டார். எல்லோருக்கும் திருமணம் செய்து தொழில்கள் செய்து வருகின்றார்கள். கலைவாதி ஒரு தந்தை என்ற வகையிலும் தனது கடமையில் வெற்றி கண்டிருக்கிறார்.
அன்னாரின் பாவங்களை மன்னித்து அன்னாருடைய மறுமை வாழ்வு சிறப்பாக அமைய எல்லோரும் பிரார்த்திப்போமாக! -Vidivelli