இந்தியாவை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து

0 283

ஏ.ஆர்.ஏ.பரீல்

“2ஆம் திகதி இரவு திடீ­ரென ஒரு பயங்­கர சத்தம். ரயில் பெட்­டிகள் சரியத் தொடங்­கி­யது. என்ன நடக்­கி­றது என நினைத்­துக்­கூட பார்க்க முடி­ய­வில்லை.10 வினாடிகளில் அனைத்தும் முடிந்து ஓய்ந்­தது. அதிர்ச்­சியில் நான் நிலை தடு­மா­றி­விட்டேன்” என சென்­னையை அடுத்த பூந்­த­மல்லி பகு­தியைச் சேர்ந்த முருகன் (38) என்­பவர் தெரி­வித்தார். அவர் ரயில் விபத்தின் அதிர்ச்­சியில் இருந்தும் மீண்­டி­ருக்­க­வில்லை. இவர் ஒரு பொறியியலாளர். அமெ­ரிக்­காவில் பணி­யாற்றி வரு­கிறார். தனது விசா தொடர்­பாக கல்­கத்தா சென்று அங்கு அப்­ப­ணி­யினை பூர்த்தி செய்து விட்டு சென்­னைக்கு வரு­வ­தற்­காக ஒடி­சாவில் விபத்தில் சிக்­கிய கோர­மண்டல் எக்ஸ்­பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். இவர் அதிர்ஷ்­ட­வ­ச­மாக காயம் எது­வு­மின்றி உயிர் தப்­பி­யுள்ளார்.

அவர் தொடர்ந்தும் விபத்து தொடர்பில் விப­ரிக்­கையில், ‘ரயில் பெட்­டியில் இருந்த அனை­வரும் அலறி அடித்து அங்கும் இங்­கு­மாக பதறி ஓடி­னார்கள். நான் இருந்த பெட்­டியில் இருந்து வெளி­யேற வழி இல்­லா­ததால் ஜன்னல் வழி­யாக நாங்கள் வெளியே வந்தோம்.

விபத்தில் ரயில் பெட்டி உருண்­ட­போது ஜன்னல் கம்­பியைப் பிடித்துக் கொண்­டதால் காயம் ஏது­மின்றி உயிர் தப்­பினேன். அநேகர் உடல் சிதறி உயி­ரி­ழந்து கிடந்­தனர். பின்னர் அங்­கி­ருந்து ஒரு சில தமி­ழர்­க­ளுடன் சேர்ந்து அருகே உள்ள வீதிக்குச் சென்று பஸ் மூலம் புவ­னேஸ்­வரம் சென்று அங்­கி­ருந்து விமானம் மூலம் பெங்­களூர் சென்றேன். பெங்­க­ளூ­ரி­லி­ருந்து பஸ் மூலம் சென்னை வந்து சேர்ந்தேன்’ என்றார்.

இந்­தி­யாவின் ஒடிசா மாநி­லத்தில் கடந்த இரண்டாம் திகதி இரவு இடம் பெற்ற கோர ரயில் விபத்து சர்­வ­தே­சத்­தையே அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. கவ­லை­ய­டையச் செய்­துள்­ளது. ஒடிசா மாநி­லத்தின் பாலசோர் பகு­தியில் கடந்த இரண்டாம் திகதி இரவு 6.50 மணிக்கும் 7.00 மணிக்கும் இடையில் இந்த அனர்த்தம் இடம் பெற்­றுள்­ளது.

இவ்­வி­பத்தில் 288 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 1175 பேர் காய­ம­டைந்­து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இவர்களில் 900 பேர் சிகிச்சையின் பின்பு வெளியேறியுள்ளதாகவும் புள்ளி விப­ரங்கள் தெரி­விக்­கின்­றன.
உயிரிழந்தவர்களில் 205 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 83 பேரின் சடலங்கள் அடையாளம் காணமுடியாதளவு உருக்குலைந்துள்ளன.

இந்­திய ரயில்வே திணைக்­க­ளத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் அமிதாப் சர்மா இவ் அனர்த்தம் பற்றி ஏஎப்பி செய்திச் சேவை­யிடம் தெரி­விக்­கையில், ‘இரண்டு ரயில்கள் இவ்­வி­பத்தில் தொடர்­பு­பட்­டுள்­ளன. அத்­தோடு அருகில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த சரக்கு ரயி­லொன்றும் இவ்­வி­பத்தில் சிக்­கி­யுள்­ளது என உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இந்­திய ஊட­கங்­களின் தக­வல்­க­ளின்­படி சென்னை சென்ட்ரல் கோர மண்டல் எக்ஸ்­பிரஸ் ஷாலிமார் நக­ரி­லி­ருந்து புறப்­பட்டு அதி­வே­க­மாக வந்து கொண்­டி­ருந்த நிலையில் ஒடிசா மாநி­லத்தின் பலசோர் நக­ரை­ய­டுத்து பாஹா­நாகா பஸார் ரயில் நிலையம் அருகே தடம்­பு­ரண்­டது. தடம்­பு­ரண்­ட­போது அவற்றின் சில பெட்­டிகள் அரு­கி­லுள்ள தண்­ட­வா­ளங்­க­ளிலும் வீழ்ந்­தன. இத­னை­ய­டுத்து அந்த ரயில் பெட்­டிகள் அரு­கி­லுள்ள தண்­ட­வா­ளத்தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த சரக்கு ரயி­லு­டனும் மோதின. இவ்­வாறு தடம் புரண்டு வீழ்ந்து கிடந்த ரயில் பெட்­டிகள் மீது எதிர்த்­தி­சையில் வந்து கொண்­டி­ருந்த யஷ்­வந்த்பூர் – ஹவுரா கடு­கதி ரயில் மோதி­யுள்­ளது.

இவ்­வி­பத்து இடம் பெற்­றதும் உட­ன­டி­யாக சம்­பவ இடத்­துக்கு நூற்­றுக்­க­ணக்­கான பொலி­ஸாரும் ரயில்வே அதி­கா­ரி­களும் மீட்புப் படை­யி­னரும் தீய­ணைப்­புப்­ப­டை­யி­னரும் அரு­கி­லுள்ள ரயில்வே மீட்­புப்­ப­டை­யி­னரும் வர­வ­ழைக்­கப்­பட்­டனர்.

கவிழ்ந்­தி­ருந்த ரயில் பெட்­டி­களை நிமிர்த்தி மீட்புப் பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக கிரேன்கள் கொண்­டு­வ­ரப்­பட்­டன. 200க்கும் அதி­க­மான அம்­பி­யு­லன்ஸ்கள், நூற்­றுக்­க­ணக்­கான டாக்­டர்கள், தாதிகள் மற்றும் தன்­னார்வ தொண்­டர்கள் அவ்­வி­டத்­துக்கு உட­ன­டி­யாக அனுப்­பப்­பட்­ட­தாக ஒடிசா மாநில பிர­தம செய­லாளர் பிரதீப் ஜெனா தெரி­வித்­துள்ளார்.

விபத்­துக்­குள்­ளான இரு பய­ணிகள் ரயில்­க­ளிலும் மொத்­த­மாக 2296 பேர் முன்­ப­திவு செய்து பயணம் மேற்­கொண்­டுள்­ள­தாக ரயில்வே திணைக்­களம் உறு­தி­செய்­துள்­ளது. கோர­மண்டல் எக்ஸ்­பிரஸ் ரயிலில் 1257 பேரும், யஸ்­வந்த்பூர் எக்ஸ்­பிரஸ் ரயிலில் 1039 பேரும் முன்­ப­திவு செய்து பயணம் மேற்­கொண்­டுள்­ளமை உறு­தி­யா­கி­யுள்­ளது.

இழப்­பீட்­டுக்கு ஏற்­பாடு
இந்­தக்­கோர விபத்தில் உயி­ரி­ழந்த ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் குடும்­பத்­தி­ன­ருக்கு இந்­திய ரயில்வே திணைக்­களம் இழப்­பீ­டாக 10 இலட்சம் இந்­திய ரூபா வழங்­கு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளது. அத்­தோடு கடும் காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு 2 இலட்சம் ரூபாவும், சிறு­கா­ய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு 50ஆயிரம் ரூபாவும் இழப்­பீ­டாக வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

அத்­தோடு இந்த விபத்து தொடர்பில் ஆய்வு மேற்­கொள்­வ­தற்­காக கூட்­ட­மொன்­றினை இந்­தியப் பிர­தமர் மோடி புது­டில்­லியில் நடத்­தினார். மேலும் அவர் சம்­பவம் நடந்த இடத்­திற்கு கடந்த மூன்றாம் திகதி நேரில் விஜயம் செய்து பார்­வை­யிட்டார். வைத்­தி­ய­சா­லையில் காயங்­க­ளுடன் சிகிச்சை பெற்று வரு­ப­வர்­க­ளையும் நேரில் சந்­தித்து ஆறுதல் கூறினார்.

விபத்தில் உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கு 2 இலட்சம் ரூபாவும், காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு ஒரு இலட்சம் ரூபாவும், பிர­த­மரின் தேசிய நிவா­ரண நிதி­யி­லி­ருந்து வழங்­கப்­படும் என பிர­தமர் நரேந்­திர மோடி அறி­வித்தார்.

முத­ல­மைச்­சர்கள் கலந்­து­ரை­யாடல்
ரயில் விபத்து தொடர்பில் அறிந்­து­கொண்­டதும் தமி­ழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒடிசா முதல்வர் நவீன் பட்­நா­யக்கைத் தொடர்பு கொண்டு கலந்­து­ரை­யா­டினார். முத­ல­மைச்சர் ஸ்டாலினின் உத்­த­ரவின் பேரில் தமி­ழக அமைச்­சர்கள் சிவ­சங்கர், உதய நிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் மற்றும் அரச உயர் அதி­கா­ரிகள் ஒடி­சா­வுக்கு சென்று விபத்து நடந்த ஸ்தலத்தைப் பார்­வை­யிட்­டனர்.

உயி­ரி­ழந்­த­வர்­களில் தமி­ழ­கத்தைச் சேர்ந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்குத் தலா 5 இலட்சம் ரூபாவும், படு­கா­ய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு ஒரு இலட்சம் ரூபாவும் இழப்­பீ­டாக வழங்­கப்­படும் என தமி­ழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறி­வித்­துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்­ஜியும் விபத்து நடந்த இடத்­துக்கு நேரடி விஜயம் மேற்­கொண்டு பார்­வை­யிட்டார். பின்பு அவர் அங்கு செய்­தி­யா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதில் வழங்­கினார்.

‘உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு ரயில்வே திணைக்­களம் மூலம்10 இலட்சம் ரூபா இழப்­பீ­டாக வழங்கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இதே­வேளை மேற்கு வங்­கத்தைச் சேர்ந்த உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு வங்­க­மா­நில அரசு 5 இலட்சம் ரூபா இழப்­பீ­டாக வழங்கும்’ என அவர் தெரி­வித்தார்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்­நாயக் பாதிக்­கப்­பட்ட மக்­களை வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று நேரில் சந்­தித்து ஆறுதல் வழங்­கினார். அவர் அங்கு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் கருத்து தெரி­விக்­கையில், ‘கடந்த 20 ஆண்டு காலத்தில் இடம் பெற்ற ரயில்வே விபத்­து­களில் மிகவும் மோச­மான விபத்து இது­வாகும். இது மிகவும் துய­ர­மா­னது. விபத்து இடம்­பெற்­றதும் உட­ன­டி­யாக ஒன்று திரண்டு இரவு முழு­வதும் மக்கள் மீட்புப் பணி­களில் ஈடு­பட்­டுள்­ளனர். இவ்­வாறு செயற்­பட்ட ஊர் மக்­க­ளுக்கும், குழுக்­க­ளுக்கும் நான் நன்­றி­களைத் தெரி­வித்­துக்­கொள்­கிறேன். ரயில் பய­ணி­களின் பாது­காப்­புக்கு எப்­போதும் முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்டும்’ என்றார்.

மோச­மான ரயில் விபத்து
உயி­ரி­ழப்­பு­களின் அடிப்­ப­டையில் அவ்­வி­பத்­தினை நோக்­கும்­போது இந்­தி­யாவில் நடந்த ரயில் விபத்­து­களில் இது மிகவும் மோச­மான மூன்­றா­வது விபத்­தாகும்.
1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் திகதி பீஹார் மாநி­லத்தின் சஹர்சா நகரின் அருகே பாக்­மதி ஆற்றில் பய­ணிகள் ரயில் வீழ்ந்­ததால் சுமார் 800 பேர் உயி­ரி­ழந்­தனர். இதுவே இந்­தி­யாவின் மிக­மோ­ச­மான அதிக உயிர்­களைக் காவு­கொண்ட ரயில் விபத்­தாகும்.

1995 ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி உத்­தர பிர­தே­சத்தில் பிரோ­சாபாத் அருகே காளிந்தி எக்ஸ்­பிரஸ் மீது புரு­ஷோத்தம் எக்ஸ்­பிரஸ் மோதி­யதில் 358 பேர் உயி­ழந்­தனர்.
1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி மேற்-கு வங்க மாநி­லத்தின் கெய்சால் நகரில் பிரம்­ம­புத்ரா ரயில் மீது ஆவாத் அசாம் கடு­கதி ரயில் மோதி­யதில் 285 பேர் உயி­ரி­ழந்­தனர்.

விபத்­துக்கான கார­ணங்கள் என்ன?
ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்­புப்­ப­ணி­களை ரயில்வே அமைச்சர் அஷ்­வினி வைஷ்ணவ் கடந்த 4 ஆம் திகதி ஆய்வு செய்தார். அங்கு அவர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில், ‘இந்த கோர ரயில் விபத்து குறித்த விசா­ர­ணைகள் முடி­வ­டைந்­து­விட்­டது. ரயில்வே பாது­காப்பு ஆணை­யாளர் விரைவில் அறிக்­கையைச் சமர்ப்­பிப்பார். விபத்­துக்குக் காரணம் என்ன? அதில் யாருக்கு பங்கு? என்­பதைக் கண்­ட­றிந்து விட்டோம்.

மின்­னணு இணைப்பு எனப்­படும் எலக்ட்­ரானிக் இன்டர் லாக்கிங் என்ற தொழில்­நுட்ப கோளாறு கார­ண­மாக இந்த விபத்து நடந்­துள்­ளது. அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்ட பின்பு முழு­மை­யான தக­வல்கள் வெளி­யாகும். எலக்ட்­ரானிக் இன்­டர்­லாக்கிங் சிக்னல் அமைப்பு கணினி வாயி­லாக மாற்­றத்­தக்­கது. இந்த நவீன தொழில் நுட்­பத்தில் ஏற்­பட்ட கோளாறு கார­ண­மா­கவே விபத்து நடந்­துள்­ளது என்றார்.

இதே­வேளை கோர­மண்டல் எக்ஸ்­பிரஸ் ரயில் தடம் புரண்­டது எப்­படி என ரயில்வே வாரி­யத்தின் செயற்­பாடு மற்றும் வணிக மேம்­பாட்டு உறுப்­பினர் ஜெயா வர்மா தெரி­வித்தார்.

விபத்து ஏற்­பட்ட பகு­தியில் 4 ரயில் வழித்­த­டங்கள் உள்­ளன. இதில் இரண்டு பிர­தா­ன­மான ரயில் வழித்­த­டங்கள். மற்ற இரண்டும் லூப் வழித்­த­டங்கள். ரயிலை நிறுத்­த­வேண்டும் என்றால் லூப் தடத்­தில்தான் நிறுத்­துவோம். விபத்­தின்­போது இரண்டு விரைவு ரயில்­களும் ரயில் நிலை­யத்தின் வழி­யாக வெவ்­வேறு திசை­களில் சென்று கொண்­டி­ருந்­தன.

ரயில் நிலை­யங்­களைப் பொறுத்­த­வரை லூப் லைன்கள் முக்­கிய வழி­த­டங்கள் நடு­விலும் முக்­கிய வழித்­த­டங்­களின் இரு­பு­றமும் இருக்கும். விபத்து இடம்­பெற்ற அன்று இரண்டு எக்ஸ்­பிரஸ் ரயில்­க­ளுக்கு வழி­விட 2 ரயில்கள் நிறுத்­தப்­பட்­டன. அப்­போது லூப் லைனில் சரக்கு ரயில் காத்­தி­ருந்­தது என்றார்.

சி.பி.ஐ. விசா­ரணை
ரயில்­வி­பத்து குறித்து சி.பி.ஐ. விசா­ர­ணைக்கு மத்­திய ரயில்வே வாரியம் பரிந்­துரை செய்­துள்­ளது. அத்­தோடு ரயில் விபத்­துக்கு பயங்­க­ர­வா­தி­களின் சதி செயல் கார­ணமா? என்­பது குறித்தும் சி.பி.ஐ. விசா­ரணை செய்­ய­வுள்­ளது.

இந்த விபத்­துக்குப் பொறுப்­பேற்று மத்­திய அமைச்சர் அஷ்­வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என காங்­கிரஸ் உள்­ளிட்ட சில கட்­சிகள் வலி­றுத்தி வரு­கின்­றன.

விசா­ரணை கமிஷன் அமைக்க வேண்டும்
ரயில்­ வி­பத்து தொடர்பில் விசா­ரணை நடத்தி விபத்­துக்­கான உண்­மை­யான கார­ணத்தைக் கண்­ட­றிய ஓய்வு பெற்ற நீதி­பதி தலை­மையில் விசா­ரணை கமிஷன் அமைக்க வேண்டும் எனக்­கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இவ்­வி­பத்து தொடர்­பாக விஷால் திவாரி என்ற சட்­டத்­த­ரணி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல­வ­ழக்கு தொடுத்­துள்ளார்.

வழக்கில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள முக்­கிய அம்­சங்கள்
ரயில் விபத்து தொடர்­பாக ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதி­பதி தலை­மையில் விசா­ரணை கமிஷன் அமைத்து 2 மாதங்­களில் விசா­ர­ணையை நடத்தி முடிக்க மத்­திய அர­சுக்கும் ரயில்வே அமைச்­சுக்கும் உத்­த­ர­வி­ட­வேண்டும்.

விபத்­துக்­கான அடிப்­படைக் கார­ணத்தைத் கண்­ட­றிந்து அது தொடர்­பான அறிக்­கையை சுப்ரீம் கோர்ட்டில் விசா­ரணைக் கமிஷன் தாக்கல் செய்­ய­வேண்டும்.
பய­ணிகள் பாது­காப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்­வேயில் “கவாச்” என்னும் தானி­யங்கி ரயில் பாது­காப்பு அமைப்­பினை உட­ன­டி­யாக ஏற்­ப­டுத்த உத்­த­ர­விட வேண்டும் என கூறப்­பட்­டுள்­ளது.

ரயில்வே அமைச்சர்
ராஜி­னாமா செய்­ய­வேண்டும்
ரயில்வே அமைச்சர் அஷ்­வினி வைஷ்ணவ் உட­ன­டி­யாக பதவி விலக வேண்டும். பிர­தமர் சொன்னால் தான் பதவி விலகுவேன் என்று இருக்கக்கூடாது என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் மேலும் பதிவிட்டிருப்பதாவது, இப்போதுதான் எமக்குத் தெரிகிறது வேகமாகச் சென்ற அந்த ரயில் அந்த தண்டவாளத்தில் சென்றிருக்கவேண்டிய ரயிலே இல்லை. அந்த தண்டவாளமே மெதுவான ரயில்களுக்கானது.

பொருத்தமற்ற, திறமையற்ற ஒருவரை அமைச்சராக நியமிப்பதில் மோடி உலகப் புகழ் பெற்றவர். அதற்கான விலையையும் அவர் கொடுத்து இருக்கிறார் என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.–Vidivelli

Leave A Reply

Your email address will not be published.